ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் பணி இடைநீக்கம் துணைவேந்தர் நடவடிக்கை

நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை பணி இடைநீக்கம் செய்து துணைவேந்தர் பாஸ்கர் உத்தரவிட்டார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல்துறை மூத்த பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜூ. இவர், ஏற்கனவே அந்த துறை தலைவராக பணியாற்றினார். கல்லூரி வளர்ச்சி குழு தலைவராகவும் உள்ளார். இவர் ஒரு ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர் சங்கம் சார்பில் ஒரு செல்போன் உரையாடல் அடங்கிய ஆடியோ சி.டி. மற்றும் புகார் மனு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து துணைவேந்தர் பாஸ்கர் உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். அந்த குழுவினர், பேராசிரியர் கோவிந்தராஜூ மற்றும் அந்த ஆராய்ச்சி மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின்னர் அந்த குழுவினர், துணைவேந்தர் பாஸ்கரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் கூறும்போது, ‘பல்கலைக்கழக தகவல் தொடர்பியல் துறையை சேர்ந்த பேராசிரியர் கோவிந்தராஜூ மீதான பாலியல் புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக உயர்மட்ட குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில் பேராசிரியர் கோவிந்தராஜூவை பணி இடைநீக்கம் செய்துள்ளேன். மேலும் இந்த புகார் மீது விசாகா கமிட்டி விசாரணை நடத்துகிறது. அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் கோவிந்தராஜூ இன்னும் 1½ ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments