‘காலா’ வில்லன் பற்றிய கலக்கல் தகவல்கள்

‘காலா’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பவர், நானா படேகர். இவர் நடிகர் மட்டுமின்றி இயக்குனர், பாடகர்... போன்ற பல பொறுப்புகளிலும் அசத்தியிருக்கிறார். தமிழில் அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் கோபக்கார இயக்குனராக வாழ்ந்தவரும் இவரே. இப்படி நானாவின் பன்முக தன்மையை சொல்லிக்கொண்டே இருக்கலாம். ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ‘சைலன்டாக’ நுழைந்து, காலாவில் வைலன்டான வில்லனாக மாறியிருக்கும் நானா படேகர் பற்றிய சில தகவல்கள் இதோ...!

* நானா படேகரின் முழுப்பெயர் விஷ்வநாத் படேகர். இவர் மகாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் மும்பையில் இருக்கும் சர். ஜே.ஜே. இன்ஸ்டிடியூட் ஆப் அப்லைட் ஆட்ஸ் கல்லூரியில் படித்தார்.

* இவரது முதல்படம் கமான். பாலிவுட் படமான இது 1978-ம் ஆண்டு வெளிவந்தது. இதைத்தொடர்ந்து மோரே (1987), சலாம் பாம்பே (1988) ஆகிய படங்களில் நடித்தார். இருப்பினும் இவர் நடித்த ‘பரிந்தா’ திரைப்படம், இவருக்கான தனி அடையாளத்தை உருவாக்கியது.

* இவர் பாலிவுட் படங்களில் மட்டுமின்றி, பலமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக மராத்தி மொழியில் இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

* நடிப்பது மட்டுமின்றி பாடுவது, திரைப்படம் இயக்குவது, பிரபல நடிகர்களுக்கு டப்பிங் பேசுவது... என சினிமாவில் இருக்கும் அத்தனை அம்சங்களையும் செய்து முடித்திருக்கிறார். குறிப்பாக யஷ்வந்த், வஜோத், அனாச் போன்ற படங்களில் இவர் பாடிய, பேசிய விதம், பலரது பாராட்டுகளையும் பெற்றுக்கொடுத்தன.

* இவர் நடித்த கிரந்த்வீர் (1995) திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பரிசளித்தது. மேலும் பரிந்தா (1990), அக்னி சாக்‌ஷி (1997) போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததற்காக, தேசிய விருதும் வாங்கியிருக்கிறார்.

* இவர் பிரகார் என்ற படத்தை இயக்கி, நடித்திருக்கிறார். தனது திரைக்கதை என்பதாலும், இயக்குனராக தடம் பதிக்கும் முதல் படம் என்பதாலும், அதில் சிறப்பாக நடிக்க பல்வேறு கட்ட முயற்சிகளில் இறங்கினார். அதில் ஒன்றுதான் ராணுவ பயிற்சி. ஆம்...! பிரகார் திரைப்படத்தில் மிடுக்கான ராணுவ அதிகாரியாக நடிக்க, இந்திய ராணுவத்தில் 3 வருட பயிற்சி எடுத்துக்கொண்டார். அதனால் திரைப்படத்தில் உயிரோட்டமாக நடித்ததுடன், ராணுவத்தின் கவுரவ கேப்டன் பொறுப்பையும் தக்கவைத்திருக்கிறார்.

* நானாவிற்கு சமைப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால் தன்னுடைய நண்பர்களுக்கு அடிக்கடி சமையல் விருந்து வைப்பார். சில சமயங்களில் தன் கையால் ஊட்டியும் விடுவாராம். இவர் சிறந்த துப்பாக்கி சுடு வீரரும்கூட. அதனால் ஜி.வி.மவ்லாங்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றார்.

* படங்களில் ஒப்பந்தமாகி, பாதி நடித்த நிலையில் திடீரென அந்த படத்திலிருந்து வெளியேறுவது நானாவிற்கு பழக்கப்பட்ட ஒன்றாம். ஏனெனில் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மதிப்பு குறைந்தாலோ, பாதியில் திரைக்கதை மாற்றப்பட்டாலோ, அதிலிருந்து நானா வெளியேறிவிடுவார். அதனால் நானாவிடம் கதை சொல்லும்போதே, முழு ஸ்கிரிப்டையும் காண்பித்துவிடுவார்களாம்.

* ஆரம்பத்தில் இருந்து இன்று வரை நானா, தான் விரும்பும் கதாபாத்திரங்களை மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தால், அதே வருடத்தில் 30 படங்களை ஓரங்கட்டியிருப்பாராம். அந்தளவிற்கு அழுத்தமான, முக்கியத்துவமான கதைகளும், கதாபாத்திரங்களும் மட்டுமே நானாவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

* அக்னி சாக்‌ஷி மற்றும் கமோஷி திரைப்படங்களில் நானா படேகரும், மனிஷா கொய்ராலாவும் ஒன்றாக நடித்தனர். அந்தசமயங்களில் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. அதை இருவரும் மறுக்கவில்லை. அதேசமயம் அது உண்மையான தகவல் என்று உறுதிப்படுத்தவும் இல்லை. ஏனெனில் இவர்களது காதல் பாதியிலேயே முறிந்துவிட்டதாக, பாலிவுட் வட்டாரம் கிசுகிசுத்தது. அதற்கு நானா படேகரின் கோபம் முக்கிய காரணமாக அமைந்தது.

* நல்ல நடிகராக அறியப்படும் நானா படேகர், ‘பாலிவுட்டின் ஆங்கிரி மேன்’ எனவும் அறியப்படுகிறார். இவருக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருமாம். அதனால் எவ்வளவு பெரிய இயக்குனர்களாக இருந்தாலும், நானாவிடம் செல்கையில் கொஞ்சம் வளைந்து கொடுக்கவேண்டும் என்கிறது, திரைத்துறை வட்டாரம்.

* பரிந்தா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாகி கொண்டிருக்கையில், இயக்குனர் கொஞ்சம் கவனக்குறைவாக நடந்து கொண்டாராம். அதை உதவி இயக்குனர்களே கண்டுகொள்ளாத நிலையில் ஆங்கிரி மேனான நானா பொங்கி எழுந்திருக்கிறார். அந்த சம்பவத்தில் இருந்து, நானாவிடம் இயக்குனர்கள் கவனமாக நடந்து கொள்வார்களாம்.

* காலா பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், நானாவை பற்றி பெருமையாக பேசியிருந்தார். ‘‘நானாவை கையாளுவது கடினமானது. ஆனால் இயக்குனர் ரஞ்சித் கச்சிதமாக கையாண்டிருக்கிறார். காலாவில் வில்லனாக அவர் நடிக்க தயாரானதும், எனக்கும் மஜாவாகிவிட்டது. ‘வா, ஒரு கை பார்த்துவிடலாம்’ என்ற முடிவுடன் குஷியாக நடித்தேன்’’ என்று சூப்பர் ஸ்டார் பேசியது, நானாவின் சிறப்பை உணர்த்துகின்றன.

* இன்று பல நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை கோடிகளில் நிர்ணயித்திருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்ட பெருமை, நானாவையே சேரும். ஆம்...! சல்மான், ஷாருக்கான்... போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் சில லட்சங்களை சம்பளமாக வாங்கிய காலத்திலேயே, நானா கோடியை சம்பளமாக கேட்டாராம். இவரது நடிப்பு திறமை, கோடி ரூபாய் சம்பளத்தையும் சம்மதிக்க வைத்தது என்கிறார்கள், பாலிவுட்வாசிகள்.

*ஆடம்பர வாழ்க்கை வாழும் சந்தர்ப்பம் இருந்தும், அதை மறுப்பதுதான் நானாவின் ஸ்டைல். அவருக்கு எத்தனை கோடி சம்பளம் கிடைத்தாலும், முன்பிருந்த பழைய வீட்டிலேயே காலம் தள்ளுகிறார். ஒரு படுக்கை அறை கொண்ட அடுக்குமனை என்றாலும், அது தன்னுடைய அம்மாவிற்கு பிடித்த வீடு என்பதால்... அங்கேயே வாழ்க்கையை கழிக்கிறார்.

* நானாவிற்கு மல்ஹர் என்ற மகன் இருக்கிறார். அவரும் பாலிவுட் நடிகரே. ஆனால் மல்ஹரை பாலிவுட் நடிகராக உருவாக்கிய பெருமை, நானாவை சேராது. ஏனெனில் தன்னுடைய உதவி மகனின் கடின உழைப்பை கெடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதனால் மல்ஹர் கடும் போராட்டத்திற்கு பிறகே பாலிவுட்டில் நுழைந்தார்.

* மனைவி நீலாகாந்தியை விவாகரத்து செய்துவிட்டு தனிமையில் வாழும் நானாவிற்கு ஆதரவாக இருப்பது, சமூக சேவைதான். ஆம்..! சூட்டிங் நேரம் போக மீதமிருக்கும் நேரத்தை விவசாயிகளுடன் செலவழிக்கிறார். விவசாயிகளை சந்தோஷப்படுத்துவது என்றால் நானாவிற்கு கொள்ளை பிரியம். அதற்காக தன்னுடைய சொத்தில் பெரும் பகுதியை விவசாயிகளுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

* ‘நாம்’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் விவசாயிகளுக்கு நல உதவிகளையும், நன்கொடைகளை வழங்கி வருகிறார். விவசாய கடன் செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்தபோது, ‘தற்கொலை செய்யாமல் என்னிடம் வாருங்கள். நான் உதவுகிறேன்’ என்று விவசாயிகளை தேற்றிய பெருமை, நானாவையே சாரும். சொன்னதை போன்று செய்தும் காண்பித்தார்.

Comments