தொழிலாளி காரில் கடத்திக்கொலை: மனைவி கள்ளக்காதலனுடன் கைது பரபரப்பு வாக்கு மூலம்

திருப்பூரில் தொழிலாளியை காரில் கடத்திக்கொலை செய்த மனைவி மற்றும் அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அழுகிய நிலையில் பிணமாக... திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் ராமு (வயது 46). இவர் புதுப்பையில் உள்ள இரும்பு பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கவிதா (42). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக இருந்து வந்தார். இவர்களுடைய மகன் நாமக்கல்லில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது இவர்கள் காங்கேயம் களிமேடு பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூலனூர் அருகே நல்லசெல்லிபாளையத்தில் உள்ள மக்காச்சோளக்காட்டில், அழுகிய நிலையில் நிர்வாணமாக ராமு பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்தும் மூலனூர் போலீசார் விரைந்து சென்று ராமு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கல்லால் தாக்கப்பட்டு ராமு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூலனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். ராமு கொலை தொடர்பாக அவருடைய மனைவி கவிதாவிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவரை மூலனூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், கவிதாவும், அவருடைய கள்ளக்காதலன் தாராபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஹரிதாசும் (41) சேர்ந்து ராமுவை காரில் கடத்தி சென்று மக்காச்சோளக்காட்டில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. கள்ளக்காதல் இது பற்றி கவிதா போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் பின்வருமாறு:- எனது தங்கை தாராபுரத்தில் குடியிருந்து வருகிறாள். அவளை பார்க்க நான் அடிக்கடி தாராபுரம் செல்வேன். அப்போது எனது தங்கையின் வீட்டின் அருகில் அலுவலகம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ஹரிதாஸ் (41) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம், எங்களுக்கு வீடும், இடமும் வாங்க வேண்டும் என்றும், அதற்காக இடம் இருந்தால் சொல்லுங்கள் என்று தெரிவித்தேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்தோம். ஹரிதாசை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே நான் அடிக்கடி தாராபுரம் செல்வேன். இந்த சந்திப்பு எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நெருக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவ்வப்போது ஹரிதாசை காங்கேயத்தில் உள்ள எனது வீட்டிற்கு வரவழைத்து, இருவரும் தனிமையில் இருப்போம். ஒருநாள் நாங்கள் 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை என் கணவர் ராமு பார்த்து விட்டார். அதன்பின்னர் ஹரிதாசுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு அவர் கூறினார். ஆனாலும் நான் கைவிடவில்லை. கணவர் உயிரோடு இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதால், அவரை கொலை செய்வது என திட்டம் தீட்டி, அது குறித்து ஹரிதாசிடம் கூறினேன். இதையடுத்து கடந்த வாரம் நானும், ஹரிதாசும் ஒரு காரில் ராமு வேலை செய்யும் புதுப்பைக்கு சென்றோம். அங்கு வேலை முடிந்து மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ராமுவை காரில் கடத்தினோம். கல்லால் அடித்து கொலை பின்னர் அவரை நல்லசெல்லிபாளையம் பகுதியில் உள்ள மக்காச்சோள காட்டிற்குள் அழைத்து சென்றோம். அங்கு வைத்து அவரை இருவரும் கையாலும், கட்டையாலும் தாக்கினோம். இதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து ராமுவின் முகம், தலை ஆகிய பகுதியில் அடித்து கொலைசெய்தோம். பின்னர் இந்த கொலையில் இருந்து தப்பிக்கவும், ராமுவை வேறு யாராவது கொலை செய்து இருப்பார்கள் என்று போலீசாரை நம்ப செய்யவும், ராமு அணிந்து இருந்த ஆடையை களைந்து அவரை நிர்வாணமாக்கினோம். பின்னர் அந்த ஆடையை மக்காச்சோளக்காட்டின் மற்றொரு பகுதியில் வீசி விட்டு நாங்கள் சென்று விட்டோம். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வசமாக சிக்கிக்கொண்டோம். இவ்வாறு கவிதா போலீசில் வாக்கு மூலம் அளித்தார். இதையடுத்து கவிதாவையும், அவருடைய கள்ளக்காதலன் ஹரிதாசையும் போலீசார் கைது செய்து தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

Comments