ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்கான உதவித் தொகை அரசால் தொடர்ந்து வழங்கப்படும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தால் ஏற்படும் நிதிச்சுமையை மாநில அரசே ஏற்று தொடர்ந்து செயல்படுத்தும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மானியத்தின் மீது பேசிய திட்டக்குடி திமுக எம்எல்ஏ கணேசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தியுள்ளது தொடர்பாக பேசினார். இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது: மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, ஆதிதிராவிடர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தில் மட்டும் மாநில அரசுக்கு பொறுப்புத் தொகை (committed liability) நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நிதி பகிர்வு செய்யப்படுகிறது. கடந்த 2016-17-ல் நிலுவைத் தொகை ரூ.1,841 கோடியே 69 லட்சமாக இருந்தது. இந்நிலையில் 2017-18 ம் ஆண்டில் இத்திட்டத்துக்கான தேவை ரூ. 1,698 கோடியே 83 லட்சமாக உயர்ந்தது. ஆனால், மத்திய அரசு வழங்கியது ரூ.434 கோடியே 48 லட்சம் மட்டுமே. இந்நிலையில், இந்த ஆண்டு திருத்திய வழிகாட்டு முறைகளை வெளியிட்ட மத்திய அரசு, நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி சலுகையை ரத்து செய்தது. மேலும், மாநில அரசு பொறுப்பேற்க வேண்டிய ரூ.353 கோடியே 46 லட்சத்தை உயர்த்தி, ரூ.1,526 கோடியே 46 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதற்கு மேல் கூடுதலாக ஏற்படும் தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்கும். அதேபோல், மாணவர்களின் வங்கிக்கணக்குக்கே தொகை முழுவதையும் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்நிலையில் தற்போது, 2017-18ம் ஆண்டுக்கான முதலாண்டு மாணவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை, நிர்வாக கட்டணம் தவிர மற்ற தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டுக்கான சேர்க்கை முடிந்தபின், உதவித்தொகை கணக்கிடப்பட்டு மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறி முறைகள்படி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உதவித்தொகை முழுவதையும் மாநில அரசே வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள சூழலில், நிதிச்சுமையை அரசே ஏற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் கருதி செயல் படுத்தும். அதேநேரம், இத்திட்டத்தின் நிதிப்பகிர்வை 60-க்கு 40 என்ற சதவிகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு துணை முதல்வர் தெரிவித்தார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments