மதுரையில் அமைகிறது ‘எய்ம்ஸ்’ மத்திய அரசின் முடிவு ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல்

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code
17 மாவட்டங்கள், 3 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் மதுரையில் அமைகிறது ‘எய்ம்ஸ்’ மத்திய அரசின் முடிவு ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல் எஸ். ஸ்ரீனிவாசகன் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை யில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என, 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக் குழு நேரில் பார்வையிட்டது. இதில் மதுரைதான் ‘எய்ம்ஸ்’ அமைக்க தகுதியான இடம் என தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக அரசியல் சூழல் காரணமாக அறிவிப்புடன் நின்று போனது. பின்னர் தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமைக்க தமிழக முதல்வர் பிரதமரிடம் மனு அளித்தார். இதனால் மீண்டும் எங்கே அமைப்பது என்ற பிரச்சினை பெரிதானது. மத்திய அரசின் தேர்வுக் குழு மீண்டும் 5 இடங்களையும் துணைக் குழு அமைத்து ஆய்வு நடத்தியது. இதில், ஒவ்வொரு வசதிக்கும் தனியாக மதிப்பெண் அளிக்கப்பட்டு தேர்வு நடந்துள்ளது. 4 வழிச் சாலை, ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம், விசாலமான இடவசதி, அதிக மக்கள் பயன்பெறுவது உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு மதுரைக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க, மதுரை அருகே தோப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதுகுறித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இயக்குநர் சஞ்சய்ராய், தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: மதுரை மாவட்டம், தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மாநில அரசு 4 திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மருத்துவ மனை அமையும் இடத்துடன் 4 வழிச்சாலையை இணைக்க வேண்டும். 20 மெகாவாட் மின் வசதி, போதிய குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். குறைந்த உயரத்தில் செல்லும் மின் இணைப்பு கம்பங்களை மாற்று வழித் தடத்துக்கு கொண்டு செல்வது, எண்ணெய் குழாய் பதித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் ‘எய்ம்ஸ்’ கட்டுமானம் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், மதுரைக்கு எய்ம்ஸ் வருவது உறுதியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Comments