30 ஆண்டுகளாக தூங்காத மனிதர்!

சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு வினாடி கூடத் தூங்கவில்லை என்ற விந்தைத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த நபர் தூக்கமின்மைக்காக பல மருத்துவர்களை அணுகியும் அவர்களால் இதுவரை உறுதியான காரணத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சவுதி ராணுவத்தில் பணியாற்றிய காலகட்டத்தில், தொடர்ந்து பல காலம் அவர் தூங்காமல் கண்விழித்து இருந்திருக்கிறார். ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் மருத்துவமனை சென்று, தனது நிலைக்குக் காரணம் என்ன என பரிசோதித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 4 நாடுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று சேர்ந்து அவரைப் பரிசோதித்தது. அவர்களால் உரிய காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்றபோதிலும், தூக்கமின்மைக்கு அந்த நபரின் மன அழுத்தமே காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த முதியவருக்கு சிகிச்சை அளித்து வந்தாலும் இதுவரை அவரால் தூங்க முடியவில்லை. இதற்கிடையில், அல் பஹா பகுதி ஆட்சியாளர் இவரது நிலை குறித்து அறிந்து நலம் விசாரித்திருக்கிறார். அப்போது அவரிடம் தமக்கு ஒரு கார் மட்டும் தர முடியுமா என அம்முதியவர் கேட்டாராம். அதையடுத்து அவருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்தது மட்டுமின்றி, எஞ்சிய காலம் முழுவதும் அவருக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார், அல் பஹா ஆட்சியாளர். தூங்கா மனிதரின் துயரம் நீங்கட்டும்!

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments