கம்பிவழி பிராட்பேண்ட் சேவையில் ரிலையன்ஸ் ஆகஸ்ட் 15 முதல் செயல்பாட்டுக்கு வரும்முகேஷ் அம்பானி அறிவிப்பு

மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 41-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி (வலது) அவரது மனைவி நிதா அம்பானி மற்றும் மகன் ஆனந்த் அம்பானி. வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அதிவேக இணைய சேவை அளிக்கும் நோக்கில் கம்பிவழி பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொது கூட்டத்தில் பேசும்போது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மிக உயரிய தரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, ஒலி வழி சேவைகளைப் பயன்படுத்துவது, விஆர் முறையிலான விளையாட்டுகளை விளையாடுவது, ஸ்மார்ட் ஹோம் உபகரணங்களை பயன்படுத்துவது மற்றும் டிஜிட்டல் ஷாப்பிங் செய்வது போன்ற செயல்பாடுகள் மேலும் மேம்படும் என அம்பானி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தற்பொழுது நாங்கள் எங்களது ஃபைபர் இணைப்பை வீடுகள், விற்பனையகங்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு விரிவுபடுத்த இருக்கிறோம். 1,100 நகரங்களில் ஒரே நேரத்தில் மிகவும் மேம்பட்ட ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பைத் தர இருக்கிறோம். இந்தியாவை கம்பிவழி பிராட்பேண்ட் சேவையில் உலகின் சிறந்த ஐந்து நாடுகளில் ஒன்றாக ஜியோ மாற்றும். 2016-ம் ஆண்டு ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிக அளவில் மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் நாடாக இந்தியா மாறியது. ஜியோ 21.5 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 2.5 கோடி ஜியோ ஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன. ஜியோ ஃபோனுக்கு வாடிக்கையாளர் செலுத்தும் தொகை என்பது திரும்ப அளிக்கப்படும் வகையிலான பாதுகாப்பு முன்வைப்புத்தொகை மட்டுமே. வரும் ஆகஸ்ட் 15 முதல் ஜியோ போனில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகிய சேவைகளை வழங்க இருக்கிறோம். சாத்தியமாகும் குறுகிய காலத்தில் 10 கோடிப் பேரை ஜியோ போன் வாடிக்கையாளர்களாக மாற்றுவதை இலக்காக கொண்டுள்ளோம். ஆகஸ்டு 15 முதல் ஜியோ போன் 2 ரூ.2,999-க்கு கிடைக்கும். இந்த கம்பிவழி பிராட்பேண்ட் சேவை மூலம் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சி பெட்டிகளில் நிகழ்ச்சிகளைத் மிகத் துல்லியமாக பார்ப்பது, கூட்டு வீடியோ கான்பரன்சிங் முறையை பயன்படுத்துவது, ஒலி வழிக் கட்டளைகள் மூலம் வெர்ச்சுவல் உதவி உபகரணங்களை இயக்குவது, டிஜிட்டல் ஷாப்பிங் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை செய்யமுடியும். இந்த சேவை ஜியோ ஜிகாஃபைபர் சேவை என அழைக்கப்படும். இந்த கம்பிவழி பிராட்பேண்ட் சேவைக்கான பதிவு ஆகஸ்ட் 15 அன்று தொடங்கும் என முகேஷ் அம்பானி கூறினார். பழைய போன்களை அளித்துவிட்டு ஜியோ போனை ரூ.501 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளும் ஜியோ போன் மான்சூன் ஹங்காமா திட்டத்தையும் முகேஷ் அம்பானி அறிவித்தார். ஜூலை 21 முதல் இந்தத் திட்டம் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments