போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள பழங்குடியின தேர்வாளர்களுக்கு 10 மாவட்டங்களில் இலவச பயிற்சி மையங்கள் அமைச்சர் ராஜலட்சுமி அறிவிப்பு

போட்டித் தேர்வுகளை பழங்குடியின தேர்வாளர்கள் எதிர்கொள்ளும் வகையில் 10 மாவட்டங்களில் இலவச பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ராஜலட்சுமி அறிவித்துள்ளார். பயோ மெட்ரிக் முறை தமிழக சட்டசபையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத்துறையின் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பதிலளித்து பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:- பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும். ஆயிரத்து 324 ஆதிதிராவிடர் நல விடுதிகளில், மாணவர்கள் தங்கி கல்வி பயில்வதை உறுதி செய்வதற்காக பயோ மெட்ரிக் வருகை முறை அறிமுகப்படுத்தப்படும். நிலை உயர்வு வேலூர் மாவட்டம் அரசமரத்துக்கொல்லை, திருவண்ணாமலை மாவட்டம் சேராமரத்தூர் ஆகிய அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாகவும், நீலகிரி மாவட்டம் தேவாலா, விழுப்புரம் மாவட்டம் கிளாக்காடு, தர்மபுரி மாவட்டம் கலசப்பாடி ஆகிய அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். வேலூர் மாவட்டம், ஏலகிரி வட்டத்தில் பழங்குடியினர் நல மாணவியர் விடுதி கட்டப்படும். மெய்நிகர் (விர்ச்சுவல்) கலந்தாய்வு வகுப்புகள் நடத்த, நந்தனம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்க பள்ளியில் காணொலி மையம் தொடங்கப்படும். இலவச பயிற்சி மையங்கள் பழங்குடியின போட்டி தேர்வாளர்கள் அனைத்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், விழுப்புரம், நாமக்கல், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், சேலம், திருச்சி, ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இலவச பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். ஆதிதிராவிடர் நலன் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கிடையே கல்வி மற்றும் விளையாட்டை மேம்படுத்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு இடையே பள்ளி, மாவட்ட, மாநில அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். போட்டிகள் நடத்தப்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களிடையே பள்ளி, மாவட்ட, மாநில அளவில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி, வினாடி-வினா போன்ற பகுப்பாய்வு திறன் போட்டிகள் நடத்தப்படும். பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பயன்களை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இணையதள வசதி உருவாக்கப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments