மாரடைப்பை கண்டுபிடிக்கும் புரதப் பரிசோதனை

ரத்தப் பரிசோதனையில் விரைவாக மாரடைப்பை கண்டுபிடிக்கும் புது நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இதன் அடிப்படையில் தனிநபரும் இந்த பரிசோதனையை மேற்கொள்ளும் சிறிய கருவி உருவாக்கப்பட்டு வருகிறது என்பது இனிப்பான செய்தி. ரத்தப் பரிசோதனை மூலம் பல்வேறு நோய் பாதிப்புகளையும், சத்துக் குறைபாட்டையும் அறிந்து கொள்ள முடியும். லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ரத்தப் பரிசோதனையின் மூலம் மாரடைப்பு ஏற்படப்போவதை முன்கூட்டியே அறியும் வழியை கண்டுபிடித்துள்ளனர். கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின்போது ஒருவகை புரதத்திற்கு மாரடைப்புடன் தொடர்பு உள்ளதை கண்டறிந்தனர். இந்த புரதத்திற்கு ‘கார்டியாக் மயோசின் பைண்டிங் புரோட்டின் -சி’ (cMyC) என்று பெயரிட்டுள்ளனர். ரத்தப் பரிசோதனையின்போது இந்த புரத அளவை கண்காணிப்பதன் மூலம் மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று அவர்கள் கூறி உள்ளனர். அதாவது ‘புரோட்டின்-சி’ வகை புரதம் ரத்தத்தில் அதிகரிப்பது மாரடைப்பின் அறிகுறியாகும். நெஞ்சு வலி அறிகுறியுடன் வருபவர்களுக்கு இந்த பரிசோதனையை மேற்கொண்டால் மாரடைப்பை சீக்கிரமாக கண்டுபிடிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. இதுவரை நெஞ்சுவலி அறிகுறியுடன் வருபவர்களை பல மணி நேர இ.சி.ஜி. பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தியே மாரடைப்பு கண்டறியப்படுகிறது. இப்போது வரை டிரோபோனின் எனும் புரதப் பொருளின் அடிப்படையில் மாரடைப்பு கணிக்கப்படுகிறது. ஆனால் இந்த வகை புரதம் ரத்தத்தில் அதிகரிக்கிறதா என்பதை அறிய பல மணி நேரம் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக பலமுறை ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க வேண்டியதிருக்கும். ஆனால் புரோட்டின்-சி புரதப் பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். டென்மார்க்கில் 776 பேருக்கு இந்த பரிசோதனையை மேற்கொண்டபோது 95 சதவீத அளவில் மாரடைப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிரோபோனின் பரிசோதனையின் மூலம் 40 சதவீதமே மாரடைப்பு கண்டறியப்படும் வாய்ப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் டாம் கையர் தலைமையிலான குழுவினர் இந்த பரிசோதனையை செய்வதற்காக தனியே எளிமையான கருவி ஒன்றின் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இது பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் அவசர சிகிச்சை அரங்கம் தவிர்த்து, நோயாளிகள் வீட்டில் இருக்கும்போது தாங்களாகவே மாரடைப்பு பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments