பறவைகளைப் பிடிக்கும் மரங்கள்!

பிசோனியா ப்ருனோனியானா என்ற நச்சுக்கொட்டை கீரை மரங்கள் ஹவாயிலிருந்து நியூசிலாந்து வரை காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்குப் பகுதியிலும் இருக்கின்றன. இந்த மரத்தை அருகில் சென்று பார்த்தால், இறந்துபோன பறவை களின் உடல்களும், எலும்புகளும் தொங்கிக்கொண்டிருக்கும். இந்த மரத்தை ‘பறவை பிடிக்கும் மரம்’ என்று அழைக்கிறார்கள். மரத்திலுள்ள காய்களில் பூச்சிகளை ஈர்ப்பதற்காக பசை போன்ற ஒரு திரவம் சுரக்கிறது. இந்தக் காய்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூச்சிகளைச் சாப்பிடுவதற்காகப் பறவைகள் நாடி வருகின்றன. பறவைகளின் இறக்கைகள் காய்களில் ஒட்டிக்கொள்வதால் அவற்றால் தப்பிக்க முடிவதில்லை. உணவின்றி அப்படியே வெயிலில் காய்ந்து, இறந்துவிடுகின்றன. ஒருவேளை மரத்திலிருந்து வெளியே வந்தாலும் இறக்கைகளில் விதைகள் கனமாக ஒட்டிக்கொள்வதால் அவற்றால் பறக்க முடிவதில்லை. சில நாட்களில் உணவின்றி உயிரிழந்துவிடுகின்றன. “பறவைகளின் மூலம் பெரும்பாலான தாவரங்கள் பல்வேறு இடங்களில் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்புகளைப் பெறுகின்றன. ஆனால் நச்சுக்கொட்டை கீரை மரத்தின் விதைகளால் பறவைகள் உயிரிழப்பதால், இவற்றின் இனப்பெருக்கம் பெருகுவதில்லை. மரங்களில் சிக்கியிருந்த பறவைகளை மீட்டு, அவற்றின் இறக்கைகளில் இருந்து விதைகளை அப்புறப்படுத்தினோம். புதிய இறக்கைகள் முளைக்கும் வரை பராமரித்து, பிறகு வெளியே அனுப்பியிருக்கிறோம்” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர் பெத் பின்ட்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments