சென்னையில் காவலரை தாக்கிய ரவுடி 24 மணி நேரத்தில் சுட்டுக் கொலை

சென்னையில் காவலரை தாக்கிய ரவுடி 24 மணி நேரத்தில் சுட்டுக் கொலை என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை குற்றவாளிகள் அத்துமீறினால் கடும் நடவடிக்கையை தவிர்க்க முடியாது என ஆணையர் திட்டவட்டம். பிரேத பரிசோதனைக்காக ஆனந்தன் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த மாஜிஸ்திரேட் சாண்டில்யன்.M_PRABHU ஆனந்தனின் மனைவி ரசீதா, மகன் அவினாஷ், மகள் நிலா மற்றும் உறவினர்கள். படங்கள்: ம.பிரபு M_PRABHU யில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் சாண்டில்யன் நேரில் சென்று ஆய்வு செய்தார். குற்றவாளிகள், ரவுடிகள் அத்துமீறும் பட்சத்தில், கடும் நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது என்று பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள பி.எம்.தர்கா குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு அருகே சிலர் கடந்த 2-ம் தேதி இரவு போதையில் தகராறு செய்தனர். இதை தடுக்க வந்த ராயப்பேட்டை காவல் நிலையத்தின் முதல்நிலைக் காவலர் ராஜவேலுவை (35) அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர், அவர்களிடம் இருந்து தப்பி, ஆட்டோ வில் ஏறி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். தலையில் பயங்கர காயங்கள் அடைந்த அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், காவலர் தாக்கப்பட்ட தகவல் அறிந்து, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து கூடுதல் போலீஸார் விரைந்தனர். வழக்கு பதிவு செய்து, ரவுடிகளை பிடிக்கும் நடவடிக்கையிலும் இறங்கினர். ராயப்பேட்டையைச் சேர்ந்த அரவிந்தன், உதயநிதி, அஜித்குமார், வேல்முருகன், சீனி, மகேஷ் ஆகிய 6 பேரை அன்று இரவே கைது செய்தனர். தலைமறை வான ஆனந்தன், அருண் சுந்தர், ஸ்ரீதர் ஆகியோரை 3-ம் தேதி கைது செய்தனர். காவலர் ராஜவேலுவிடம் இருந்து பறித்துச் சென்ற வாக்கிடாக்கியை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தின் பின்புறம் உள்ள பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரவுடி ஆனந்தனை மட்டும் போலீஸார் அங்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு மரத்தின் மீது ஏறிய அவர், மறைத்து வைத்திருந்த வாக்கிடாக்கியை எடுத்து போலீஸாரிடம் கொடுத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில், அங்கேயே மற்றொரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த ஆனந்தன், தனிப்படை எஸ்.ஐ. இளையராஜாவின் கையில் குத்தினார். மற்றவர்கள் மீதும் பாய முற்பட்டார். உதவி ஆணையர் சுதர்சன் சுதாரித்து, ஆனந்தனை நோக்கி துப்பாக்கி யால் சுட்டார். இடது மார்பில் குண்டு பாய்ந்து ஆனந்தன் உயிரிழந்தார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. என்கவுன்ட்டர் பின்னணி குறித்த விவரம்: நடந்தது என்ன? ராயப்பேட்டை பி.எம். தர்கா பகுதிக்குச் சென்ற காவலர் ராஜவேலு, அங்கு குடித்துவிட்டு தகராறு செய்துகொண்டிருந்த இளைஞர்களை விரட்டிவிட்ட பிறகு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதற்குள், அங்கிருந்து ஓடுவதுபோல போக்கு காட்டிய கும்பல், இருட்டில் மறைவான இடத்தில் காவலர் ராஜவேலுவை சுற்றிவளைத்துள்ளது. வாக்கிடாக்கியை பறித்துக்கொண்ட அவர்கள், அவரை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். பின்னர், அங்கு கிடந்த கயிற்றால் அவரது இரு கைகளையும் கட்டி, உட்கார வைத்து, 5 பேர் அவரை பிடித்துக்கொண்டனர். போலீஸாரை கிண்டல் செய்தபடியே, ரவுடி ஆனந்தன் அவரது தலை யில் கொடூரமாக கத்தியால் வெட்டியுள்ளார். அவரது தலையில் இவ்வாறு 16 வெட்டு விழுந்துள்ளது. அங்கிருந்த இன்னொருவர் ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து ராஜவேலுவின் தலையில் போட முயன்றுள்ளார். அவர்களைத் தள்ளிவிட்டு ராஜவேலு தப்பி வந்தார் என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையில், ரவுடி ஆனந் தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் சாண்டில்யன் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அவரது முன்னிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஆனந்தனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டது. பேராசிரியர் வேதநாயகம், உதவி பேராசிரியர் ஜெயகுமார் தலைமையில் நேற்று மதியம் 1.45 மணிக்கு பிரேதப் பரிசோதனை நடந்தது. அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தாய், மனைவி கதறல் ஆனந்தனின் தாய் ஜெயலலிதா கூறும்போது, ‘‘ஆனந்தன் தவறு செய்திருந்தாலும் அவனது கை, கால்களை வெட்டி இருக்கலாம். ஆனால், தீவிரவாதிபோல சுட்டிருக்கிறார்கள். சடலத்தைக் கூட பார்க்க விடவில்லை. மகன் சாவுக்கு போலீஸார் பதில் சொல்லியே ஆகவேண்டும்’’ என்றார். ஆனந்தனின் மனைவி ரசீதா கூறியபோது, ‘‘அவர் தவறு செய்திருந்தால், பிடித்து சிறையில் போட்டிருக்கலாம். வெளியே வந்த பிறகாவது திருந்தியிருப்பார். அவரை நம்பி இருந்த நான், மகன் அவினாஷ் (4), மகள் நிலா (2) ஆகியோர் அனாதையாகிவிட்டோம்’’ என்று கதறினார். ஆறுதலும்.. எச்சரிக்கையும்.. ரவுடிகளின் தாக்குதலில் காயமடைந்த காவலர் ராஜவேலு, என்கவுன்ட்டர் சம்பவத்தின்போது காயம் அடைந்த எஸ்.ஐ. இளையராஜா ஆகியோரை மருத்துவமனையில் சந்தித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல் கூறினார். அவர் பின்னர் கூறியபோது, ‘‘சட்டப்படி குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றம் மூலம் தண்டனை வாங்கிக் கொடுக்கிறோம். இப்போதும்கூட தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. ரவுடிகள், குற்றவாளிகள் அத்துமீறினால், தவிர்க்க முடி யாத சூழலில் இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை’’ என்றார். சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 இடங்களில் 16 போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டில் 712 கொள்ளை, 615 செயின் பறிப்பு, 520 செல்போன் பறிப்புகளும், 2018-ல் கடந்த மாதம் வரை 394 கொள்ளை, 200 செயின் பறிப்பு, 230 செல்போன் பறிப்புகளும் நடந்துள்ளன. தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டதாக 395 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடந்துள்ள என்கவுன்ட்டர், ரவுடிகளுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது என்கின்றனர் போலீஸார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments