குரூப்-1 தேர்வு முறைகேடு பயிற்சி மைய இயக்குனரின் முன்ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கில் தனியார் பயிற்சி மைய இயக்குனருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுத்து விட்டது. தேர்வு முறைகேடு மதுரையை சேர்ந்தவர் ஸ்வப்னா. திருநங்கையான இவர், சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியிருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அப்பல்லோ பயிற்சி மையத்தில் படித்தவர்கள் பலர் குரூப்-1 தேர்வில் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. முன்ஜாமீன் அந்த பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரன் பெயரை குற்றவாளியாக வழக்கில் போலீசார் சேர்த்தனர். இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றார். அப்போது 8 வாரகாலத்துக்கு போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சாம் ராஜேஸ்வரனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். தள்ளுபடி அப்போது, “சாம் ராஜேஸ்வரன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அரசு வக்கீல் கூறினாலும், அதை ஏன் மனுவில் குறிப்பிடவில்லை?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், “8 வாரத்துக்குள் போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனையை சாம் ராஜேஸ்வரன் பூர்த்தி செய்துள்ளார். எனவே, அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய எந்த முகாந்தரமும் இல்லை. அதேநேரம் வருகிற 19-ந்தேதி முதல் டிசம்பர் 3-ந்தேதி வரை 10 வேலை நாட்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு சாம் ராஜேஸ்வரன் ஆஜராகவேண்டும். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Comments