வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வருமானவரித்துறை அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. சென்னை வருமானவரித்துறை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- வருமானவரி சட்டம் 44 ஏ.பி.ன் கீழ் தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர் 2018-2019 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2017-2018 நிதியாண்டு) வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய இந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி கடைசி நாளாகும். மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டுச் சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர். வருமானவரி சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 234 எப் பிரிவின் படி கால தாமதக்கட்டணம் (அபராதம்) செலுத்த வேண்டியவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.10 ஆயிரம் வரை அபராதம் * வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான 31.07.2018-க்கு முன்னதாக தாக்கல் செய்வோர்களுக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. * மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31.07.2018க்கு பிறகும் 31.03.2019-க்கு முன்பாகவும் தாக்கல் செய்தால் அபராதக் கட்டணம் ரூ.1000. * ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31.07.2018-க்கு பிறகு ஆனால் 31.12.2018-க்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதம் ரூ.5,000. * மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை 31.12.2018-க்கு பிறகு ஆனால் 31.03.2019-க்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதம் ரூ.10,000. வருமானவரி சட்டத்தின் புதிய நடைமுறையின்படி 139-வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்கு பிறகு எவ்வித வருமானவரி கணக்கும் தாக்கல் செய்ய இயலாது. உதாரணமாக மதிப்பீட்டு ஆண்டு 2018-2019-க்கு 31.03.2019-க்கு பிறகு வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. மின்னணு முறை மேலும் அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யவேண்டும். கீழே குறிக்கப்பட்டுள்ள பிரிவினர் விரும்பினால் காகித வடிவில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரேயொரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் அல்லது தோராய வருமானம் உள்ளோர் ஐ.டி.ஆர்.1 அல்லது ஐ.டி.ஆர்.4 (சுகம்) படிவங்களில் வருமானவரி கணக்கை கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தாக்கல் செய்யலாம். முந்தைய ஆண்டில் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள், 5 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மொத்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் தங்களது வருமானவரி கணக்கில் திரும்ப கிடைக்க வேண்டிய தொகை கோராதவர்கள். நாளை முதல் கவுண்ட்டர்கள் வரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கை செலுத்துவதற்கு ஏதுவாக சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலை இலக்கம் 121-ல் செயல்படும் ஆயக்கர் பவன் வளாகத்தில் வருமானவரி கணக்கு முன் தயாரிப்பு கவுண்ட்டர்கள் செயல்படும். இந்த கவுண்ட்டர்கள் அனைத்து வேலை நாட்களிலும் 16-ந் தேதி முதல் 2018 ஆகஸ்டு 3-ந் தேதி வரை செயல்படும். வரி செலுத்துவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments