பொது இடங்களில் வைஃபை சேவை அதிகரித்தால் ஜிடிபிக்கு 2,000 கோடி டாலர் அளவுக்கு பயனளிக்கும் கூகுள் நிறுவனம் தகவல்

நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை அளிப்பது அதிகரித்தால் ஜிடிபியில் 2,000 கோடி டாலர் அளவுக்கு பயன்தரும் என கூகுள் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இதுதொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ம் ஆண்டு ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் 400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை கூகுள் நிறுவனம் அமைத்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளிலும் இத்தகைய வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசித்து வருவதாக கூகுள் இந்தியாவின் நெக்ஸ்ட் பில்லியன் யூஸர்ஸ் பிரிவு இயக்குநர் கே.சூரி தெரிவித்துள்ளார். இந்திய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேஷியா மற்றும் மெக்சிகோவிலும் இத்தகைய வசதிகளை கூகுள் அமைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அனாலிசிஸ் மேசன் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் சமீபத்தில் செய்திருக்கிற ஆய்வு, பொது இடங்களில் வைஃபை வசதியை ஏற்படுத்துவதால் 2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மேலும் 4 கோடி உயரும் என தெரிவித்துள்ளது. இது 2017-19-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் ஜிடிபியில் 2,000 கோடி டாலர் அளவுக்கு பயனளிக்கும், அதன்பின்னர் ஆண்டுதோறும் 1,000 கோடி டாலர் அளவுக்கு பயனளிக்கும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 36,000 வைஃபை சேவைகள் இந்தியாவில் பொது இடங்களில் மொத்தம் 36,000 வைஃபை சேவை வழங்கும் இடங்கள் உள்ளன. சீனாவில் இது 61 லட்சமாகவும், இந்தோனேஷியா மற்றும் மெக்சிகோவில் 1.65 லட்சத்துக்கு அதிகமாகவும் உள்ளது. தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு வரைவின்படி 2020-ம் ஆண்டுக்குள் 50 லட்சம் வைஃபை சேவை வழங்கும் இடங்களையும், 2022-ம் ஆண்டுக்குள் 1 கோடி வைஃபை சேவை வழங்கும் இடங்களையும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 4 கோடி புதிய பயனர்கள் பொது இடங்களில் வைஃபை வசதி ஏற்படுத்துவதன் மூலம் இணையம் பயன்படுத்துபவர்கள், இணைய சேவை வழங்குநர்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், மொபைல் தயாரிப்பாளர்கள் மற்றும் இட உரிமையாளர் எனப் பலரும் பயன்பெறுவார்கள் என்றும் சூரி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பொது இடங்களில் வைஃபை வசதி ஏற்படுத்துவதன் வழியாக புதிதாக 4 கோடி பேர் இணையதளத்தை பயன்படுத்த தொடங்குவர். 10 கோடி பேர் புதிய மொபைல்களை வாங்க முன்பைவிட 200 முதல் 300 கோடி டாலர் வரை அதிகமாக செலவழிப்பார்கள். இந்த நடைமுறை வெற்றியடையும் என்பதற்கு ரயில்டெல் சரியான உதாரணம். சராசரியாக ரயில்டெல் வை-ஃபை மூலம் ஒரு பயனர் 300 எம்பி என்ற அளவுக்கும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறார். வீடியோக்கள் பார்ப்பது, சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது, ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்துவது, டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற செயல்பாடுகள் இந்த வைஃபை வசதி மூலம் செய்யப்படுகிறது. அலகாபாத், கோரக்பூர், கயா, விசாக், விஜயவாடா, ஜெய்பூர், பிலாஸ்பூர், பகல்பூர், வதோதரா, குவாலியர் மற்றும் பூணே ரயில் நிலையங்களில் அதிக அளவில் இணையம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் தினமும் 1.5 சதவீதத்தினர் இணையதளத்தை அப்போதுதான் முதல்முறையாக பயன்படுத்துகிறார்கள் என சூரி கூறினார். ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம், ரயில்டெல் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். -பிடிஐ Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments