‘ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்’ ‘என்னையும், உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது’ ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம்

என்னையும், உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்றும், ஆண்டவன் நமக்கு துணை இருப்பான் என்றும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை அரசியல் கட்சியை தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையை விமர்சனம் செய்து தி.மு.க. நாளிதழான முரசொலி கட்டுரை வெளியிட்டது. ரஜினிகாந்தின் கேள்விகளுக்கு ரசிகர் ஒருவர் பதில் சொல்வது போல அந்த கட்டுரை அமைந்திருந்தது. தி.மு.க.வின் இந்த மறைமுக சாடல் ரஜினிகாந்தை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் உலுக்கியது. இதற்கிடையே, ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் திடீரென்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தி.மு.க. அதிகாரபூர்வ நாளிதழில் வந்த கட்டுரை குறித்து நிர்வாகிகள் சிலர் ரஜினிகாந்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மீண்டும் சேர்ப்பு ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து சமீபத்தில் சில நிர்வாகிகள் நீக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி தலைமைக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்களை மன்றத்தில் மீண்டும் சேர்ப்பது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். மேலும் விரைவில் தொடங்க உள்ள தனது கட்சிக்கு என்ன பெயர் வைப்பது, கட்சி கொடி உருவாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ரஜினிகாந்த் தொடர்ந்து 4 நாட்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். இந்த கூட்டத்திற்கு, பின்னர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அந்த கடிதத்தில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:- பிரிக்க முடியாது என்னை வாழ வைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை போன்ற ரசிகர்களை நான் அடைவதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் (ரசிகர்கள்) யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Comments