தனிநபர் கடன் சேவையை தொடங்கும் முத்தூட் பைனான்ஸ்

தங்கம் மீதான கடன்களை வழங்கிவரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் தனிநபர் கடன் வழங்கும் வகையில் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் மாத ஊதியம் பெறுபவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடனுதவி பெற முடியும். கேரளா மற்றும் கர்நாடகாவில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டம் தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியா முழுவதும் ரூ.300 கோடி அளவுக்கு கடன் வழங்க திட்டமிட்டுள்ள முத்தூட் பைனான்ஸ், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி அளவுக்கு கடன் வழங்க இருக்கிறது. மெட்ரோக்களில் ரூ.20,000 அல்லது அதற்குமேல் மாத ஊதியம் பெறுபவர்கள், பிற பகுதிகளில் ரூ.15,000 அல்லது அதற்குமேல் மாத ஊதியம் பெறுபவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெற முடியும். கடனுக்கான வட்டி விகிதம் 14 சதவீதத்திலிருந்து 21 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்காத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தியா முழுவதும் 4,500 கிளைகளை கொண்டுள்ள முத்தூட் பைனான்ஸ், தனது 60 சதவீத கிளைகளை கிராமப்புற பகுதிகளில் அமைத்துள்ளதாகவும், கிளை அமைந்துள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் எம் அலெக்சாண்டர் கூறினார். அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.3,000 கோடி மதிப்பிலான நிறுவனமாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments