குவிந்து கிடக்கும் குறுகிய கால படிப்புகள்

பட்டப்படிப்புகளைவிட டிப்ளமோ படிப்புகள் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதை நாம் கண்கூடாக அறியலாம். சில பயிற்சி படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் குறுகிய காலத்தில் நல்ல பயன்களைத் தந்துவிடும். கல்லூரியில் படிக்கும்போதே சில பயிற்சி படிப்புகளையும், டிப்ளமோ படிப்புகளையும் பகுதிநேரமாக படித்துவிட முடியும். பல படிப்புகளை வயது வித்தியாசம் இன்றி படிக்க முடியும். அவை நீங்கள் விரும்புத் துறையில் வேலைவாய்ப்பை பெற்றுவிடவும், சுயதொழில் தொடங்கவும் கைகொடுக்கும். இப்படி சிறந்த பயன்களை வழங்கும் குறுகிய கால படிப்புகள், பல துறைகளிலும் குவிந்து கிடக்கின்றன. அவற்றைப் பற்றி சிறிது பார்ப்போம்...

 உணவுத்துறை நுட்பங்களை கற்றுத் தரும் கேட்டரிங், மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட், ஹவுஸ் கீப்பிங், வணிக நிர்வாகத்தை சொல்லித் தரும் பிஸினஸ் மேனேஜ்மென்ட், மருத்துவமனை நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாஸ்பிடலிட்டி அண்ட் ஏவியேசன், ஓவியக் கலையை கற்றுத் தரும் பைன் ஆர்ட், கட்டிடங்களின் உள் அலங்காரங்கள், வடிவமைப்பை கற்றுத் தரும் இன்டீரியர் டிசைனிங், கணினி மென்பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ளும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் மற்றும் பலவித கணினி சான்றிதழ் படிப்புகள் குறிப்பிடத்தக்க குறுகிய கால படிப்புகளாகும்.

 மாஸ் கம்யூனிகேசன், ஜர்னலிசம், ஆர்.ஜே., சவுண்ட் ரெகார்டிங், புராட்காஸ்ட் ஜர்னலிசம், எடிட்டிங் அண்ட் புரொடக்சன், பிலிம் மேக்கிங் அண்ட் டைரக்சன், ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் போன்றவை ஊடகத் துறை சார்ந்த குறுகிய கால படிப்புகளாகும். இவையும் நல்ல வாய்ப்புகளைக் கொண்டது. விரைவில் முன்னேற்றம் தரக்கூடியது.

 பேச்சாற்றல் மூலம் சாதிக்கும் டெலிபோன் மார்க்கெட்டிங், படிப்பானது மிக குறுகிய காலத்தில் படிக்கக் கூடியதாகும். சில நிறுவனங்களில் பகுதி நேரமாக கூட பயிற்சி பெறலாம். எங்கும் நிரம்பி கிடக்கும் கால்சென்டர்கள், ரியல் எஸ்டேட் துறை மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் டெலி மார்க்கெட்டிங் தெரிந்தவர்களுக்கு வெகுசீக்கிரம் வேலைவாய்பு கிடைக்கும்.

 பேஷன் டெக்னாலஜி துறையில் மோல்டு மேக்கர், டூல் மேக்கர், டெக்ஸ்டைல் டிசைனிங், புட்வேர் மேக்கிங், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி என பலவிதமான வடிவமைப்பு டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இவை சுயவேலைவாய்ப்பும், பலதுறை வேலைவாய்ப்புகளையும் கொண்டது.

 டிரான்ஸ்லேட்டர் டிப்ளமோ படிப்பு நல்ல மதிப்புமிக்க பணியாகும். கணினி தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் முழுக்க மொழிபெயர்ப்பாளர் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. பன்மொழித் திறன் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு நிறைய உள்ளன.

 மருத்துவ துறையில் நர்சிங், லேப் டெக்னீசியன், பிசியோதெரபி, ரேடியோலஜி, மெடிக்கல் லேப் டெக்னீசியன், ஆப்தோமெட்ரி, பார்மஸி உள்ளிட்ட ஏராளமான டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இவையும் எளிதில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரக்கூடியதாகும்.

 பொறியியல் துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகளும் எராளம் உள்ளன. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், ஐ.டி. போன்ற படிப்புகளும், மிக குறுகிய காலம் கொண்ட ஐ.டி.ஐ. படிப்புகளான பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், கார்பெண்டர், ஏ.சி. மெக்கானிக் உள்ளிட்ட பல படிப்களும் நல்ல வேலைவாய்ப்பும், சுயதொழில் வாய்ப்பும் கொண்டதாகும்.

 வணிகம் மற்றும் வர்த்தக துறையில் பேங்கிங், இண்டஸ்ட்ரியல் அக்கவுண்டன்சி, பினான்சியல் அக்கவுண்டிங், போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் போன்ற பல படிப்புகள் வாய்ப்பு மிகுந்தவையாகும்.

ஏதேனும் ஒரு துறையில் படித்துக் கொண்டிருப்பவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், சுயதொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்கள் போன்றோர் தங்களுக்கேற்ற பயிற்சிப் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்பை படித்து தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.


Comments