மக்களை ஈர்க்கும் ‘பிசாசு நகரம்'!

ஆஸ்திரேலியாவில் ‘பிசாசு நகரம்’ என்று வர்ணிக்கப்படும் ஊருக்கு, அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி அதிகம் பேர் சுற்றுலா செல்கிறார்கள். ஆஸ்பெஸ்டாஸ் சுரங்கம் ஒன்றை ஒட்டி அமைந்திருக்கும் அந்த நகரம், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. இந்த ‘பிசாசு நகரத்துக்கு’ச் செல்ல வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். ஆனால் மக்கள் அதைக் கேட்பதாக இல்லை. சுற்றுலாப் பயணிகள், திகிலூட்டும் இடங்களைப் பார்க்கும் ஆர்வம் கொண்ட மக்கள் எனப் பலரும் தினமும் இந்த விட்டிநூம் நகரத்துக்கு வருகிறார்கள். இங்குள்ள ஆஸ்பெஸ்டாஸ் சுரங்கம் 1970-ம் ஆண்டிலேயே மூடப்பட்டுவிட்டது. இந்தச் சுரங்கம், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே 1,100 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. சரி, இது ஏன் பிசாசு நகரம் என்று அழைக்கப்படுகிறது? ஒரு காலத்தில் இது பரபரப்பான சுரங்கப்பகுதியாக இருந்தது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்தச் சுரங்கத்தில் பணிபுரிந்தனர். ஆனால், இந்தச் சுரங்கத்தால் ஏற்பட்ட தாகத்தால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். அதைத் தொடர்ந்து இந்தப் பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளான பகுதியாக அறிவிக்கப்பட்டது. இப்பகுதிக்குச் செல்வதும் தடை செய்யப்பட்டது. உக்ரைனின் செர்னோபில், இந்தியாவின் போபாலில் நடந்த விபத்தைவிட மோசமான விபத்து அது. ஆஸ்திரேலிய அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் சுகாதார பெரும் விபத்து என்று அதை வர்ணித்தது. விட்டிநூம் நகரத்துக்குச் செல்வது பாதுகாப்பானது இல்லை. அங்குள்ள சுற்றுப்புற மாசுபாட்டால் உடல்நலக் கேடுகள் ஏற்படலாம், அங்கு செல்லாதீர்கள் என்று எச்சரிக்கும் வண்ணம் வழி நெடுகிலும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பலரும் அதைக் கண்டுகொள்வதில்லை. ஒரு சுவாரசியத்துக்காக தினமும் திரளான மக்கள் விட்டிநூம் நகரத்துக்குச் செல்கிறார்கள். சிறிது நேரம் அங்கு இருப்பதால் ஒன்றும் ஆகிவிடாது என்பது அவர்கள் கருத்து. தடைசெய்யப்பட்ட குறிப்பிட்ட சுரங்கம், அருவிகள் நிறைந்த கரிஜினி தேசியப் பூங்காவுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லி ஒயிட் தனது தோழியுடன் கரிஜினி தேசியப் பூங்காவுக்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் மட்டும் இந்தச் சுரங்க பகுதியைப் பார்வையிட்டுள்ளார். தான் அந்தப் பகுதிக்குச் செல்லும் முன்பே அப்பகுதி குறித்து படித்துவிட்டு தான் சென்றேன் என்கிறார் ஆஷ்லி ஒயிட். அந்தப் பகுதி குறித்த எந்தத் தகவலும் இவருக்கு அச்சமூட்டவில்லை. தைரியமாக அங்கு சென்று வந்திருக்கிறார். சிறிது நேரத்தை அங்கு கழிப்பதால் ஒன்றும் பிரச்சினையில்லை என்று ஒயிட் கூறுகிறார். மேலும் அவர், அந்த பிசாசு நகரத்தையும், கைவிடப்பட்ட அதன் சுற்றுப்புறத்தையும் பார்ப்பது மிக சுவாரசியமான அனுபவமாக இருந்தது என்றார். பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் ஒயிட் அந்த சுரங்கப் பகுதிக்குச் சென்று இருந்தாலும், அவரது தோழி அந்நகரத்துக்கு வரத் தயாராக இல்லை. இந்தச் செயல் மிகவும் ஆபத்தானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அந்தப் பகுதி முழுவதும் ஆஸ்பெஸ்டாஸ் மாசு கலந்து இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். ஒயிட்டை போல சிலர் அந்த சுரங்கத்தைப் பார்வையிட்டு, அதை படம்பிடித்து யுடியூபிலும் பதிவேற்றி இருக்கிறார்கள். அந்தக் காணொளிக்கு இருவகையான கருத்துகளும் வந்திருக்கின்றன. சிலர் அதை தீரமிக்க செயல் என பாராட்ட, சிலரோ அதை கடுமையாக கண்டித்திருக்கின்றனர். அக்காணொளியை சமூக ஊடகத்தில் கண்ட அரசு அதிகாரிகள், அங்கு செல்வது எந்த வகையிலும் பாதுகாப்பானது இல்லை என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கு செல்வதால் நுரையீரல் புற்றுநோய்கூட வரலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆபத்தை அருகே சென்று பார்ப்பதில் சிலருக்கு ஒரு ‘திரில்’!

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments