2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்?

நம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படும். எனவே ஏராளமான மையங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும். குறிப்பாக, 2019 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதுமாக 1.13 ஏ.டி.எம். எந்திரங்களின் (தற்போதைய மொத்த எண்ணிக்கையில் இது சுமார் 50 சதவீதம்) சேவை நின்று விடலாம். இதில், வங்கி வளாகத்திற்கு அப்பால் செயல்படும் (ஆப்சைட்) ஒரு லட்சம் மையங்களும், ஏறக்குறைய 15 ஆயிரம் ஒயிட் லேபிள் ஏ.டி.எம்.களும் அடங்கும். மொத்தத்தில் இத்துறையினர் ஒரு நெருக்கடியான கட்டத்திற்கு வந்துள்ளனர். நம் நாட்டில் இப்போது 2.38 லட்சம் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மையங்களின் எண்ணிக்கை சரிபாதியாக குறைவதால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் உருவாகும். அது மட்டுமல்லாமல் அனைவருக்கும் நிதிச்சேவை கிடைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படும். கேட்மி அமைப்பின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது.

Comments