மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய மூன்றாவது கை

மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய மூன்றாவது கை தொகுப்பு: ஹரிநாராயணன் ‘ஒரு நேரத்துல ஒரு வேலையைத்தான் செய்ய முடியும். ஒரே நேரத்துல பத்து வேலையைச் செய்ய எனக்கு என்ன பத்து கையா இருக்கு?’ என்று நமக்கு நெருங்கிய யாரோ ஒருவர், ஏதோ ஒரு சமயத்தில் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கு காரணம் என்ன? ஒரு சராசரி மனிதனால், ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய முடியும் என்பதுதான் இயல்பு அல்லது இயற்கை. ஆனால் நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருப்பது 21-ம் நூற்றாண்டில்! வேகமும், பன்முகத் திறமையும் இந்த நூற்றாண்டின் அடையாளங்கள் என்றே சொல்லலாம். இன்றைய நவீன வாழ்க்கைக்கு நமக்குத் தேவைப்படுகிற கூடுதல் வேகத்தையும், பன்முகத்தன்மையையும் ரோபாட்டிக்ஸ் மூலமாக தயாரிக்கப்படும் எந்திர மனிதர்கள் அல்லது கருவி களால் நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்கிறார்கள் ரோபாட்டிக்ஸ் துறை விஞ்ஞானிகள். கை கால்களை இழந்தவர்களுக்கு செயற்கையான (கட்டைக்) கை-கால்களை உருவாக்கிய நூற்றாண்டை நாம் கடந்து வந்து சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இப்போது, மூளையால், எண்ணங்களால் கட்டுப் படுத்தி பயன்படுத்தக்கூடிய அதி நவீன செயற்கை கை-கால்களைப் பொருத்திக்கொண்டு, தத்தம் அன்றாட வேலைகளை உதவியின்றி மேற்கொள்ளும் பல மாற்றுத் திறனாளிகளை நம்மால் காண முடிகிறது. மூளையால் கட்டுப் படுத்தப்படும் செயற்கை பாகங்களைப் பயன்படுத்துவோருக்கு, இயற்கையான கை-கால்கள் இருப்பது போன்ற ஒரு உணர்வை அது ஏற்படுத்துவதாக கூறப் படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கை-கால் இழக்காத சராசரி மனிதர் களுக்கு பயன்படக்கூடிய, மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ‘மூன்றாவது’ கையை உருவாக்கி, இயற்கையான இரண்டு கை களையும், மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய மூன்றாவது கையையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட வேலை களைச் சுலபமாக செய்ய முடியும் என்று நிரூபித்து அசத்தியிருக்கிறார்கள் ஜப்பான் நாட்டிலுள்ள அட்வான்ஸ்டு டெலி கம்யூனிகேஷன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (Advanced Telecommunications Research Institute) ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட, மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கை உடல் பாகங்கள், உடல் பாகங்களை இழந்தவர்களுக்கு உதவும் வகையிலேயே உருவாக்கப்பட்டன. ஆனால், கை-கால் இழப்பு இல்லாத சராசரி மனிதர்களுக்கு, மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய, கூடுதலான ஒரு கை, காலை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கம் கொண்ட (supernumerary robotic limb, SRL) எனும் ரோபாட்டிக்ஸ் துறை சார்ந்த விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த மூன்றாவது கை. இந்த ஆய்வில் பங்குபெற்ற சுமார் 15 தன்னார்வலர்களுக்கு ஒரு மூன்றாவது கை இருப்பது போன்ற ஒரு அமைப்பு முதலில் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் ஒரு நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மூளையின் செயல்பாடுகளை கண்காணிக்கக் கூடிய ஒரு பிரத்தியேகமான தொப்பி அவர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் பொருத்தப்பட்டது. அந்த தொப்பியானது, தன்னார்வலரின் மூளையிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை முதலில் ஒரு கம்ப்யூட்டருக்கு அனுப்பும் திறன்கொண்டது. பின்னர் அந்த தகவல்கள் மூன்றாவது கையின் செயலாக மாறியது இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஆய்வில் கலந்துகொண்ட தன்னார்வலர்கள் அனைவரும் பின்வரும் இரண்டு வேலைகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். (1) தன்னார்வலர்கள் தங்களுடைய இயற்கையான கைகளால் ஒரு பலகையின் மீது ஓடும் பந்தை குறிப்பிட்ட சில புள்ளிகளில் நிறுத்த வேண்டும். (2) மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய மூன்றாவது கையால் ஒரு தண்ணீர் பாட்டிலை முதலில் பிடிக்க வேண்டும், பிறகு விட்டுவிட வேண்டும். இந்த இரண்டு வேலைகளும் சில சமயங்களில் தனித்தனியாகவும், சில சமயங்களில் ஒரே சமயத்திலும் செய்யுமாறு தன்னார்வலர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆய்வில் பங்குபெற்ற அனைவரும், சுமார் 20 முயற்சிகளில், மூன்று கைகளைப் பயன் படுத்தி கொடுக்கப்பட்ட இரண்டு வேலை களையும் சுமார் 75 சதவீதம் வெற்றிகரமாக முடித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது, இரண்டு கைகளால் செய்யவே முடியாத இரண்டு செயல்களை, மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய மூன்றாவது கையைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் செய்ய முடியும் என்று இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, மல்டி டாஸ்கிங் (Multitasking) என்று சொல்லக் கூடிய, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்யும் திறனை அறிவியல்பூர்வமாக பார்த்தால், நம் மூளையானது ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வதில்லை. மாறாக, மல்டி டாஸ்கிங்கின் போது மேற்கொள்ளப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ‘ஒன்றிலிருந்து மற்றொன்று’ என்று தொடர்ச்சியாக நம் மூளையானது மாறி மாறி கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ள (supernumerary robotic limb) தொழில்நுட்பமானது, நமது மூளை ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போதே, நாம் செய்ய விரும்பும் மற்றொரு வேலைக்கான எண்ணங்களை படித்து பின்னர் அதற்கு செயல் வடிவமும் கொடுக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மிகவும் நவீன செயற்கை பாக தொழில்நுட்பமான இந்த SRL, மனித மூளையின் பன்முகத் திறனை, மல்டி டாஸ்கிங் திறனை மேம்படுத்தும் என்றும், மேலும் அதற்கான பயிற்சியை மூளைக்கு அளிக்கும் என்றும் கூறுகின்றனர் இதனை உருவாக்கியுள்ள ஜப்பானிய ஆய்வாளர்கள்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments