குழந்தைகளைக் கடத்துவதாக தொடர்ந்து பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மத்திய அரசுக்கு வாட்ஸ் அப் பதில்

‘‘வதந்திகளால் வன்முறைகள் ஏற்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. தகவல் பரிமாற்ற தளத்தை முறைகேடாக பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று மத்திய அரசுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் பதில் அளித்துள்ளது. குழந்தைகளைக் கடத்தும் கும்பலிடம் உஷார் என்று கூறி வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதனால், சில இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டு சிலர் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் துலே கிராமத்தில் குழந்தையைக் கடத்த வந்தவர்கள் என்று கூறி கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதில் 5 அப்பாவிகள் இறந்தனர். இதுபோல் தமிழ்நாடு, அசாம், கர்நாடகா, திரிபுரா, மேற்குவங்க மாநிலங்களில் குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகப்பட்டு அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் சிலர் உயிரிழந்தனர். இதையடுத்து வாட்ஸ் அப்பில் வதந்திகள் திரும்ப திரும்ப பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பொறுப்பில் இருந்து விலக முடியாது. வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகளால் ஏற்படும் வன்முறைகள், உயிரிழப்புகளை அனு மதிக்க முடியாது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை வாட்ஸ் அப் நிறுவனத்தை கடுமையாக எச்சரித்தது. அதை ஏற்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வாட்ஸ் அப் நிறுவனம் நேற்று அனுப்பியுள்ள பதிலில் கூறி யிருப்பதாவது: வாட்ஸ் அப் மூலம் வதந்திகள் பரப்பப்பட்டு அதன்மூலம் பல இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வாட்ஸ் அப் தளத்தை முறைகேடாக வதந்திகள் பரப்ப பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும், பொய்யான செய்திகள், தவறான தகவல்கள், குழப்பத்தை விளைவிக்க தகவல்களைப் பரப்புதல் போன்ற பிரச்சினைகளை அரசு, சமூகம், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய எல்லோரும் ஒன்று சேர்ந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் வாட்ஸ் அப் மிகமிக கவனமாக இருக்கிறது. அதற்கேற்றார் போல்தான் பாதுகாப்பு அம்சங்களுடன் வாட்ஸ் அப் வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றங்களைக் கண்டுபிடிக்க இந்தியாவில் போலீஸாருக்கு வாட்ஸ் அப் நிறுவனம் பலவகைகளில் உதவி வருகிறது. மேலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் அதிகாரிகளுடன் வாட்ஸ் அப் நிறுவனத்தார் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளனர். அதன்மூலம் நாங்கள் எப்படி உதவ முடியும் என்பது தெளிவாகும். மேலும், வதந்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பயிற்சி வகுப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.- பிடிஐ

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments