எம்.ஜி.ஆர். பெயரில் மக்கள் சேவை: ரூ.1,000 கோடி நிதி திரட்ட இலக்கு குடும்ப சொத்தை விற்று ரூ.50 கோடி வழங்கப்போவதாக சைதை துரைசாமி அறிவிப்பு

எம்.ஜி.ஆர். பெயரில் மக்கள் சேவை ஆற்றுவதற்கு ரூ.1,000 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்ப சொத்தை விற்று ரூ.50 கோடி வழங்கப்போவதாக சைதை துரைசாமி அறிவித்துள்ளார். உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில் சைதை துரைசாமி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- திராவிட இயக்கம் பட்டி, தொட்டி எங்கும் பரவி, நான் முதல்-அமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்று அண்ணா சொன்னார். ‘உன்னால் உயர்வடைந்த என் போன்றோர் உள்ளம் எல்லாம் மகிழ வேண்டும்’ என்று கருணாநிதி, எம்.ஜி.ஆரால் முதல்-அமைச்சர் ஆனதை அவருடைய வாக்குமூலமாகவே கொடுத்தார். எம்.ஜி.ஆரின் பிம்பமாக இருந்த ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். ஜெயலலிதாவுக்கு முன்பாக போற்றுதலுக்குரிய ஜானகி அம்மையார் முதல்-அமைச்சராக இருந்தார். இன்று வரை தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை, புரட்சியை உருவாக்கிய ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் ராசி அவர் யாருக்கு எல்லாம் பதவி கொடுத்தாரோ, அவர்கள் எல்லாம் விசுவாசமாக இல்லை. எம்.ஜி.ஆரை தங்களுடைய இதய தெய்வமாக பொதுமக்களும், தொண்டர்களும் இன்று வரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் கடந்தநிலையிலும், பட்டி-தொட்டி முதல் நகர்ப்புறம் வரையில் வாழ்கின்ற படித்தவர்கள், பாமரர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் இன்றளவும் அவரது நினைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சினிமா, அரசியல் என எல்லா நிலைகளிலும் நிழலாக பின் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பெரும் புகழுக்கு உறுதுணையாக நின்ற ஆர்.எம்.வீரப்பனுக்கு இந்த மாநாடு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. ஆர்.எம்.வீரப்பனின் இப்போதைய அரசியல் நிலைப்பாட்டில் நமக்கு எந்த விதமான உடன்பாடும் இல்லை. அவர் எடுத்த முடிவு தவறு என்று இந்த இடத்தில் நான் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் அவர் எம்.ஜி.ஆருக்காக ஆற்றிய பங்களிப்பை இந்த நேரத்தில் தெரிவிப்பது எங்களுடைய கடமை என்று நான் கருதுகிறேன். எம்.ஜி.ஆரால் அடையாளப்படுத்தப்பட்டு, அவரிடம் அரசியல் பயின்ற பலர் இன்றைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளில் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இன்று அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த பெரும் புகழுக்கும், பெயருக்கும் எம்.ஜி.ஆர். தான் காரணம் என்பதை உலகமறியும். எதற்காக இந்த மாநாடு? இந்த அமைப்பு? என்று பல பேர் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். உலக எம்.ஜி.ஆர். பேரவை என்பது ஒரு தொண்டு நிறுவனம். எம்.ஜி.ஆர். வாழ்ந்துகொண்டிருந்த போது ஒரு நாளைக்கு குறைந்தது 10 பேர் முதல் ஆயிரம் பேர் வரை பயன்பெற்றார்கள். இந்த சமூகத்தில் கடைசி மனிதன் இருக்கும் வரையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆகவே அரசியல் சார்பற்ற முறையில் இந்த அமைப்பை வலுப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, எம்.ஜி.ஆரை இன்றளவும் நினைவில் வைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இந்த அமைப்பு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். எம்.ஜி.ஆரின் புகழ், பெருமையை காப்பதற்கு, சேவை செய்வதற்கு நிதி வேண்டும். அந்த நிதியில் முதல் தவணையாக நான் ரூ.50 கோடியை இந்த அமைப்புக்கு தர இருக்கிறேன். ரூ.1,000 கோடி இலக்கு. எம்.ஜி.ஆரால் பயனடைந்தவர்கள் தமிழகத்தில் 1,000 பேர் இருப்பார்கள். ஒருவர் ஒரு கோடி கொடுத்தாலும் ரூ.1,000 கோடி கிடைக்கும். இந்த ஆயிரம் கோடியை வைப்புநிதியாக வைத்து வாழ்நாள் முழுக்க, உலகம் இருக்கிற வரையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை நாம் நிரூபிக்கவேண்டும். இது ஒன்று தான் மாநாட்டின் நோக்கம் தவிர, வேறு எந்த சிந்தனையும் கிடையாது. என்னுடைய குடும்ப நிதி, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள சொத்துகளை விற்று ரூ.50 கோடியை முதல் தவணையாக கொடுக்க இருக்கிறேன். அதற்கு பிறகு என்னுடைய சகாக்களான எம்.ஜி.ஆரால் அடையாளப்படுத்தப்பட்ட, பெரும் புகழ், பெரும் செல்வந்தர்களாக, இந்த சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அத்தனை பேரையும் சந்தித்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, யார் எல்லாம் நன்கொடை தருகிறார்களோ, அவர்களை உறுப்பினர்களாகி அந்த தொகையை சேவையாக நாட்டு மக்களுக்கு நாள்தோறும் வழங்கி எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார். எப்போதும் வாழ்வார் என்பதை நிரூபிக்கின்ற வகையில் இந்த மாநாடு தொடங்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments