பள்ளிக் கல்வித்துறை பெயரில் மோசடி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பெயரில் நியமன உத்தரவை தயாரித்து பட்டதாரிகளிடம் பணம் பறிக்கும் கும்பலால் பட்டதாரி ஆசிரியர்கள் கலக்கம்

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code
அரசு முத்திரையுடன் கூடிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பெயரில் நியமன உத்தரவை தயாரித்து பட்டதாரிகளிடம் பணம் பறிக்கும் கும்பலால் பட்டதாரி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். அரசு மற்றும் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் ேதர்ச்சி அடைந்தவர்களையே ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்து வருவது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் போதிய காலி இடங்கள் இல்லாததால் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சென்னையில் உள்ள சிலர் பட்டதாரிகளை அணுகி பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக பேசி, அதற்காக பணம் பெற்றுள்ளனர். பணம் பெற்றதற்காக தாங்களே போலியாக அரசு முத்திரை தயார் செய்து, அரசு பணி முத்திரையிட்ட தாளில் பணிக்கான சான்று சரிபார்ப்பு கடிதம், நேர்க்காணல் கடிதம், பின்னர் பணி நியமன உத்தரவு போன்றவற்றை போலியாக தயாரித்து கொடுத்து லட்சக் கணக்கில் பணம் பெற்று வருகின்றனர். இது போன்ற போலியான உத்தரவுகளை பணம் கொடுத்து பெற்றுள்ள பட்டதாரிகள் அதை சரிபார்க்க ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கி வருகின்றனர். மேலும், ஆசிரியர் பணி நியமன உத்தரவு என்பது டிபிஐ வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அல்லது தொடக்க கல்வித்துறை பணி நியமனங்களில் முன்பெல்லாம் இணைய இயக்குனர்கள் கையொப்பம் இருக்கும். அந்த நியமன உத்தரவுகள் நேரடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனு்ப்பி வைக்கப்பட்டு உரிய நபர்களுக்கு தெரிவிக்கப்படும். *பின்னர் பணி நியமன உத்தரவு தபாலில் அனுப்பி வைக்கப்படும். இப்போதைய மாற்றங்களின்படி முதன்மைக் கல்வி அலுவலர், டிஇஓ ஆகியோர் தான் பணி நியமன உத்தரவில் கையொப்பம் இடுவார்கள்.* இந்த நடைமுறைகள் கூட தெரியாத பட்டதாரிகள் போலியான நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். போலி நபர்களும் பணி நியமன ஆணை வாங்கிய பிறகு தலைமறைவாகி விடுகின்றனர். ஏமாந்த நபர்கள் அந்த நபர்கள் குறித்து போலீசில் புகார் தெரிவிப்பதும் இல்லை. இது குறித்து தொடக்க கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமியிடம் கேட்டபோது, இந்த உத்தரவுகள் அனைத்தும் போலியானவை, இது குறித்து போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசு முத்திரைகளை பயன்படுத்தி பட்டதாரிகளை ஏமாற்றும் கும்பலை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comments