தமிழகம் முழுவதும் படிப்படியாக பேட்டரி, மின்சார பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மாநகர பேருந்துகள் படிப்படியாக பேட்டரி, மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளாக மாற்றப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பேசியதாவது: கடந்த 2016-17ல் அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் பேருந்துகளில் 515 பேருந்துகள் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மற்ற பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டில் மேலும் 3 ஆயிரம் பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளையும் படிப்படியாக பேட்டரி அல்லது மின்சாரத்தால் இயக்கப்படும் பேருந்துகளாக மாற்ற வழிவகை செய்யப்படும்.சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். போக்குவரத்து சேவையை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் பணிக்குழு உருவாக்கப்படும். போக்குவரத்துக் கழகங்களில் விபத்து இழப்பீடு, விபத்து தடுப்பு, சுங்கக் கட்டணத்தை நிர்வகிக்க ஒருங்கிணைந்த அறக்கட்டளை உருவாக்கப்படும். போக்குவரத்து துறையில் முதல்முறையாக, ஜிபிஎஸ் கருவி மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், வருகை நேரத்தை பயணிகள் அறியும் வசதி ஏற்படுத்தப்படும். மாநகரப் பேருந்துகளில் தொலைக்காட்சி வாயிலாக பொழுதுபோக்கு , விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். போக்குவரத்து துறை பயன்பாட்டுக்காக ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கப்படும். போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பான பணிகளுக்கு இணையதளம் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்படும். இணையதளம் வாயிலாக நடத்துநர் உரிமம் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments