‘விண்ணப்ப எண்ணை வைத்தே நடவடிக்கையை அறியலாம்’ இணையவழி பட்டா மாறுதல் படிவத்துக்கு ஒப்புகை சீட்டு முறை புதிய நடைமுறை நாளை முதல் அமல்

இணையவழி பட்டா மாறுதல் படிவத்துக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் புதிய முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்ட விண்ணப்ப எண்ணை வைத்தே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று அறிய முடியும். இதுகுறித்து தமிழக அரசு பத்திர பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பட்டா மாறுதல் படிவம் தமிழக அரசின் பத்திர பதிவு துறைக்கான ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ‘ஸ்டார் 2.0’ எனும் திட்டம் கடந்த பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டா மாறுதல் படிவம் (படிவம் 6) அனுப்பும் வசதி கணினி மயமாக்கப்பட்டு, ஆவண பதிவுக்குப்பின் பட்டாமாறுதல் படிவத்தை இணையவழி வருவாய்த்துறைக்கு உடனுக்குடன் அனுப்பி, அதன் ஒப்புகைச்சீட்டு எண்ணுடன் ஆவணதாரருக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த வசதி செய்து தந்தபோதும், மீண்டும் இதே சொத்துக்கு பொது சேவை மையத்தில் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பங்கள் ஆவணதாரர்களால் அனுப்பப்படுகின்றன. இதனால் ஒரே சொத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறும் நிலை உருவாகிறது. ஒப்புகை சீட்டு வசதி இதனைத் தவிர்க்கும் விதமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஒப்புகைச் சீட்டானது, அசல் ஆவணம் திரும்பப் பெறும்போது சார்பதிவாளரால் கையொப்பமிட்டு வழங்கப்படும். ஒப்புகைச் சீட்டில் வருவாய்த்துறையால் அளிக்கப்பட்ட விண்ணப்ப எண் அச்சிடப்பட்டிருக்கும். http://www.ese-rv-i-ces.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ‘ Kn-ow your ap-p-l-i-c-at-i-on status ’ என்பதில் இந்த விண்ணப்ப எண்ணை உள்ளடு செய்தோ, செல்போனில் AM-MA ese-rv-i-ce of la-nd re-c-o-rds என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, இதில் விண்ணப்ப எண்ணை உள்ளடு செய்தோ மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிந்துகொள்ளலாம். அசல் ஆவணம் பதிவுப்பணிகள் முடிவடைந்து அசல் ஆவணம் திரும்ப வழங்கப்படும் தேதி எதுவென்று, பத்திரப்பதிவின் போது வழங்கப்படும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அன்றைய தேதியில் ஆவணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் போது பட்டா மாறுதல் படிவம் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டை தவறாமல் பொதுமக்கள் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வசதி தற்போது கிராம புல எண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இச்சேவை விரைவில் நத்தம் மற்றும் நகர புல எண்களுக்கு விரிவுபடுத்தப்படும். தற்போது நத்தம் மற்றும் நகர புல எண்களுக்கு ஆவணப்பதிவின்போது ஆவணதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட பட்டா மாறுதல் படிவங்கள், சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து வாரந்தோறும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிடையாக வழங்கப்பட்டுவரும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். உட்பிரிவு கட்டணம் தேவையில்லை ஆவணப்பதிவின் போது உட்பிரிவு தேவைப்படும் இனங்களுக்கு உட்பிரிவுக் கட்டணம் பதிவுத்துறையால் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட கட்டண விவரங்கள் இணையவழி பட்டா மாறுதல் படிவத்துடன் வருவாய்த்துறைக்கு அனுப்பப்படுகிறது. ஆகவே, தனியாக உட்பிரிவுக் கட்டணம் வருவாய்த்துறையில் செலுத்த தேவையில்லை. பொதுமக்கள் யாரும் ஆவணப்பதிவு முடிந்தவுடன் தனியாக பட்டா மாறுதல் படிவங்களை அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறைக்கு அனுப்ப தேவையில்லை. பட்டா மாறுதல் தொடர்பாக புகார் இருந்தால் 1800 425 1333 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இந்த புதிய நடைமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments