இ-விசா வசதியை 165 நாடுகளுக்கு விரிவுபடுத்தியது மத்திய அரசு

மத்திய அரசு தற்போது 165 நாடுகளுக்கு இ-விசா வசதியை விரிவுபடுத்தி உள்ளது. இ-விசா திட்டம் மத்திய அரசு, 2014-ஆம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி ஆன்லைன் வாயிலாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் இ-விசா திட்டத்தை அறிமுகம் செய்தது. அப்போது இத்திட்டத்தின் கீழ் சுமார் 40 வெளிநாடுகள் இணைக்கப்பட்டன. 2015 ஆகஸ்டு மாதத்தில் 113 நாடுகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 2016 மார்ச் மாதத்தில் இந்த வசதி மேலும் 37 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதனால் மொத்தம் 150 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இ-விசா வசதி கிடைத்தது. பின்னர் இத்திட்டத்தில் ஜப்பான் உள்பட மேலும் சில நாடுகள் இணைக்கப்பட்டன. இதனையடுத்து மொத்தம் 163 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இ-விசா வசதியை பெற்றனர். இந்நிலையில் இப்போது 165 நாடுகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் கீழ் வரும் வெளிநாட்டினர் ஒருவர் இந்தியாவில் 2 மாதங்கள் வரை தங்க முடியும். 2015-ஆம் ஆண்டில் இ-விசா வசதியின் கீழ் வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 4,45,300-ஆக இருந்தது. 2016-ஆம் ஆண்டில் அது இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்து 10,79,696-ஆக அதிகரித்தது. 2017-ல் 17 லட்சமாக உயர்ந்தது. நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 25 லட்சமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இ-விசா வசதியின் கீழ் வருகை தரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த வசதிக்கான கட்டண விகிதங்களை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. மூன்று ஆண்டுகளில் மொத்தம் 2 கோடி வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் மொத்தம் 1.02 கோடி வெளிநாட்டுப் பயணிகள் வருகை தந்தனர். இவர்களில் 17 லட்சம் பேர் இ-விசா வசதியின் கீழ் வந்தார்கள். மருத்துவ சுற்றுலா மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவினம் குறைவாக உள்ளது. இதனால் மருத்துவ சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினருக்கும், வணிக பிரிவினருக்கும் கூட இ-விசா வசதி வழங்கப்படுகிறது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments