பேஸ்புக்குக்கு மாற்றா நெய்பர்லி?

பேஸ்புக்குக்கு மாற்றா நெய்பர்லி? முகமது ஹுசைன் ‘யெல்லோ பேஜஸ்’, ’ஜஸ்ட் டயல்’, ‘சுலேகா’ ‘குயிக்கர்’, ‘ஒஎல்எக்ஸ்’ போன்ற இணைய வர்த்தகத் தொடர்பு தளங்களுக்கும் மூடுவிழா நடத்த வந்துள்ளது ‘நெய்பர்லி’. தகவல்களால் நிறைந்தவர்தான் இன்று அறிவாளி, பாஸ். கூகுளைப் புரட்டிப் போட்டுப் படிக்க உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் ஒரு ஐன்ஸ்டீனே. தகவல்கள் உங்களை ஐன்ஸ்டீனாக மட்டுமல்ல; அம்பானியாகவும் மாற்றும். ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்பது போல ‘நீங்களும் ஆகலாம் அறிவாளி’ என்று கூகுள் சொல்லத் தொடங்கிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. உங்களை அறிவாளியாக மாற்றாமல் ஓயப் போவதில்லை எனக் கங்கணம் கட்டிக்கொண்டு கூகுள் கோதாவில் குதித்துள்ளது. அந்த முயற்சியில் நீங்கள் அறிவாளியாகவோ கோடீஸ்வரராகவோ மாறினீர்களோ இல்லையோ அது உலகின் மிகப் பெரிய வணிக நிறுவனமாகிவிட்டது. இன்று அதன் சாம்ராஜ்ஜியத்தை பேஸ்புக்கும் வாட்ஸ் அப்பும் அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், பேஸ்புக்கையும் வாட்ஸ்-அப்பையும் காலி செய்யும் விதமாகத் தற்போது ‘நெய்பர்லி’ (neighbourly) எனும் ஆப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. 80-களின் நட்புகள் 80-கள் வரை பள்ளியில் உடன் படித்தவர்களும் தெருக்காரர்களுமே நண்பர்களாக இருந்தனர். அத்திபூத்தாற் போலச் சிலருக்கு ‘பென் பிரெண்ட்ஸ்’ இருந்தனர். பின் 90-களில் கணினியும் இணையமும் பிரபலமானது. தெருவுக்கு ஓர் இணைய மையம் முளைத்தது. ‘யாஹூ’, ’மைக்ரோசாப்ட் மெஸஞ்சர்’ போன்றவை பிரபலமாயின. அன்றைய இளைஞர்களும் சில பெரியவர்களும் இணைய மையமே கதியெனக் கிடந்தார்கள். இணைய மையத்தில் இருக்கையை மாத குத்தகைக்கு எடுத்து, இரவு முழுவதும் தூங்காமல் பேசினார்கள். அறிவின் முகமான ‘ஆர்குட்’ 90-களின் இறுதியில் கூகுள், யாஹூக்குப் போட்டியாகக் குதித்தது. முதலில் அது தகவல்களை மட்டுமே அளித்தது. அது தகவல்களைத் தேடி அளித்த வேகத்தாலும் திறனாலும் ‘கூகுள்’ பிரபலமாகியது. ஆனால், அந்தப் பிரபலம் கூகுளுக்குப் போதுமானதாக இல்லை. இணையம் என்றாலே அது கூகுள்தான் என்று ஆகும் நிலையை அது உருவாக்க முயன்றது. அதன் முதல் படியாக ‘ஜிமெயிலை’ வெளியிட்டது. அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் ‘ஆர்குட்’ எனும் சமூக வலைத்தளத்தை அடுத்ததாக அது வெளியிட்டது. சில நாட்களிலேயே ‘ஆர்குட்’ பிரபலமடைந்தது. ‘ஆர்குட்’ நாகரிகத்தின், அறிவின் அடையாளமானது. பேஸ்புக்கின் எழுச்சி ‘ஆர்குட்’டின் செம்மையாக்கப்பட்ட வடிவமே பேஸ்புக். அன்றைய ‘யாகூ சாட்’டின் செம்மையாக்கப்பட்ட வடிவம் வாட்ஸ் அப். பேஸ்புக்கின் எளிமையும் கட்டுப்பாடற்ற சுதந்திரமும் அதை மனிதர்களின் மற்றொரு முகமாக மாற்றியது. பேஸ்புக் வந்த சில வருடங்களில் ‘ஆர்குட்’ இழுத்து மூடப்பட்டது. பேஸ்புக்கும் வாட்ஸ் அப்பும் உலகையே இன்று ஆட்டிப் படைக்கின்றன. தலைவர்களின் தலை எழுத்தை அவை எழுதுகின்றன. நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை அவை முடிவுசெய்கின்றன. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் என்ன படிக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன அணிய வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கின்றன. கூகுளின் பதிலடி இந்த விஸ்வரூப வளர்ச்சியைப் பார்த்துக்கொண்டு உலகின் மிகப் பெரிய நிறுவனமான கூகுள் எப்படிச் சும்மா இருக்கும்? உலகையும் மக்களையும் தானே ஆட்டிப் படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அது இன்று ‘நெய்பர்லி’ ஆப்பை வெளிட்டுள்ளது. தொழில்நுட்ப உலகமே அதை மிரட்சியாகப் பார்க்கிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் நாட்கள் இனி எண்ணப்படும் என்று ஆருடம் சொல்லப்படுகிறது. இது பேஸ்புக், வாட்ஸ் அப்புக்கு மட்டும் மூடுவிழா நடத்த வரவில்லை. நாம் அதிகம் பயன்படுத்தும் ‘யெல்லோ பேஜஸ்’, ’ஜஸ்ட் டயல்’, ‘சுலேகா’ குயிக்கர்’, ‘ஒஎல்எக்ஸ்’ போன்ற இணைய வர்த்தகத் தொடர்பு தளங்களுக்கும் மூடுவிழா நடத்த வந்துள்ளது. ஆம், இந்த எல்லா ஆப்கள், அவற்றின் செயல்பாடுகள் ஆகியவை கலந்த கலவைதான் ‘நெய்பர்லி’ ஆப். வாங்க பழகலாம் உங்கள் வீட்டுக்கு அருகில் எங்கு பிளம்பர் உள்ளார் என்று இந்த ஆப்பில் கேட்டால், ‘அடுத்த தெருவில் ஒருவர் உள்ளார். இது தான் அவர் நம்பர்’ என்று உடனடியாகப் பதில் கிடைக்கும். நீங்கள் முன்பின் பார்த்திராத, உங்கள் பக்கத்து வீட்டுக்காரர், நீங்கள் யாரென்று தெரியாமலேயே பதில் அளிப்பார். கல்லூரிக்கோ அலுவலுகத்துக்கோ செல்லும் வழியில் பைக் பஞ்சர் ஆகிவிட்டால், அதற்கும் பஞ்சர் ஆன இடத்துக்கு அருகில் இருக்கும் யாரோ ஒரு நண்பர், எங்கு பஞ்சர் ஒட்டலாம் எனப் பதில் தந்து உதவுவார். உங்கள் மனக் கஷ்டத்தைப் பகிர்ந்தால், உங்கள் அருகில் யாரேனும் ஒரு நபர் உடனடியாக ஆறுதல் சொல்வார். பேஸ்புக் மனிதத் தொடர்புகளை ‘virtual’ தொடர்பாக மாற்றியது. இந்த ‘நெய்பர்லி’ மீண்டும் அதை நேரடித் தொடர்புக்கு அருகில் கொண்டுவருகிறது. பழகிப் பார்த்தால் தான் தெரியும் கள்ளா பாலா என்பது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments