You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: November 2018

Friday, November 30, 2018

2.0 திரை விமர்சனம்

ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.

இதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம்? என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.

“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்பாற்ற வேண்டும் என்றால் செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்” என்று பறவைகள் மீது அக்கறை கொண்ட பட்சிராஜன் (அக்‌ஷய்குமார்) அரசாங்கத்திடம் மனு கொடுக்கிறார். அவர் அலட்சியப்படுத்தப்படுகிறார். அவருடைய மனு குப்பைக்கு போகிறது. அக்‌ஷய்குமார் ‘செல்போன்’ டவரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

அவருடைய ஆத்மாவுடன் பறவைகளின் ஆத்மாக்கள் சேர்ந்து, அக்‌ஷய்குமாருக்கு ராட்சச பறவையின் தோற்றத்தை கொடுக்கின்றன. அந்த ராட்சச பறவை பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது. வாகனங்களை அடித்து நொறுக்குகிறது. ஊரையே காலி செய்வது போல் மிரட்டுகிறது. ராட்சச பறவையை அழிப்பதற்கு அதை விட ‘பவர்புல்’லான ஒருவரை உருவாக்க வேண்டும். (எந்திரனில் கலக்கிய) ‘சிட்டி’யை மீண்டும் உருவாக்க அனுமதி வேண்டும் என்று வசீகரன் கேட்கிறார்.

‘சிட்டி’யை மீண்டும் உருவாக்க அனுமதி கிடைக்கிறது. அவருக்கும், பட்சிராஜாவுக்கும் நடக்கும் அபாயகரமான யுத்தம், மீதி படம்.

வசீகரன், சிட்டி என ரஜினிகாந்துக்கு 2 வேடங்கள். ஒருவர் விஞ்ஞானி. மற்றொருவர், எந்திர மனிதர். வசீகரன், பெயருக்கு தகுந்தாற்போல் அழகான விஞ்ஞானி. சிட்டி, துணிச்சல் மிகுந்த அபூர்வ எந்திரன். இரண்டு வேடங்களில், அறிமுக காட்சியில் இருந்து ‘கிளைமாக்ஸ்’ வரை அமர்க்களம் செய்பவர், சிட்டிதான். அவர், அக்‌ஷய்குமாருடன் மோதுகிற காட்சிகள், படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது. சிட்டி, பஞ்ச் வசனமும் பேசுகிறார்.

“வசீகரன் கண்டுபிடிப்பில் உருப்படியான ரெண்டு விஷயம்...ஒண்ணு நான். இன்னொன்ணு நீ...இங்கே நம்பர்-1, நம்பர்-2 என்பதெல்லாம் இல்லை. எப்பவுமே சூப்பர்தான்” என்று எமிஜாக்சனிடம், சிட்டி சொல்கிற காட்சியில் தியேட்டர் அதிர்கிறது. ‘சிட்டி’யின் ஸ்டைல், ‘பாட்ஷா’வையும் தாண்டி ரசிக்கப்படுகிறது.

எமிஜாக்சன், ஹாலிவுட் நாயகிகளுக்கு சரியான சவால். அவருடைய சண்டைகளும், சாகசங்களும் வியக்க வைக்கின்றன. அக்‌ஷய்குமார், பொருத்தமான தேர்வு. பறவைகளின் வயதான ரட்சகர், பறவை உருவம் கொண்ட ராட்சசன் ஆகிய இரண்டு தோற்றங்களுக்கும் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார். பறவைகளுக்காக அவர் உருகும் இடத்திலும், “பறவைகள் இருந்தால்தான் மனிதன் வாழ முடியும்” என்பதற்கு விளக்கம் சொல்லும் காட்சியிலும், நெகிழவைத்து விடுகிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு இரண்டும் சேர்ந்த 3டி தொழில்நுட்பம், மிரட்டல். சம்பவங்கள் அனைத்தும் கண் முன்பு நடக்கிற உணர்வை நிகழ்த்தியுள்ளன. அறிவியல் சார்ந்த கதையை கம்ப்யூட்டர் யுகத்துக்கு பொருந்துகிற மாதிரி புத்திசாலித்தனமாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஷங்கர். புரியாத வசனத்துடன் வரும் ஒரு சில காட்சிகள் திருஷ்டி பரிகாரம்.

இந்திய சினிமாவில் இப்படியொரு பிரமாண்டமா என்றும், இவ்வளவு அறிவுப்பூர்வமான டைரக்டரா? என்றும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது, ‘2.0.’

Tuesday, November 27, 2018

250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு!

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே போல், வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது பங்கிற்கு 150 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. நீக்கம் செய்யப்படும் சந்தாதாரர்கள் அனைவரும் 2ஜி வாடிக்கையாளர்கள் மட்டுமே. ஏர்டெலுக்கு ஏற்பட்டுள்ள சுமை: ஏர்டெல் நிறுவனம் மாதம் 35 ரூபாய் ரீசார்ஜ் என்ற திட்டத்தை குறைந்தபட்சமாக வைத்துள்ளது. ஆனால், சுமார் 100 மில்லியன் சந்தாதாரர்கள் மாதம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யாமல் சராசரியாக வெறும் 10 ரூபாய்க்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து வருடத்துக்கு 1,200 கோடி ரூபாய் ஏர்டெலுக்கு வருமானம் கிடைக்கிறது. அவர்களில் பாதி பேர் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்துக்கு 2,100 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். வோடபோன் ஐடியாவின் தற்போதைய நிலைமை: முன்பு வோடபோனும் ஐடியாவும் தனித்தனி நிறுவனங்களாக இருந்தன. ஆனால், தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட போட்டி காரணமாக தற்போது இரண்டு நிறுவனங்களும் கை கோர்த்து உள்ளது. ஏர்டெலை விட வோடபோன் ஐடியா நிறுவனத்தில் தான் ரீசார்ஜே செய்யாத வாடிக்கையாளர்கள் அதிகம். இதற்கும் மாதம் 35 ரூபாய் திட்டத்திலிருந்து ரீசார்ஜ் தொடங்குகிறது. ஆனால், சுமார் 150 மில்லியன் வாடிக்கையாளரகள் 35 ரூபாய்க்கு கூட ரீசார்ஜ் செய்யாமல் உள்ளனர். சராசரியாக 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து வருடத்துக்கு 1,800 கோடி ரூபாய் ஏர்டெலுக்கு வருமானம் கிடைக்கிறது. அவர்களில் பாதி பேர் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்துக்கு 3,144 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் அந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்களுக்கும், அவர்களது வேண்டுகோளை ஏற்று வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 11-ந் தேதி நடைபெற்ற முதல்நிலை தேர்வில் தெரிய வந்துள்ள கட்-ஆப் மதிப்பெண்களில் 140 மற்றும் அதற்கு மேல் எடுத்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளும் 150 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ள பொதுப்பிரிவினரும் இப்பயிற்சிக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.mntfreeias.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24358373, 24330095 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மாதிரி தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, November 26, 2018

அகில இந்திய பார் கவுன்சில் நிபந்தனையை நிறைவேற்றாத 34 ஆயிரம் பேர் வக்கீலாக பணியாற்ற தடை? தமிழ்நாடு பார் கவுன்சில் விரைவில் நடவடிக்கை

அகில இந்திய பார் கவுன்சில் நிபந்தனையை நிறைவேற்றாத 34 ஆயிரம் பேர் வக்கீலாக பணியாற்ற தடை விதிக்க தமிழ்நாடு பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது. வக்கீல்களுக்கான தேர்வு தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வக்கீல்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களில் 90 ஆயிரம் பேர் வக்கீல்களாக பணியாற்றி வருகின்றனர். சட்ட படிப்பை முடித்தவர்கள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே நிரந்தரமாக வக்கீலாக பணியாற்ற முடியும் என்ற விதி 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் வரை சட்ட படிப்பை முடித்தவர்களுக்கு அந்தந்த மாநில பார் கவுன்சில் மூலம் தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இந்த தேர்வை 2 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து வக்கீலாக பணியாற்ற முடியும். அதுபோன்றவர்களுக்கு மட்டுமே பார் கவுன்சில் நிரந்தர அடையாள அட்டை வழங்குகிறது. கணக்கெடுக்கும் பணி 2 ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை இடைநீக்கம் செய்யவும், அவர்கள் மீண்டும் எப்போது தேர்ச்சி பெறுகிறார்களோ அப்போது இடைநீக்கத்தை திரும்ப பெற்று வக்கீலாக பணியாற்ற அனுமதிக்கும்படியும் அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும் அகில இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 2 ஆயிரம் பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாததை தொடர்ந்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 574 பேர் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து அவர்கள் மீதான இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது. கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அந்த தேர்வில் எத்தனை பேர் தோல்வி அடைந்துள்ளனர், அவர்களில் எத்தனை பேருக்கு வக்கீலாக பதிவு செய்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது என்ற கணக்கெடுப்பை தமிழ்நாடு பார் கவுன்சில் தற்போது எடுத்து வருகிறது. 2 ஆயிரம் பேர் தோல்வி இதுகுறித்து தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:- வக்கீலாக பதிவு செய்து 2 ஆண்டுகளுக்குள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதுகிறோம். அவர்களின் பெயர் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவர்களை இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். அகில இந்திய பார் கவுன்சில் விதிப்படி வக்கீல்கள் நல நிதிக்காக சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே தொடர்ந்து வக்கீலாக பணியாற்ற முடியும். கடந்த 1993-ம் ஆண்டு வரை 3 ஆண்டுக்கு ஒரு முறை சந்தா செலுத்தப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. அதன்பின்பு, வக்கீலாக பதிவு செய்யும்போதே வாழ்நாள் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது. 1993-ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்த வக்கீல்களில் 7 ஆயிரம் பேர் சந்தா தொகை செலுத்தவில்லை. இதனால், அவர்களை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வக்கீல் சங்க சான்றிதழ் இதுதவிர, வக்கீல் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 5 வழக்குகளிலாவது ஆஜராகி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஆஜரான வக்கீல்களை மட்டுமே தொடர்ந்து வக்கீலாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் 2015-ம் ஆண்டு இந்திய பார் கவுன்சில் விதியை கொண்டு வந்தது. இந்த விதிப்படி வக்கீலாக பணியாற்றி வருபவர்கள் சம்பந்தப்பட்ட வக்கீல் சங்கத்தில் இருந்து உரிய சான்றிதழ் பெற்று பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் அவ்வாறு சான்றிதழ் பெற்று அனுப்பி வைக்காத 25 ஆயிரம் வக்கீல்களை இடைநீக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெறிச்சோடிய வானம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2 தினங்களாக மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி வானம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவகாற்று இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் பருவ காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தற்போதைய நிலவரப்படி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகளோ, புயலுக்கான அறிகுறியோ எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பூதப்பாண்டியில் 5 செ.மீ. மழை நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக பூதப்பாண்டி, மன்னார்குடியில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இதையடுத்து அம்பாசமுத்திரத்தில் 4 செ.மீ. மழையும், பாபநாசம், தக்கலை, மேட்டுப்பாளையம், இரணியல், மணிமுத்தாறு, குளச்சலில் தலா 2 செ.மீ. மழையும், நீடாமங்கலம், சாத்தான்குளம், மதுக்கூர், வேடசந்தூர், நிலக்கோட்டை, சேரன்மகாதேவி, ஓட்டப்பிடாரம், திருக்காட்டுப்பள்ளியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

Friday, November 23, 2018

புதுச்சேரியில் வக்கீல், மனைவி கொலை வழக்கில் டிரைவர் உள்பட 2 பேர் கைது நகை-பணம் பறிமுதல்

புதுச்சேரியில் வக்கீல், அவரது மனைவி கொலை வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை- பணம் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 72). வக்கீல். அவரது மனைவி ஹேமலதா (65). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். இவர்களின் 2 மகன்கள் பிரான்ஸ் நாட்டிலும், மகள் சிங்கப்பூரிலும் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணன், அவரது மனைவி மட்டும் புதுச்சேரியில் உள்ள 3 மாடி வீட்டில் தரைதளத்தில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது. எனவே அந்த வீட்டின் 2-வது தளத்தில் குடியிருப்பவர்கள் இது குறித்து பாலகிருஷ்ணனின் சம்பந்தியான முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு வந்து பார்த்த போது பாலகிருஷ்ணனும், ஹேமலதாவும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அங்கு இருந்த வெள்ளி பொருட்கள், நகைகள் மற்றும் ஹேமலதா அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. வீட்டில் இருந்த குடும்ப புகைப்படத்தில் தேனீ.ஜெயக்குமாரின் மகள் மீது மட்டும் வட்டமிட்டு வைக்கப்பட்டு இருந்தது. இறந்தவர்களின் முகத்தில் பெருக்கல் குறி இருந்தது. மற்றவர்களின் முகத்தில் ‘டிக்’ செய்யப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. பாலகிருஷ்ணன் வெளியூர் செல்ல தேனீ.ஜெயக்குமாரின் கார் டிரைவரை தொடர்பு கொள்வார். அவர் தற்காலிக டிரைவர் ஒருவரை பாலகிருஷ்ணன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார் என விசாரணையில் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனீ.ஜெயக்குமாரின் கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முகமது காசிம் என்பவரை தற்காலிக டிரைவராக அனுப்பியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அவரது செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவரின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர். கொலை நடந்த நேரத்தில் பாலகிருஷ்ணன் வீட்டில் முகமது காசிம் இருந்தது செல்போன் கோபுரம் சிக்னல் மூலம் கண்டறியப்பட்டது. மேலும் அவர் 2 நாட்களாக கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரிடம் அடிக்கடி பேசியதும் தெரியவந்தது. இந்நிலையில் முகமது காசிம் நேற்று ஒரு காரில் சென்னை சென்று விட்டு புதுச்சேரி திரும்பினார். இதனை கண்காணித்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது முகமது இலியாசுடன் சேர்ந்து பாலகிருஷ்ணன், ஹேமலதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் முகமது இலியாசும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் திருடிய நகை, வெள்ளிப்பொருட்கள், வெளிநாட்டு பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட முகமது காசிம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:- பாலகிருஷ்ணனின் வீட்டில் ஏராளமான பணம், நகைகள் இருக்கும் என்று நினைத்தேன். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்த மெத்தை கிழிந்து இருந்தது. அதனை தைக்க ஆள் வேண்டும் என்று கேட்டார். நான் எனது நண்பரான கறிக்கடை ஊழியர் முகமது இலியாசை மெத்தை தைப்பது போல அழைத்துச்சென்று வீட்டில் இருக்கும் பொருட்களை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். காலையில் முகமது இலியாசை பாலகிருஷ்ணன் தம்பதியிடம் அறிமுகம் செய்து வைத்து மெத்தையை தைக்க வந்திருப்பதாக கூறினேன். அவர்கள் படுக்கை அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது கதவை பூட்டி உள்ளே சென்ற நாங்கள் அவர்கள் 2 பேரையும் காலால் உதைத்தோம். பின்னர் இருவரிடமும் நகை, பணம் எங்கே வைத்துள்ளர்கள் என கேட்டு மிரட்டினோம். அவர்கள் அனைத்தையும் வங்கி லாக்கரில் வைத்துள்ளோம் என்று கூறினர். இதனால் ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கினோம். இதில் அவர்கள் மயக்கம் அடைந்தனர். பின்னர் அவர்களை கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தில் அமுக்கியும் கொலை செய்தோம். கொலையை திசை திருப்புவதற்காக அங்கு இருந்த அவர்களது குடும்ப புகைப்படத்தை எடுத்து அதில் பெருக்கல் குறியீடு, ‘டிக்’ செய்து, வட்டமிட்டோம். பின்னர் வீடு முழுவதும் தேடினோம். நாங்கள் எதிர்பார்த்த அளவு அதிகம் நகை, பணம் கிடைக்கவில்லை. எனவே அங்கு இருந்த நகைகள், ரொக்க பணம், ரூ.1½ லட்சம் வெளிநாட்டு பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்தோம். ஹேமலதா அணிந்திருந்த நகைகளில் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டோம். மாலை வரை வேறு எங்காவது பொருட்கள் உள்ளதா என்று தேடினோம். பசித்ததால் சமையல் அறைக்கு சென்று டீ போட்டு குடித்தோம். பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பி சென்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

நாய்க்கறி பீதிக்கு முற்றுப்புள்ளி ‘ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்டது ஆட்டிறைச்சி தான்’ 5 நாட்களுக்கு பிறகு கால்நடை மருத்துவக்கல்லூரி அறிவிப்பு

சென்னைக்கு வந்த ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்டது ஆட்டிறைச்சி தான் என்று 5 நாட்களுக்கு பிறகு கால்நடை மருத்துவக்கல்லூரி சோதனை முடிவை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் நாய்க்கறி பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அசைவ பிரியர்களை அதிர்ச்சியடைய செய்த சம்பவம் கடந்த 17-ந்தேதி காலை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடந்தது. அன்றைய தினம் ராஜஸ்தானில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 ஆயிரத்து 190 கிலோ கெட்டுப்போன இறைச்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அழுகிய நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த இறைச்சியின் நெஞ்சுப்பகுதி, வால் பகுதி நாயின் வடிவமைப்பை ஒத்திருந்ததால், அது நாய்க்கறி என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியது. சமூக வலைதளங்களிலும் இது வேகவேகமாக பரவியது. ‘மீம்ஸ்’ கிரியேட்டர்களின் பிடியில் இருந்தும் இந்த விவகாரம் சிக்கவில்லை. குறிப்பாக இந்த இறைச்சி சென்னை மாநகரில் உள்ள அசைவ ஓட்டல்களுக்கு ‘சப்ளை’ செய்யப்பட இருந்ததும் கண்டறியப்பட்டது. ‘இத்தனை நாட்களாக ஓட்டலில் சாப்பிட்டு வந்தது உண்மையிலேயே ஆட்டுக்கறி தானா?’, என்ற சந்தேகத்தை அசைவ பிரியர்கள் மனதில் கடுமையாக விதைத்தது. இதனைத்தொடர்ந்து கைப்பற்றிய இறைச்சி துண்டுகளின் மாதிரியை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்காக அனுப்பி வைத்தனர். பொதுவாகவே 24 மணி நேரத்தில் பரிசோதனை பொருளின் தரத்தை உறுதி செய்துவிடும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு இந்தமுறை ஏனோ சிக்கல் உருவானது. அன்றைய தினம் எந்த சோதனையும் செய்யப்படவில்லை. மறுநாளான 18-ந்தேதி விடுமுறை என்பதால் அன்றும் சோதனை நடக்கவில்லை. 19-ந்தேதி தான் பரிசோதனை தொடங்கியது. ஆனாலும் சோதனைகள் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் ரெயிலில் கெட்டுப்போன இறைச்சியை அனுப்பியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் (ஆர்.பி.எப்.) தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் மீன் ‘பார்சல்’ என்ற பெயரில் இறைச்சி அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரெயிலில் அனுப்பப்பட்ட இறைச்சியை பெறுவதாக இருந்த முகவர் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டார். இன்னொரு முகவர் கணேசனை போலீசார் தேடி வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து 5 பேர் கொண்ட தனிப்படை ஜோத்பூருக்கு விரைந்தது. அங்கு இந்த பார்சல்களை அனுப்பியது யார்? என்று கண்டறியப்பட்டு, உண்மை நிலவரம் வெளிக்கொணரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இறைச்சியை அனுப்பியவர்கள் யார்? என்பதை காட்டிலும், அனுப்பப்பட்டது நாய்க்கறியா, இல்லையா? என்ற கேள்வியே அனைவரிடத்திலும் மேலோங்கி காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு 5 நாட்களுக்கு பிறகு நேற்று விடை கிடைத்தது. ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சியின் மாதிரியின் மீதான பரிசோதனை விவரத்தை சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி நேற்று வெளியிட்டது. அதில், “பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட இறைச்சி மாதிரியின் முதுகு தண்டுவடம், கழுத்து பகுதியில் உள்ள எலும்பு அடுக்குகள், இடுப்பில் முக்கோண வடிவில் இருக்கும் எலும்பு மற்றும் கால் மூட்டு எலும்பு உள்ளிட்டவைகளை பரிசோதனையிட்டதில் இது ஆடு அல்லது செம்மறி ஆடு வகையை சேர்ந்த சிறிய உயிரினம். இந்த பரிசோதனை 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி முடிவடைந்தது. பாலித்தீன் பையில் அடைத்து அதிகாரிகள் சமர்ப்பித்த இறைச்சி மாதிரியின் மேற்கொள்ளப்பட்ட இறுதி முடிவு இது”, என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கால்நடை மருத்துவக்கல்லூரியின் இந்த பரிசோதனை அறிக்கை அசைவ பிரியர்களின் பயத்தை போக்கியிருக்கிறது. இதன்மூலம் கடந்த 5 நாட்களான நிலவி வந்த நாய்க்கறி பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் நாய்க்கறி தொடர்பான பல்வேறு சந்தேகங்களும் சமூக வலைதளங்களில் வந்த பாடாக உள்ளன. குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள ஆடுகள் பார்க்க நாய் போலவே காட்சியளித்து வருவதால் இந்த விவகாரத்தில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது என்று ஒருதரப்பினர் விமர்சனம் செய்கிறார்கள். மற்றொரு தரப்பினர், ‘சோதனை முடிவு உடனடியாக வெளிவராதது ஏன்? பறிமுதல் செய்யப்பட்ட இடத்திலேயே பரிசோதனைக்கான இறைச்சி மாதிரியை எடுக்காதது ஏன்? போன்ற கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் நாய்க்கறி பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி இந்த ‘பார்சலை அனுப்பியது யார்? என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டியது, போலீசாரே.

ஏழைகளுக்கு மட்டும் இலவச அரிசி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

இலவச அரிசியை ஏழைகளுக்கு மட்டும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்டம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அமர்நாத்தின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கேட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி இலவச அரிசி திட்டத்துக்காக கடந்த 2017-18-ம் ஆண்டுகளில் ரூ.2,100 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறினார். இலவசத்துக்கு எதிர்ப்பல்ல... இதைக்கேட்ட நீதிபதிகள், “பொதுமக்களுக்கு தமிழக அரசு இலவச பொருட்கள் வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், உண்மையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தான் அவை சென்றடைய வேண்டும் அனைவருக்கும் இலவசம் என்பது ஏற்புடையது அல்ல. அவ்வாறு கொடுக்கவும் கூடாது. இலவச அரிசி என்பது ஏழைகளுக்கு தான் கொடுக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர். பெரும் தொகை பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை செலவு செய்து மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் உரியவர்களுக்கு சென்றடைய வேண்டும். இந்த இலவச அரிசி வழங்கும் திட்டம் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும் வரிப்பணம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை அரசு இலவசமாக வழங்கும்போது, அதை முறையாக கண்காணிக்க வேண்டும். மக்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணத்தை கொண்டுதான் இந்த இலவசங்கள் வழங்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது அதை முறையாக கண்காணிக்க வேண்டும். இலவசங்களை வாரி வாரி வழங்குகின்றனர். மக்களும் தங்கள் மனநிலையை மாற்றிக்கொண்டு அரசு வழங்கும் இலவச பொருட்களை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கிவிட்டனர். இதனால், சிறு சிறு தொழிலுக்கு கூட கூலியாட்கள் கிடைப்பது இல்லை. சிறு சிறு பணிகளுக்காக வடமாநிலங்களில் இருந்து கூலியாட்களை இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கிறது. அறிக்கை வேண்டும் எனவே, இந்த இலவச அரிசி என்பது ஏழைகளுக்கு தான் வழங்க வேண்டும். மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதி தள்ளி வைக்கிறோம். தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் கழகம் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்டு உள்ள வரவு-செலவு தொடர்பான ஆண்டு அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Thursday, November 22, 2018

திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலையில் நாளை 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் விநாயகர், சந்திரசேகரர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அதையொட்டி நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். மகாதீபம் இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி, சன்னதியில் இருந்து ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மகாதீபம் ஏற்றிய பிறகே மின்விளக்குகளை எரியவிடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீட்டின் முன்பும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்கு சுமார் 10 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆளில்லா குட்டிவிமானம் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்பட உள்ளது. மலை உச்சியில் கமாண்டோ படைவீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள். மகாதீபம் ஏற்றிய பின் அன்று இரவு தங்க ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது. 24-ந் தேதி இரவு சந்திரசேகரர் தெப்ப உற்சவமும், 25-ந் தேதி அதிகாலையில் அருணாசலேஸ்வரர்- உண்ணாமலை அம்மன் கிரிவலமும், இரவில் பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், 26-ந் தேதி சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடக்கிறது. 27-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைகிறது.

அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேய் பிடிப்பதாக வதந்தி

சுங்குவார்சத்திரம் கீரநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேய் பிடிப்பதாக வதந்தி பரவியதால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த கீரநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் கீரநல்லூர் காந்தூர், பொடவூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 450 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சென்ற வாரம் இந்த பள்ளியில் 7-ம் வகுப்பில் படிக்கும் 2 மாணவர்கள் திடீரென எழுந்து ஓ என அழுது கை, காலை உதைத்து மேலும் கீழும் குதித்து ஆடியுள்ளனர். மாணவர்களின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், அவர்களின் பெற்றோர்களை அழைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் அதே வகுப்பில் 7-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அதேபோல் அழுது கொண்டு எகிறி குதித்து உள்ளனர். இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மாணவர்கள் இந்த செயல் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் பரவியது. பெற்றோர்கள் அலறியடித்து கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். அந்த பள்ளியில் 7-ம் வகுப்பில் பேய் உள்ளதாகவும், அந்த பேய்தான் மாணவர்களை ஆட்டி வதைக்கிறது என மாணவ-மாணவிகளிடேயே வதந்தி பரவியது. இதனால் குறிப்பிட்ட இந்த மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். கடந்த 19-ந் தேதி (திங்கட்கிழமை) வழக்கம் போல் பள்ளி இயங்கியது. பாதிக்கப்பட்ட 12 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளியில் குறிப்பிட்ட அந்த வகுப்பில் பேய் உள்ளதாக பெற்றோருக்கும் மாணவ- மாணவிகளுக்கும் இடையே அச்சம் நிலவுகிறது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மாவட்ட கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கல்வி துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும் போது:- மாணவர்கள் சிலருக்கு உடல்நிலை சரியில்லை. இதை சாக்காக வைத்து மற்ற மாணவ-மாணவிகள் பள்ளிக்கு விடுமுறை எடுக்க இதை வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேய் பிடிப்பதாக பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.

2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்?

நம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படும். எனவே ஏராளமான மையங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும். குறிப்பாக, 2019 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதுமாக 1.13 ஏ.டி.எம். எந்திரங்களின் (தற்போதைய மொத்த எண்ணிக்கையில் இது சுமார் 50 சதவீதம்) சேவை நின்று விடலாம். இதில், வங்கி வளாகத்திற்கு அப்பால் செயல்படும் (ஆப்சைட்) ஒரு லட்சம் மையங்களும், ஏறக்குறைய 15 ஆயிரம் ஒயிட் லேபிள் ஏ.டி.எம்.களும் அடங்கும். மொத்தத்தில் இத்துறையினர் ஒரு நெருக்கடியான கட்டத்திற்கு வந்துள்ளனர். நம் நாட்டில் இப்போது 2.38 லட்சம் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மையங்களின் எண்ணிக்கை சரிபாதியாக குறைவதால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் உருவாகும். அது மட்டுமல்லாமல் அனைவருக்கும் நிதிச்சேவை கிடைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படும். கேட்மி அமைப்பின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது.

Monday, November 19, 2018

திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீப தேரோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை(செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப விழா தேரோட்டம் நடக்கிறது. 5-ம் நாள் திருவிழா புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபம் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இதையொட்டி தீப திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 5-ம் நாளான நேற்று காலை வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அலைமோதிய பக்தர்கள் கூட்டம் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கார்த்திகை தீப திருவிழா தொடங்கி உள்ளதால் வழக்கத்தைவிட நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலாவும் நடக்கிறது. தேரோட்டம் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மேல் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம் பிடித்து இழுப்பார்கள். பெரிய தேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும். தீப கொப்பரைக்கு பூஜை வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் நகரின் அருகில் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த தீப கொப்பரைக்கு நேற்று பூஜை நடத்தி ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். மகாதீபம் ஏற்ற ஒரு சில நாட்களே இருப்பதாலும் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளதாலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இதையொட்டி திருவண்ணாமலையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Sunday, November 18, 2018

வளிமண்டலத்தில் புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

‘வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் மழை பெய்யும்’, என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல், தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு நேற்று முன்தினம் அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. ‘கஜா’ புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் வளிமண்டலத்தில் உருவாகி இருக்கும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:- புதிய மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (இன்று) மாலை தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறிப்பாக மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது நாளை மற்றும் நாளை மறுநாளில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் 19-ந்தேதி (நாளை) முதல் 21-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடனேயே காணப்படும். 19-ந்தேதி (நாளை) மற்றும் 20-ந்தேதியில் (நாளை மறுநாள்) மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சிவகங்கையில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கொடைக்கானலில் 14 செ.மீ. மழை பெய்திருக்கிறது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை அடுத்த வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 18-ந்தேதி (இன்று) மற்றும் 19-ந்தேதியும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 19-ந்தேதியும், 20-ந்தேதியும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். வங்கக்கடல் பகுதிகளை பொறுத்தவரையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 18-ந்தேதியும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 19-ந்தேதியும், 20-ந்தேதியும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, November 17, 2018

‘கஜா’ புயலை தொடர்ந்து, தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது வானிலை ஆய்வு மையம் தகவல்

‘கஜா’ புயலை தொடர்ந்து தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் கடந்த சில நாட்களாக தமிழகத்தை மிரட்டி வந்தது. பல்வேறு கட்ட கண்ணாமூச்சி போராட்டத்துக்கு இடையே நேற்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே ‘கஜா’ புயல் கரையை கடந்தது. ‘கஜா’ புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது- ‘கஜா’ புயல் இன்று (நேற்று) காலை 11.30 மணி வரையிலான நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இந்த பகுதிகளில் காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். தற்போதைய நிலவரப்படி தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் வருகிற 18-ந்தேதி (நாளை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 19 மற்றும் 20-ந்தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். இதன் பாதிப்பு குறித்து கணித்து சொல்லப்படும். ‘கஜா’ புயல் தமிழகத்தை கடந்ததை தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்குள் செல்லலாம். 18-ந்தேதி தெற்கு வங்க கடல் மத்திய பகுதியிலும், 19-ந்தேதி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம். கடந்த 1-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலான நிலவரப்படி தமிழகம், புதுச்சேரியில் 22 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 29 செ.மீ. ஆகும். எனவே தற்போது பெய்திருக்கும் மழை இயல்பை விடவும் 23 சதவீதம் குறைவு ஆகும். ஆனால் நேற்று (நேற்று முன்தினம்) வரை 29 சதவீதம் வரை மழை அளவு இயல்பை விடவும் குறைவாக இருந்தது. இன்று (நேற்று) 6 சதவீத மழை நமக்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் சராசரி மழை அளவை விடவும் 23 சதவீதம் குறைவு என்ற நிலைக்கு வந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Friday, November 16, 2018

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க அட்லீ டைரக்‌ஷனில், மீண்டும் விஜய்!

‘சர்கார்’ படத்தை அடுத்து விஜய், ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அட்லீ டைரக்டு செய்கிறார். எங்கேயும் காதல், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், திருட்டுப்பயலே, அனேகன், கவண், தனி ஒருவன் உள்பட பல படங்களை தயாரித்த நிறுவனம், ஏ.ஜி.எஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி அகோரம் மிக பிரமாண்டமான முறையில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார். இதில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். ராஜாராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ டைரக்டு செய்கிறார். விஜய்-அட்லீ இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் (டிசம்பர்) தொடங்குகிறது. ‘‘இதுவரை தமிழ் திரையுலகில் வந்திராத கதை, இது. விஜய் இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்’’ என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

குரூப்-1 தேர்வு முறைகேடு பயிற்சி மைய இயக்குனரின் முன்ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கில் தனியார் பயிற்சி மைய இயக்குனருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுத்து விட்டது. தேர்வு முறைகேடு மதுரையை சேர்ந்தவர் ஸ்வப்னா. திருநங்கையான இவர், சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியிருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அப்பல்லோ பயிற்சி மையத்தில் படித்தவர்கள் பலர் குரூப்-1 தேர்வில் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. முன்ஜாமீன் அந்த பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரன் பெயரை குற்றவாளியாக வழக்கில் போலீசார் சேர்த்தனர். இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றார். அப்போது 8 வாரகாலத்துக்கு போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சாம் ராஜேஸ்வரனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். தள்ளுபடி அப்போது, “சாம் ராஜேஸ்வரன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அரசு வக்கீல் கூறினாலும், அதை ஏன் மனுவில் குறிப்பிடவில்லை?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், “8 வாரத்துக்குள் போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனையை சாம் ராஜேஸ்வரன் பூர்த்தி செய்துள்ளார். எனவே, அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய எந்த முகாந்தரமும் இல்லை. அதேநேரம் வருகிற 19-ந்தேதி முதல் டிசம்பர் 3-ந்தேதி வரை 10 வேலை நாட்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு சாம் ராஜேஸ்வரன் ஆஜராகவேண்டும். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Thursday, November 15, 2018

தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது வரலாற்று சாதனை படைக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் பெருமிதம்

‘ஜிசாட்-29’ தகவல் தொடர்பு செயற்கைகோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதன் மூலம் இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்து உள்ளது என்று விஞ்ஞானிகள் பெருமிதம் கொண்டனர். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தகவல் தொடர்பு, கடல்சார் ஆய்வு, வானிலை பயன்பாட்டுக்கான பல்வேறு விதமான செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. தகவல்தொடர்பு மற்றும் காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக இஸ்ரோ ‘ஜிசாட்-29’ என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இது இந்தியாவின் 13-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். அதோடு நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரயோஜெனிக்’ என்ஜின் பொருத்தப்பட்ட 10-வது ராக்கெட்டாகும். வெற்றிகரமாக பாய்ந்தது 26 மணி 8 நிமிட நேர ‘கவுண்ட்டவுனை’ முடித்துக்கொண்டு நேற்று மாலை 5 மணி 8 நிமிடத்துக்கு ‘ஜிசாட்-29’ செயற்கைகோளை சுமந்துகொண்டு, பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-வது நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த ராக்கெட் 43.49 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. 4 டன் எடைகொண்ட செயற்கைகோளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டில், தற்போது 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் அனுப்பப்பட்டு உள்ளது. செயற்கைகோளை நிலை நிறுத்தியது ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடம் 43 வினாடிகளில் திட்டமிட்ட உயரத்தை (207.57 கிலோ மீட்டர்) அடைந்ததும், ‘ஜிசாட்-29’ செயற்கைகோளை வெற்றிகரமாக அதன் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், 3-வது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த ‘கிரயோஜெனிக்’ என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியதாக விஞ்ஞானிகள் கூறினார்கள். இந்தியாவில் இருந்து ஏவப்படும் அதிக எடைகொண்ட செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டதும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடியிருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களை ஆரத்தழுவி கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினர் ராக்கெட் ஏவுவதை பார்ப்பதற்காக கூடியிருந்தனர். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததும் அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தகவல் தொடர்பு இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்புக்கு உதவும் சக்திவாய்ந்த ‘கேயு-பேண்ட்’, ‘கேஏ-பேண்ட்’, க்யூ/வி பேண்ட் கருவிகள் மற்றும் நவீன ரக கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இவை செயல்படுவதற்கு செயற்கைகோளில் 4,600 வாட் திறன்கொண்ட 2 பேட்டரிகள், மீட்பு மற்றும் தேடும் பணிக்கான டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் நவீன கருவிகள் இடம் பெற்றுள்ளன. இதனுடைய ஆயுட்காலம் 10 ஆண்டுகள். ஜிசாட்-29 செயற்கைகோள் சுமார் ரூ.250 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதன் மூலம், கிராம வள மையங்கள் வழியாக கிராமப்புறங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி மேம்பாடு அடையும். இந்த திட்டத்தின் மூலம் கிரயோஜெனிக் என்ஜினில் இஸ்ரோ தன்னிறைவை பெற்று உள்ளது. “கடந்த காலங்களில் அதிக எடைகொண்ட செயற்கைகோள்களை பிரெஞ்சு கயானாவில் இருந்து தான் ஏவப்பட்டு வந்தன. தற்போது நம்முடைய தொழில்நுட்பத்தில் அதிக எடைகொண்ட செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது பெருமிதமாக இருக்கிறது. வரலாற்று சாதனை படைக்கப்பட்டு உள்ளது” என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Wednesday, November 14, 2018

குரூப்-2 தேர்வு உத்தேச விடைகள் இன்று வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்-2 தேர்வு உத்தேச விடைகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. குரூப்-2 தேர்வு டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 11-ந்தேதி குரூப்-2 தேர்வினை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் நடத்தியது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைகள் 14-ந் தேதி(இன்று) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு வெளியிடப்படும் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தன. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதை குறைக்க தேர்வாணையம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. சரியான விடைகள் வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இந்த குரூப்-2 தேர்வு முதல் இணையவழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அத்தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித் தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண் ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே (ஹால் டிக்கெட்) இருக்கும். தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தேர்வு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும். விடைக்குறிப்பில் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை, விடைகளை தேர்வு செய்ய வேண்டும். 20-ந்தேதிக்குள்... பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்பு காலத்தில் தேர்வர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளடு செய்ய வேண்டும். தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங்களை ‘பி.டி.எப்.’ கோப்புகளாக பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற் கான தகவல்களும் விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங் களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்படமாட்டாது. அஞ்சல், மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. வருகிற 20-ந்தேதிக்குள் தேர்வர் கள் இதை செய்ய வேண்டும். அதற்கு மேல் வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை நெருங்குகிறது ‘கஜா’ புயல் இன்று (14.11.2018) இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு

‘கஜா’ புயல் தமிழகத்தை நெருங்குகிறது. இதன் காரணமாக இன்று இரவு முதல் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. ‘கஜா’ புயல் அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 10-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த 11-ந் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. இது முதலில் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 15-ந் தேதி (நாளை) முற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது கடலூர்-பாம்பன் இடையே அதே 15-ந் தேதி பிற்பகலில் கரையை கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக் குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- கடலூர்-பாம்பன் இடையே... மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு வட கிழக்கே சுமார் 720 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து 15-ந் தேதி (நாளை) பிற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, 15-ந் தேதி காலை முதல் புயல் கரையை கடக்கும் வரை கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். சில நேரத்தில் 100 கிலோ மீட்டர் வரையிலும் வீசும். மிக கனமழை தமிழக மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுசேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் 15-ந் தேதி பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை இருக்கும். மீனவர்கள் 15-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னைக்கு இந்த புயலினால் நேரடியான பாதிப்பு இல்லை. கிழக்கு திசை காற்று இருப்பதால் 15, 16, 17-ந் தேதிகளில் சென்னையில் மழை பெய்யும். தீவிர புயலாக மாறும் இந்த ‘கஜா’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தீவிர புயலாக மாறும். ஆனால் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு வரும் போது அது மீண்டும் புயலாக மாறி, கடலூர்-பாம்பன் இடையே புயலாகவே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ புயல் நகர்வு வேகம் குறைந்து இருந்தது. வளிமண்டலத்தின் மேலடுக்கில் எதிரெதிர் திசையில் நகர்ந்து செல்லும் காற்றின் அமைப்புக்கு இடையில் புயல் இருந்தது. இதன் காரணமாக கஜா புயல் நகர்வு வேகம் மணிக்கு 3 முதல் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, நிலையாக இருந்தது. அதனால் தான் கரையை கடப்பது 15-ந் தேதி முற்பகலில் இருந்து பிற்பகலுக்கு மாறி உள்ளது. தற்போது எதிரெதிர் திசை காற்றில் ஒன்று நகர்ந்துவிட்டதால், ‘கஜா’ புயல் தற்போது மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசையில் நகருகிறது. நிச்சயம் மழை இருக்கும் கஜா புயல், புயலாகவே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி புயலாக கடக்காமல் தாழ்வு மண்டலமாக கரையை கடந்தாலும் தமிழகத்துக்கு நல்ல மழை இருக்கும். தாழ்வு மண்டலமாக இல்லாமல் வலு இழந்து கடந்தாலும், ஓரளவு மழை இருக்கும். ஆக தமிழக கடலோர மாவட்டங்களில் நிச்சயம் மழை இருக்கும். வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் 1-ந் தேதி முதல் தற்போது (நேற்று) வரை 27 செ.மீ. தமிழகத்தில் மழை பதிவாக வேண்டும். ஆனால் 20 செ.மீ. தான் மழை பொழிந்து இருக்கிறது. இது இயல்பை விட 27 சதவீதம் குறைவு ஆகும். தற்போது வரும் புயலினால் மழை பெய்யும் போது இயல்பையொட்டி மழை அளவை தமிழகம் பெறும். இவ்வாறு அவர் கூறினார். கஜா புயல் தற்போது வேகமாக தமிழகத்தை நெருங்குவதால் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மழை இருக்கும் என்று கூறப்படுகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நாகர்கோவிலில் 2 செ.மீ., மயிலாடியில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.

Sunday, November 11, 2018

பொருளாதார பின்னடைவுக்கு பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியுமே காரணம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து.

2017-ல் இந்தியப் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கக் காரணம் பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி அமலும்தான் என்று கருத்து தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி யின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன். தற்போதுள்ள 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இந்தியா வின் தேவையைப் பூர்த்திசெய்ய போதாது என்றும், இந்தியாவை மத்திய அரசு மட்டுமே இயக்கிவிட முடியாது என்றும் கூறினார். பெர்க்ளியில் உள்ள கலிபோர் னியா பல்கலைக்கழகத்தின் கூட்டத் தில் பேசிய ரகுராம் ராஜன் 2012 முதல் 2016 வரையிலான நான்கு ஆண்டுகள் இந்தியா வேகமாக வளர்ச்சி கண் டது என்று கூறினார். ஆனால், 2017ல் இந்தியப் பொருளாதாரம் கடும் பின் னடைவைச் சந்தித்தது என்று கூறிய அவர், இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு செயல்படுத்திய இரண்டு மிகப்பெரிய அதிர்ச்சிகர மான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்தான் என்றார். 2016 நவம்பரில் எடுத்த பண மதிப்பு நிக்க நடவடிக்கையும், 2017ல் அமல்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையும் தான் 2017-ம் ஆண்டின் இந்தியப் பொரு ளாதார வளர்ச்சியை மிகவும் பாதித்த விஷயங்கள் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது, “2012-2016 வரை வேகமாக வளர்ந்த இந்தியப் பொருளாதாரம் டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி இரண்டு நடவடிக்கையாலும் மிகப் பெரும் தாக்கத்தைச் சந்தித்துள் ளது. 2017-ம் ஆண்டில் 7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலகப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ள நிலையிலும் இந்தியா வளர்ச்சியடையவில்லை. மேலும் இந்தியாவின் தற்போதைய தேவைக்கு 7 சதவீத வளர்ச்சி என்பது மிக மிகக் குறைவு. இந்த வளர்ச்சி விகிதத்தை வைத்து தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக் கவோ, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ முடியாது. உலகப் பொருளாதார சந்தையைப் பொருத்தவரை இந்தியா ஒரு திறந்த பொருளாதார சந்தை. எனவே உலகப் பொருளாதாரம் வளரும் போது இந்தியப் பொருளாதாரமும் வளரும். ஆனால், கடந்த ஆண்டு இந்தியா வளர்ச்சி காணவில்லை. தற்போது இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலையும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் அதற்கு முட்டுக் கட்டையாக உள்ளன. கச்சா எண் ணெய்யைப் பொருத்தமட்டில் இந்தியா இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொரு ளாதாரத்தில் மேலும் கடினமான சூழலை உண்டாக்கும்” என்றார். வாராக் கடன் பிரச்சினை விரை வில் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்றார். இந்தியாவின் தற்போதைய அனைத்து சிக்கல்களையும் தீர்க்க மத்திய அரசால் மட்டுமே முடியாது. இந்தியாவுக்கான சுமையைச் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பகிர்ந்துகொண்டால்தான் சரியான பாதையில் நாடு இயங்கும். ஆனால், அரசியல், பொருளாதார முடிவுகள் எடுக்கும் அதிகாரம் முழுவதும் மேலும், மேலும் மத்திய அரசை மையமாகக் கொண்ட தாகவே தீவிரமடைந்து வருகிறது. மத்திய அரசால் மட்டுமே தனியாக இந்தியாவை இயக்கிவிட முடியாது என்பதை உணர வேண்டிய தருணம் இது என்று கூறினார்.

ஊர் பெயர்களை மாற்றி அமைக்க ஆலோசனை வரவேற்பு

தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்திட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை ‘ட்ரிப்ளிக்கேன்’ என ஆங்கிலத்தில் (எழுத்துக் கூட்டல்) குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே ஆங்கிலத்திலும் உச்சரிப் பும், எழுத்துக் கூட்டலும் அமையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் பெயர்களின் உச்சரிப்பு தமிழில் அமைந்துள்ளது போலவே ஆங்கிலத்திலும் அதன் ஒலிக்குறிப்பு மாறாமல் அமைத்திட, மாற்றப்பட வேண்டிய ஊர்களின் பெயர் பட்டியலை அதற்கு இணையான ஆங்கில உச்சரிப்பு எழுத்துக் கூட்டலுடன் இதற்கான படிவத்தில் பூர்த்திசெய்து, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவள்ளூர்-602 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் 044 27664756 என்ற தொலைபேசி எண்ணிலும் - adtdtri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.

அந்தமான் அருகே புயல் உருவாகிறது வட கடலோர தமிழகத்தில் நவ.14 முதல் மழை பெய்யும் மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்

அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும். இதனால் வட கடலோர தமிழகத்தில் 14-ம் தேதி முதல் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அந்தமான் கடல் பகுதியில் 9-ம் தேதி நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 10-ம் தேதி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் பகுதியில் நிலைகொண்டுள்ள இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும். 100 கி.மீ. வேகத்தில் காற்று பின்னர் தெற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14-ம் தேதி இரவு வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதியை நோக்கி நகரக்கூடும். அப்போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். புயல் உருவாவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர், புதுச்சேரி, விழுப் புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை ஆகிய வட கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 14-ம் தேதி மாலையில் இருந்தே மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். எனவே, ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 12-ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தென் தமிழகத்தில் மழை குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங் கடல் பகுதியில் 9-ம் தேதி நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சற்று வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, மாலத்தீவு, குமரிக்கடல், லட்சத்தீவு பகுதி களில் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். குன்னூரில் 30 மி.மீ. மழை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ராதாபுரம், குழித்துறை, நாகர்கோவிலில் 20 மி.மீ., இரணியல், நாங்குநேரி, மணிமுத்தாறு, குளச்சல், பாப நாசம், கன்னியாகுமரி, சேரன் மகாதேவி, தக்கலை, அம்பா சமுத்திரம், மயிலாடி, ஆத்தூரில் 10 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, November 10, 2018

கூடுதலாக வீட்டு கடன் பெற உதவும் திட்டம்

விண்ணப்பதாரரின் எதிர்கால வருமானம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, வீட்டு கடன் வசதி நிறுவனங்களால் கூடுதல் கடன் தொகை அளிக்கப்படும் முறை ஸ்டெப் அப் வீட்டு கடன் ஆகும். இதன் மூலம் 5 முதல் 30 சதவீதம் வரை அதிக தொகை பெறலாம். இவ்வகை கடன் திட்டத்தில் வட்டி விகிதம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கேற்ப மாறுபடுவதுடன் மாதாந்திர தவணை துவக்கத்தில் குறைவாக இருந்து காலம் செல்லச் செல்ல அதன் அளவு படிப்படியாக அதிகரிக்கும். அதாவது, வருடா வருடம் உயரும் ஊதியத்திற்கேற்ப திருப்பி செலுத்தும் அளவும் அதிகமாக கணக்கிட்டு பெறப்படும். எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என்று நம்பக்கூடிய துறையில் பணி புரியும் இளைய சமூகத்தினரின் சொந்தவீடு கனவை நிறைவேற்ற இவ்வகை கடன் திட்டங்கள் உதவுகின்றன. பொதுத்துறை வங்கிகள் முழுமையான ஸ்டெப் அப் வீட்டு கடன் அளிக்க முன் வருவதில்லை. ஆனால், கடன் தொகையை ஸ்டெப் அப் முறையில் கடனை படிப்படியாக அதிகரித்து திரும்ப செலுத்தும் (StepUp Re-payment Facility) வசதியை அளிக்கின்றன.

எதிர்ப்பால் அதிக கூட்டம் ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது

விஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. அமைச்சர்கள் எதிர்ப்பாலும், அ.தி.மு.க.வினர் போராட்டங்களாலும் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எதிர்ப்புகள் படத்துக்கு விளம்பரம் தேடி தந்துள்ளது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். உலகம் முழுவதும் சர்கார் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்ததாகவும், இந்திய அளவில் இந்த தொகை 3 நாட்களில் கிடைத்தது என்றும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் பாகுபலி வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 3 நாட்களில் ரூ.65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.2.37 கோடியும், 2-வது நாள் ரூ. 2.32 கோடியும் வசூலித்துள்ளது. தொடர்ந்து ரூ.2 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் துப்பாக்கி, கத்தி, பைரவா, தெறி, மெர்சல் ஆகிய படங்கள் வசூலில் ரூ.100 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் சர்கார் படமும் சேர்ந்துள்ளது. சர்கார் படம் ரூ.200 கோடி வரை வசூல் ஈட்டும் என்று எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்தார். அவர் கூறும்போது, “சர்காருக்கு எதிரான போராட்டம் படத்துக்கு பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. வசூலில் பாதிப்பு ஏற்படவில்லை. எதிர்ப்புக்கு பிறகு படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு கூட்டம் அதிகம் வருகிறது. 3 நாட்களில் வசூல் ரூ.125 கோடியை தாண்டி உள்ளது” என்றார்.

Thursday, November 8, 2018

சர்கார் கதாநாயகன்-கதாநாயகி: விஜய்-கீர்த்தி சுரேஷ். டைரக்‌ஷன்: ஏ.ஆர்.முருகதாஸ். கதையின் கரு: ஒரு கள்ள ஓட்டும், கதாநாயகன் எடுக்கும் முடிவுகளும்... அமெரிக்காவில், ‘நம்பர்-1’ கம்ப்யூட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கும் ‘சுந்தர் ராமசாமி’(விஜய்)யின் பெயரை சொன்னாலே அனைத்து நாடுகளும் பயப்படுகின்றன. அவர் ஒரு நாட்டுக்கு வந்தால், அங்கு ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி விட்டுதான் வெளியேறுவார் என்று அஞ்சுகின்றன. அப்படிப்பட்ட விஜய் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சென்னை வருகிறார். அவருடைய ஓட்டை வேறு யாரோ (கள்ள ஓட்டாக) போட்டு விடுகிறார்கள். ஓட்டு உரிமை கோரி விஜய் கோர்ட்டுக்கு போகிறார். அவருக்கு கோர்ட்டு ஓட்டுரிமையை வழங்குகிறது. இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. கள்ள ஓட்டுகளால் ஓட்டுரிமையை இழந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களுக்கும் ஓட்டுரிமையை வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு போடுகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் மறு தேர்தல் நடத்த கோர்ட்டு உத்தரவிடுகிறது. இது, ஏற்கனவே 2 முறை முதல்வராக இருந்து, 3-வது முறையாக முதல்வராக தயாராகும் பழ.கருப்பையாவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. கலவரத்தை தூண்டி விடுகிறார். மறு தேர்தலில் அவரை எதிர்த்து விஜய் போட்டியிடுகிறார். அவர் பின்னால் இளைஞர்களும், பொதுமக்களும் திரள்கிறார்கள். விஜய்யை தீர்த்துக் கட்ட பழ.கருப்பையா சதி செய்கிறார். அவருடைய சதி என்ன ஆகிறது, மறு தேர்தல் நடந்ததா, இல்லையா, அதில் யாருக்கு வெற்றி கிடைத்தது, முதல்வர் பதவியை ஏற்பது யார்? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது, மீதி கதை. இதுவரை தரை லோக்கலாக வந்து சாகசங்கள் செய்த விஜய், இந்த படத்தில் மிகப்பெரிய கோடீஸ்வரராக வருகிறார். ‘சுந்தர் ராமசாமி’ கதாபாத்திரத்தில் அவருடைய நடை-உடை-பாவனை அத்தனையும் ரசிக்க வைக்கிறது. கோடீஸ்வரர் வேடத்தில் அவருடைய ஸ்டைல், வேகம் இரண்டும் கூடியிருக்கிறது. வயது குறைந்து இன்னும் இளமையாக தெரிகிறார். சண்டை காட்சிகளில் அவருடைய சாகசங்கள் வியக்க வைக்கிறது. அரசியல் கலந்த ‘பஞ்ச்’ வசனங்களுக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு. காதலுக்கும், டூயட்டுக்கும் முக்கியத்துவம் இல்லாத கதை என்பதால், கதாநாயகி கீர்த்தி சுரேசுக்கு அதிக வேலை இல்லை. சில காட்சிகளே வந்து போனாலும், ‘வில்லி’யாக வரலட்சுமி சரத்குமார் மிரட்டியிருக்கிறார். அரசியல்வாதி வேடத்துக்கு பழ.கருப்பையா நூற்றுக்கு நூறு பொருந்தியிருக்கிறார். இரண்டாவது வில்லன் என்றாலும், ராதாரவி நடிப்பில் முதல் இடம். திருப்பத்தை ஏற்படுத்தும் தேர்தல் அதிகாரியாக ராஜேஷ், கம்பீரம். கதைக்கு காரணகர்த்தாவாக இருக்கும் தமாசான வேடத்தில் யோகி பாபுவை திரையில் பார்த்ததுமே சிரிப்பு. விஜய்யுடன் அவர் வருகிற காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். விஜய்யின் உறவினராக லிவிங்ஸ்டன், சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் சென்னை நகரின் இரவு நேர அழகு கூடியிருக்கிறது. கார் துரத்தும் காட்சிகளிலும், அரசியல் கூட்டங்கள் மற்றும் கலவரத்தை படமாக்கியிருக்கும் விதத்திலும் பிரமிக்க வைக்கிறார், ஒளிப்பதிவாளர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் 2 பாடல்கள், ‘ஹிட்’ ரகம். பின்னணி இசை, கதையோட்டத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. விஜய்க்கு பொருந்துகிற மாதிரி முற்றிலும் வித்தியாசமான ஒரு கதையை தேர்வு செய்திருக்கிறார், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். கதை சொன்ன விதமும், காட்சிகளின் பிரமாண்டமும் ‘சர்கார்’ரை உயரத்தில் தூக்கிப் பிடிக்கின்றன. இடைவேளை வரை படம், சூப்பர் வேகம். இடைவேளைக்குப்பின், சில காட்சிகளில் பிரசார நெடி இருப்பதை தவிர்த்து இருக்கலாம். நெல்லையில் ஒரு குடும்பமே தீக்குளித்ததையும், மெரினா போராட்டத்தையும் கதைக்குள் செருகியிருப்பது, படத்துக்கு கூடுதல் பலம்.

Tuesday, November 6, 2018

‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்!

இந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி! ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர்! பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விரும்பியிருக்க மாட்டார் என்பதுதான் உண்மை. அதை வெளிப்படையாகச் சொல்லும் துணிச்சலும் அவருக்கு இருக்கும். அதனால்தான் அவர், ‘Standing tall..!’ உயர்ந்த மனிதன் அதென்ன ‘ஸ்டேண்டிங் டால்?’ எந்த ஒரு நெருக்கடியான சூழலிலும், தோல்வித் தருணங்களிலும் முன்வைத்த காலைப் பின் வைக்காமல், கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி, தலையை உயர்த்தி வீரத்துடன் நடைபோடும் நபர்களை நாம் சந்தித்திருப்போம் இல்லையா..? இத்தனை குணங்களையும் இரண்டே சொற்களில் விளங்க வைக்கும் சொல் வழக்குதான் ‘ஸ்டேண்டிங் டால்’. இதை ‘Stand tall’ என்றும் சொல்லலாம். முடியாட்சிக் காலத்தில், போர்களின்போது குதிரைச் சேணத்தில் அமர்ந்துகொண்டு வீரர்கள் போரிடுவார்கள். சில நேரம், அந்தச் சேணத்தின் மீது நின்றுகொண்டும் போரிடுவார்கள். மிகவும் துணிச்சலான வீரர்களால் மட்டுமே அவ்வாறு நின்றுகொண்டு போரிட முடியும். ஏனென்றால், கொஞ்சம் அசந்தால், குதிரை நம்மைக் கீழே தள்ளிவிடும். எனவே, குதிரை மீது நிற்பதில் மட்டுமல்லாமல், சண்டையிடுவதிலும் நம் கவனத்தைக் குவித்திருக்க வேண்டும். அப்படியான சமநிலை, சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதிலிருந்து வந்ததுதான் மேற்கண்ட சொற்றொடர். சிலைதான் உயர்ந்து நிற்கிறது. ‘சின்ன’ மனிதர்களோ அதைச் சாதனை என்கிறார்கள்!

Monday, November 5, 2018

திட்டமிட்டபடி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு 11-ந் தேதி நடைபெறும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளதாக சில அவதூறு செய்திகள் ஊடங்கங்களில் வெளிவந்து தேர்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன. பயிற்று மொழி தமிழில் இருந்தால் வினாத்தாள்களும் கண்டிப்பாக தமிழில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் அப்பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போதே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள குரூப்-2 முதனிலைத் தேர்வுக்கு, பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்துடன் பொது அறிவு மற்றும் aptitude and mental ability test ஆகிய கேள்விகள் மட்டுமே இடம்பெறும். இதற்கான கேள்வித்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத்தேர்வுக்கு பொது அறிவு வினாக்கள் மட்டுமே இடம்பெறும். அத்தேர்வுக்கான வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும். இதுகுறித்த தகவல்கள் இத்தேர்வுக்கான அறிவிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே குரூப்-2 தேர்வு 11-ந் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். எனவே தேர்வர்கள் இதுகுறித்து வெளியாகும் ஆதாரமற்ற, தவறான செய்திகள் குறித்து கவலைப்படாமல் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைகிறது தென் தமிழகத்தில் தீபாவளி முதல் 3 நாட்கள் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதால் தீபாவளி முதல் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும், ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் ஆண்டு மழைப்பொழிவில் 48 சதவீதத்தை பெறுகிறது. இந்த வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விட கொஞ்சம் அதிகமாகவே மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கடந்த 1-ந் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் வலுப்பெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தீபாவளி நாளான செவ்வாய்க்கிழமை (நாளை) தெற்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், இதனால் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருகிற 6, 7, 8-ந் தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 24 மணி மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) வடகிழக்கு பருவமழையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து இருக்கிறது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 15 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. தெற்கு வங்க கடல் பகுதியின் மத்திய பகுதியில் 6-ந் தேதி (நாளை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் 6, 7, 8-ந் தேதிகளில் கடக்கக்கூடும். எனவே வருகிற 6-ந் தேதி (தீபாவளி அன்று) முதல் 8-ந் தேதி வரை 3 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை வலுவடைகிறது. இதன் காரணமாக தென் மேற்கு வங்க கடல் பகுதியில் 6, 7-ந் தேதிகளிலும், குமரி கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 7, 8-ந் தேதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்படும். மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். தென் தமிழகத்தில் கனமழை எனவே தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு 6, 7-ந் தேதிகளிலும், குமரி கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு 7, 8-ந் தேதிகளிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதிக்கு சென்ற மீனவர்கள் 6-ந் தேதிக்கு முன்னதாக கரைக்கு திரும்ப வேண்டும். மேற்சொன்ன 6, 7, 8-ந் தேதிகளில் தென் தமிழகத்தில் (ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்கள்) பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். அதிலும் குறிப்பாக 8-ந் தேதி மிக கனமழை (20 செ.மீ.-க்கு மேல்) பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தை (இன்று) பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வருகிற 10-ந் தேதி மற்றும் 12-ந் தேதி மேலும் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார். மழை அளவு நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:- பாபநாசத்தில் 15 செ.மீ., மணிமுத்தாறு, குன்னூரில் தலா 6 செ.மீ., திருமங்கலம், மதுரை விமானநிலையத்தில் தலா 5 செ.மீ., கொடுமுடி, அருப்புக்கோட்டை, சிவகங்கையில் தலா 4 செ.மீ., மதுரை தெற்கு, அரூர், பொள்ளாச்சி, ராமநாதபுரத்தில் தலா 3 செ.மீ. உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

Sunday, November 4, 2018

1,199 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

1,199 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியிடப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) 1,199 காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு தொகுதி-2(நேர்முகத்தேர்வு உள்ள குரூப்-2 பதவிகள்) பணிக்கான முதல்நிலை தேர்வினை வருகிற 11-ந்தேதி சென்னை உள்பட 32 மாவட்டங்களிலும் நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு(‘ஹால் டிக்கெட்’) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpscexams.net, tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் அல்லது பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை(ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். மேற்கண்ட தகவல் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்றொரு செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு தொழிலாளர் பணியில் அடங்கிய உதவி ஆணையர் தொழிலாளர் பதவிக்கான எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு முன் நடைபெறும் 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 5 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை முகப்பேரில் பிளஸ்-2 மாணவருக்கு ஆசிரியை பாலியல் தொல்லையா? விசாரணை நடத்த போலீஸ் முடிவு

சென்னை முகப்பேரில் பிளஸ்-2 மாணவருக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்தாரா? என அந்த ஆசிரியையிடம் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்து உள்ளனர். மாங்காட்டை சேர்ந்த 17 வயது மாணவர், சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அந்த பள்ளியில் 47 வயதான ஆசிரியை கம்ப்யூட்டர் பாடம் நடத்தி வந்தார். இவர், அந்த மாணவரிடம் உரிமை எடுத்து பழகியதாகவும், மாணவரும் ஆசிரியையுடன் அன்போடு பழகியதாகவும் கூறப்படுகிறது. பள்ளி நேரம் தவிர்த்து வீட்டில் இருக்கும்போதும், மாணவரும், ஆசிரியையும் அடிக்கடி செல்போனில் நீண்டநேரம் பேசி வந்தனர். இரவு நேரத்திலும் இந்த பேச்சு தொடர்ந்து உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவரின் தந்தை, மகனை கண்டித்தார். ஆனாலும் அவர் ஆசிரியையுடன் தொடர்ந்து பேசி வந்தார். இதுபற்றி அந்த மாணவரின் தந்தை, 2 முறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தார். மேலும் கடந்த மாதம் இதுகுறித்து மாங்காடு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். போலீசார், மாணவரையும், அவரது தந்தையையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் புகாருக்கு உள்ளான ஆசிரியையை, பள்ளி நிர்வாகம் தற்காலிக பணி இடைநீக்கம் செய்தது. இதனால் ஆசிரியை பள்ளிக்கு வரவில்லை. ஆனாலும் அவரும், மாணவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தனர். இதனால் மேலும் கோபம் அடைந்த மாணவரின் தந்தை, இதுபற்றி நொளம்பூர் போலீசில் புகார் செய்தார். அதில், “எனது மகனிடம், அவனது பள்ளி ஆசிரியை அத்துமீறி நடந்து வருகிறார். பலமுறை கண்டித்த பின்பும் தொடர்ந்து அவனிடம் செல்போனில் பேசி வருகிறார். இது மாணவனின் மனநிலையை பாதிக்கிறது. எனவே பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி இருந்தார். இதையடுத்து நொளம்பூர் போலீசார் புகாருக்கு உள்ளான ஆசிரியையை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர், நான் தற்போது சொந்த ஊரான கேரளா வந்து உள்ளேன். அடுத்த வாரம் சென்னை வரும்போது கண்டிப்பாக போலீஸ் நிலையம் வருகிறேன்” என்றார். மேலும் அவர், போலீசாரிடம் “எனக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் உள்ளார். நான் மாணவரிடம் தவறான எண்ணத்தில் பேசவில்லை. அன்போடுதான் பேசினேன். ஆனால் அவனது பெற்றோர் தவறாக நினைத்து புகார் அளித்து உள்ளதாக” கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது, “கேரளா சென்று உள்ள ஆசிரியை அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அப்போது அவரிடம், பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்து உள்ளோம். விசாரணைக்கு பிறகுதான் இதில் உள்ள உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர்.

கூட்டுறவு கடன் சங்கம், வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கூட்டுறவு கடன் சங்கம், வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் 22 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தக்காலம் முடிவுற்றதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க ஆணையிடப்பட்டது. இந்தக் குழுக்கள் தற்போது தங்களது பரிந்துரைகளை அளித்து உள்ளன. மேலும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர்களும், இவ்வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தினை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரைகளின் அடிப்படையில் பின்வரும் கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் 13 ஆயிரத்து 140 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.988-ம், அதிகபட்சம் ரூ.4,613-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதமாகும். மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனால் 4,767 பேர் பயன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,114-ம், அதிகபட்சம் ரூ.16,963-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதம். நகர கூட்டுறவு வங்கிகளுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் 1,286 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.455-ம், அதிகபட்சம் ரூ.16,485-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதம். பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனால் 1,378 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.3,200-ம், அதிகபட்சம் ரூ.12,500-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 2.57 மடங்காகும். நகர கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப் படும். இதனால் 462 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,500-ம், அதிகபட்சம் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 2.70 மடங்காகும். தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். மொத்தம் 485 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,189-ம், அதிகபட்சம் ரூ.7,815-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதமாகும். தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதன் காரணமாக 117 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,521-ம், அதிகபட்சம் ரூ.15,526-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 15 சதவீதம். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் 413 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.3,456-ம், அதிகபட்சம் ரூ.28,017-ம் கிடைக்கும். அதிகப்பட்ச ஊதிய உயர்வு 21 சதவீதம். இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22,048 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.143.72 கோடி ஆகும். இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமில்லாத திருமணத்தால் விவாகரத்து கேட்கிறேன் ‘நான் கிராமத்தான்; மனைவி ஐஸ்வர்யா நாகரிகப் பெண்’ லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப் வேதனை

‘‘என் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டேன். அதில் இருந்து இறுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்’’ என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவருக்கும் ஆர்ஜேடி எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே 12-ம் தேதி பாட்னா நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. சிறையில் இருந்து பரோலில் வந்த லாலு பிரசாத், மகன் திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தார். இந்நிலையில், பாட்னா சிவில் நீதிமன்றத்தில் மனைவியிடம் இருந்து விவகாரத்து கேட்டு தேஜ் பிரதாப் சிங் நேற்றுமுன்தினம் மனு தாக்கல் செய்தார். இதனால் லாலு குடும்பத்தினரும் ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்த லாலு பிரசாத் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாகத் தன்னை வந்து சந்திக்கும்படி தேஜ் பிரதாப் யாதவுக்கு லாலு பிரசாத் தகவல் அனுப்பி உள்ளார். அதன்படி ராஞ்சியில் உள்ள சிறையில் லாலுவைச் சந்திக்க நேற்று தேஜ் பிரதாப் சென்றார். வழியில் புத்தகயாவில் தங்கி யிருந்த போது செய்தியாளர்களிடம் தேஜ் பிரதாப் கூறியதாவது: நான் சாதாரண வாழ்க்கை வாழ் பவன், கிராமத்தான். ஐஸ்வர்யா ராய் மெட்ரோபாலிடன் நகரில் வளர்ந்தவர். டெல்லியில் படித்தவர். நாகரிகமானவர், பண்புள்ளவர். எனக்கும் அவருக்கும் பொருத்தம் இல்லை. அதனால், திருமணம் வேண்டாம் என்று நான் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். யாரும் நான் சொல்வதை கேட்கவில்லை. என் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டேன். திருமணமான நாள் முதல் நான் இறுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். ஒருவர் எவ்வளவு நாட்களுக்குதான் இப்படி வாழ முடியும். என்னுடைய விவாகரத்து மனுவை வாபஸ் பெற போவதில்லை. இவ்வாறு தேஜ் பிரதாப் கூறினார். இதுகுறித்து ஐஸ்வர்யா ராயின் கருத்தை அறிய செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தேஜ் பிரதாப் சிங்கின் மனு, நவம்பர் 29-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Saturday, November 3, 2018

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இருந்து டைரக்டர் கே.பாக்யராஜ் ராஜினாமா ‘சர்கார்’ பட விவகாரத்தால் திடீர் முடிவு

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நடிகர்-டைரக்டர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார். ‘சர்கார்’ பட விவகாரம் தொடர்பாக அவர் இந்த திடீர் முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ‘சர்கார்’ பட விவகாரம் விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், சன் டி.வி. தயாரிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கும் படம், ‘சர்கார்.’ இதில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். “சர்கார் படத்தின் கதை என்னுடையது” என்று வருண் ராஜேந்திரன் என்பவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். இந்த புகார் பற்றி சங்க தலைவர் டைரக்டர் கே.பாக்யராஜ் விசாரித்து, சர்கார் படத்தின் கதையும், வருண் ராஜேந்திரனின் கதையும் ஒன்றுதான்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து வருண் ராஜேந்திரன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இரு தரப்பினரும் சமரசமாக போகிறோம் என்று உறுதி அளித்ததன் பேரில், இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. பாக்யராஜ் அறிக்கை இந்த நிலையில், திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், எனது பணிவான வணக்கம். போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை நமது சங்கத்துக்கு தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். நானும் சந்தோஷமாக பொறுப்பு ஏற்றுக் கொண்டு, மனசாட்சியுடன், நேர்மையாக செயல்படுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. திடீரென்று, ‘சர்கார்’ படம் சம்பந்தமாக சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. நடவடிக்கை அந்த புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் உண்மை இருப்பதாக தெரிந்ததால், அவருக்கு நியாயம் வழங்க, பொறுப்பில் இருக்கிற முக்கியமானவர்கள் எல்லோரையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து, நல்லபடியாக நியாயமாக அதை செயல்படுத்தவும் முடிந்தது. ஆனால் அதில் பல அசகவுரியங்களை நான் சந்திக்க வேண்டி வந்தது. அதற்கு, நான் தேர்தலில் நின்று ஜெயிக்காமல் நேரடியாக தலைவர் பொறுப்புக்கு வந்தது தான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். சங்கத்தில் சில தவறான நடவடிக்கைகள் என் கவனத்துக்கு வந்தது. நிறைய விதிமுறைகளையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாம் சரி செய்தால் ஒழிய சங்கத்தின் பெயரையும், சங்க உறுப்பினர்களின் நலனையும் காப்பாற்ற முடியாதோ என்று தோன்றுகிறது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டியதை ஒரு எழுத்தாளனாகிய என்னுடைய தலையாய கடமையாக நினைக்கிறேன். அதற்கு ஒரே வழி நான் உள்பட என்னை மாதிரியே போட்டி இல்லாம பதவிக்கு வந்த எல்லோருமே ராஜினாமா செய்துவிட்டு முறையாக தேர்தல் நடத்தி, மறுபடியும் பொறுப்புக்கு வருவதுதான். ஆனால் மற்றவர்களை நிர்ப்பந்திக்கும் உரிமை எனக்கு கிடையாது. தேர்தல் சங்கம் இருக்கிற நிலைமையிலே, இப்போது தேர்தல் நடத்துவது வீண் செலவு என்று நிறையப்பேர் அபிப்ராயப்படலாம். ஆனா சங்கமே வீணாப் போவதை விட செலவு வீணாவது தப்பில்லை. என்னுடைய இந்த அபிப்ராயத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் ராஜினாமா செய்யலாம். அது எப்படி நடக்கிறது என்று பார்த்துவிட்டு அதற்குப் பிறகு தேர்தலை நடத்த முடிவு பண்ணினால், நான் அதில் மீண்டும் தலைவர் பதவிக்கு முறையாக நின்று, மெஜாரிட்டி வாக்குகளுடன் ஜெயித்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கடமையுடன் செயல்படுகிறேன். எனக்கு நேர்ந்த அசகவுரியங்கள் என்ன? ஒழுங்கீனங்கள் என்ன என்பதை சங்க நலன், நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பவில்லை. அத்துடன், முருகதாசிடம் நான் கெஞ்சியும் உடன்படாததாலே, வேறு வழியே இல்லாமல் சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப்பெரிய படமான சர்கார் படக்கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தபட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் பாக்யராஜ் கூறி இருக்கிறார். ராஜினாமாவை ஏற்க மறுப்பு கே.பாக்யராஜின் ராஜினாமாவை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஏற்க மறுத்து விட்டது. இது தொடர்பாக சங்க பொதுச்செயலாளர் மனோஜ்குமார் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “பாக்யராஜ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தபோது, அனைவரும் ஏற்க மறுத்து விட்டார்கள். பாக்யராஜே தலைவராக தொடர வேண்டும் என்று அனைவரும் தொலைபேசி மூலம் தெரிவித்த கருத்தே செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டு விட்டது. எனவே, எப்போதும் போல் பாக்யராஜே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்கிறார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.