ரிசர்வ் வங்கி அன்னிய செலாவணி கையிருப்பு 225 கோடி டாலர் சரிவு

பாரத ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு, ஜூன் 22-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 225 கோடி டாலர் சரிந்து 40,782 கோடி டாலராக குறைந்து இருக்கிறது. ஜூன் 15-ந் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 304 கோடி டாலர் சரிவடைந்து 41,007 கோடி டாலராக இருந்தது. ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பில் பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர். மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி பாரத ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு முதல் முறையாக 40,000 கோடி டாலர் என்ற சாதனை அளவை எட்டியது. நடப்பு ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி அன்று கையிருப்பு 42,603 கோடி டாலராக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து இருந்தது. கணக்கீட்டுக் காலத்தில், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள இதர செலாவணிகளின் மதிப்பு 283 கோடி டாலர் குறைந்து 38,250 கோடி டாலராக குறைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 10.29 கோடி டாலர் உயர்ந்து 2,133 கோடி டாலராக இருக்கிறது. எஸ்.டீ.ஆர். மதிப்பு 5 லட்சம் டாலர் உயர்ந்து 149 கோடி டாலராக இருக்கிறது. பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 48 கோடி டாலர் அதிகரித்து 249 கோடி டாலராக உள்ளது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments