நடத்துனர் இல்லாமல் அரசு பஸ்கள் இயக்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

நடத்துனர் இல்லாமல் தமிழக அரசு பஸ்களை இயக்குவதை எதிர்த்து தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டில், மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மோட்டார் வாகன சட்டத்தின்படி பொதுமக்கள் பயணம் செய்யும் பஸ்சில் கண்டிப்பாக நடத்துனர் இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு தற்போது ஓட்டுனர் மட்டும் உள்ள பஸ்களை இயக்குகிறது. எனவே மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பாக அரசு போக்குவரத்து கழகங்களில் நடத்துனர்கள் இல்லாமல் பஸ்களை இயக்கக்கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நடத்துனர்கள் இல்லாமல், ஓட்டுனரை மட்டும் வைத்து அரசு பஸ்களை இயக்குவதில் எந்த தவறும் இல்லை. இந்த திட்டம் பல மாநிலங்களில் உள்ளன. அதே நேரம், எல்லா அரசு பஸ்களும் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படவில்லை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு, இடையில் நிற்காமல் செல்லும் ‘பாயிண்ட் டூ பாயிண்ட்’ பஸ்கள் மட்டுமே நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறது. பஸ்சில் ஏறும்போதே பயணிகள் டிக்கெட் எடுத்து விடுவதால், நடத்துனர் தேவையில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், ‘சட்ட விதிகளின்படி நடத்துனர்கள் இல்லாமல் பஸ்களை இயக்குவதற்கு எந்த தடையும் இல்லை. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இதுபோன்ற நவீன தொழில்நுட்ப சேவைகளை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இடையில் நிற்காமல் செல்லும் ‘பாயிண்ட் டூ பாயிண்ட்’ சேவை வழங்கும் பஸ்களில் ஏறும் பயணிகள் முதலிலேயே ‘டிக்கெட்’ எடுத்து விடுவதால், அதை ஓட்டுனரே கொடுத்துவிடுவார். அந்த பஸ்களில் நடத்துனர் தேவையில்லை. இதுதொடர்பான அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments