பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான  கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் பணியில் இருந்து விடுவிப்பு திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி நடவடிக்கை

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் குமார் தாக்கூரை பணியில் இருந்து விடுவித்து ஆட்சியர் கந்தசாமி நேற்று மாலை உத்தரவிட்டார். திருவண்ணாமலை அடுத்த கனந்தம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வராக குமார் தாக்கூர் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணியாற்றியபோது, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள், முதல்வர் குமார் தாக்கூருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, பள்ளி முதல்வர் குமார் தாக்கூரை, பணியில் இருந்து விடுவித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மாலை உத்தரவிட்டார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments