ஜியோ போன் 2 அறிமுகம் புதிய திட்டங்களை அறிவித்தார் முகேஷ் அம்பானி

ஆர்.ஐ.எல். நிறுவனத்தின் 41-வது ஆண்டு கூட்டத்தில் ஜியோ போன் 2 அறிமுகம் புதிய திட்டங்களை அறிவித்தார் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் (ஆர்.ஐ.எல்) 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் ஜியோ போன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ஆர்.ஐ.எல். தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களையும் அறிவித்தார். பெரும் திருப்பம் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி 4ஜி செல்போன் சேவைகளை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோவின் வரவு இந்திய செல்போன் துறையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. செல்போன் சேவையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வரும் இந்நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ போன் 2 சாதனத்தை வழங்க உள்ளது. ஜியோ போன் 2-ன் விலை ரூ.2,999 ஆகும். சுதந்திர தினம் அன்று (ஆகஸ்டு 15) இந்த போன் வர்த்தக ரீதியில் அறிமுகம் ஆக உள்ளது. பருவ மழைக்கால சலுகையாக ரூ.501 மட்டும் செலுத்தி சாதாரண ஜியோ போன்களுக்கு மாற்றாக இதனைப் பெற்றுக் கொள்ளலாம் என முகேஷ் அம்பானி அறிவித்தார். மேம்படுத்திய ஜியோ போனில் ஜியோ ஜிகா பைபர் என்ற அதிவேக அகன்ற அலைவரிசை சேவை வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் ஒயர் இணைப்புடன் கூடிய இணையதள பயன்பாட்டை அதிகரிப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யூ-டியூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இதில் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பெரிய திரையில் செய்முறை விளக்கமாகவும் காட்டப்பட்டது. பங்கு விலை சரிவு மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு ரூ.998.70-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.1,008.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.960.10-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.965-ல் நிலைகொண்டது. இது, புதன்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.53 சதவீத சரிவாகும்

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments