18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 30 நாளில் மேல்முறையீடு செய்யாவிட்டால் ஜனவரிக்குள் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் அறிவிப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், 30 நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் வருகிற ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் ப.தனபால் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் மற்றொரு நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். தகுதி நீக்கம் செல்லும் என்று இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று சுந்தரும் தீர்ப்பு கூறி இருந்தனர். தீர்ப்பு மாறுபட்டதாக இருந்ததால் இந்த வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்தியநாராயணன் இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறிய அவர், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடையையும் நீக்கினார். தலைமை தேர்தல் கமிஷனர் பதில் இந்த தீர்ப்பை எதிர்த்து 18 பேர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் மேல்முறையீடு செய்யாவிட்டால் 6 மாதங்களுக்குள் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தால் எப்போது நடத்த வாய்ப்பு இருக்கிறது? என்பது பற்றி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத்திடம் ‘தந்தி டி.வி.’ சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து ஓ.பி.ராவத் கூறியதாவது:- 30 நாள் அவகாசம் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் நகல் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அதை படித்துப் பார்த்தோம். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் உள்ளது. அதுவரை நாங்கள் காத்து இருப்போம். 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்குவோம். 18 தொகுதிகளும் ஓர் ஆண்டுக்கும் மேலாக காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜனவரிக்குள் இடைத்தேர்தல் ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கும் வருகிற ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், இந்த 2 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு ஓ.பி.ராவத் கூறினார். மீண்டும் போட்டியிடலாம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் அந்த தொகுதிகளில் மீண்டும் போட்டியிடலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஓ.பி.ராவத் பதில் அளிக்கையில், “18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அவர்கள் தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. போட்டியிடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை” என்றார்.

Comments