புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் வலிமையாக அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் நிலையில், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பாடங்கள், குறிப்பாக அறிவியல் பாடங்கள் மிகவும் கடினமாக இருப்பதாக மாணவர்களிடையே சலசலப்புகள் எழுந்துள்ளன. இது மிகவும் எளிதாக சரி செய்யக்கூடிய சிக்கல் தான் என்றாலும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, புதிய பாடங்களை மாணவர்களுக்கு புரியும் வகையில் நடத்துவதற்கு வசதியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புதிய கல்வியாண்டு தொடங்கி 50 நாட்களுக்கு மேலாகியும் ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்னும் நிறைவடையவில்லை. செப்டம்பர் முதல் வாரத்தில் 11-ம் வகுப்புக்கு காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு இன்னும் பயிற்சியளித்து முடிக்கப்படவில்லை என்பதில் இருந்தே இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். எனவே, புதிய பாடத்தின் மீதான புரிதல் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதற்கேற்றவாறு ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments