18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 23-ம் தேதி தொடங்கி 27 வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என 3-வது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் கடந்தாண்டு தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை அளித்தது. இதையடுத்து இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பாக முதல்முறையாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோரும், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு பிளீடர் டி.என்.ராஜகோபாலன், சிறப்பு அரசு வழக்கறிஞர் சி.திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர். அப்போது நீதிபதி, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனிடம், “இந்த வழக்கில் விசாரணையை தொடங்க நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா’’ என்றார். அதற்கு அவர், “நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். தற்போது எங்கள் தரப்பில் நானும், மோகன் பராசரனும் ஆஜராகவுள்ளோம்” என்றார். அதற்கு நீதிபதி, ‘‘ ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள ஆவணங்களே போதுமானதா? இல்லை கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளீர்களா? என்றார். அதற்கு பி.எஸ்.ராமன், ‘‘தலைமை நீதிபதியும், நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பினை அளித்துள்ளனர். ஒருவர் எடியூரப்பா வழக்கு இந்த வழக்குக்கு பொருந்தும் என்கிறார். மற்றொருவர் எடியூரப்பா வழக்கு பொருந்தாது என்கிறார். எனவே இந்த வழக்கில் கூடுதலாக சில ஆவணங்களை தாக்கல் செய்யவுள்ளோம்” என்றார். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், “இந்த விசாரணையை வரும் 23-ம் தேதி தொடங்க வேண்டும்’’ என்றார். அதையடுத்து நீதிபதி, ‘‘ஏற்கெனவே இருதரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி விரிவாக வாதிட்டுள்ளனர். அதைத்தாண்டி கூடுதல் விவரங்களை மட்டும் வாதிட்டால் போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன். இந்த வழக்கு விசாரணை வரும் ஜூலை 23-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். 5 நாட்களுக்கு தொடர் விசாரணை என நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல எனது வழக்கை வாபஸ் பெறப்போகிறேன் என அறிவித்த தங்க.தமிழ்செல்வன் நேற்று எந்த கடிதத்தையும் நீதிபதியிடம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தனது வழக்கை வாபஸ் பெறவில்லை என்பதை அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் உறுதி செய்தார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments