வட தமிழகத்தில் இரு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதா வது: தெற்கு அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. மேலும் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் நிலவு கிறது. அதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூரில் 9 செமீ, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு எஸ்.பாலசந்திரன் கூறினார்.

Comments