ஒளிமிக்க ஓவியக்கலைப் படிப்புகள்

ஒப்புமை இல்லாத உயர்ந்த கலைகளில் ஒன்று ஓவியக் கலை. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு வடிவம் தந்தது ஓவியக் கலையே. வணங்கும் தெய்வங்களுக்கு வடிவம் தந்தது ஓவியர்களே. கண்ணால் காண முடியாத உடல் உள் உறுப்புகள், நுண்ணுயிரிகள் அனைத்தையும், அனைவரும் அறியும் வகையில் வடிவம் தந்து கண்முன் நிறுத்துவதும் ஓவியங்களே. கணினி யுகமான இந்தக் காலத்திலும் சித்திரங்களுக்கு மங்காத இடம் உண்டு. ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் மதிப்பீடு உள்ளதுபோல, வடிவமைப்புத் திட்டங்கள் அனைத்திற்கும் முதலில் ஓவியங்களே உருக்கொடுக்கும். விமானம் டாவின்சியின் ஓவியத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டதே. நாம் ரசிக்கும் கற்பனை கதாபாத்திரங்களும், நாம் பயன்படுத்தும் கணினியும், கார்களும், பைக்குகளும்கூட முதலில் ஓவியங்களாக உருப்பெற்றுதான் பின்னர் வடிவங்களாக வார்க்கப்படுகிறது. எனவே ஓவியக்கலை என்பது பொழுதுபோக்கு கலையல்ல. வீட்டின் வரவேற்பறை தொடங்கி விண்வெளி, மருத்துவம், பொறியியல், வடிவமைப்பு என எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நிற்கிறது ஓவியக்கலை. இதை ஒரு படிப்பாக படிப்பது மனமகிழ்ச்சியுடன் மன நிறைவான வாழ்க்கைப் பாதையையும் உருவாக்கித் தரக்கூடியது. ‘பைன் ஆர்ட்’ எனப்படும் ஓவியக் கலையில் உள்ள படிப்புகளையும், அதை கற்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் காண்போம்... நல்ல கற்பனை வளமும், புதுமையான படைப்பாற்றலும் கொண்டவர்களுக்கானது ஓவியக்கலை படிப்புகள். ஓவியம் வரைய கற்றுக் கொள்ளும்போதே மனதில் அமைதி தழுவும், பொறுமையுடன், சுறுசுறுப்பும், பன்முக ஆற்றலும் அதிகரிக்கும். அனைவருக்கும் இந்த அமைதியும், பொறுமையும், சுறுசுறுப்பும் வேண்டும் என்பதால் ஓவியத்தை பொழுதுபோக்காக கற்பதை சிறுவயதில் இருந்தே பெற்றோர் ஊக்குவிப்பது உண்டு. இதை தனி படிப்பாக படிக்கும்போது ஒவ்வொருவருக்குள்ளும் இந்த ஆற்றல்கள் பெருகும் என்பதால் மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். படித்த பின்பு பிரகாசமான வாய்ப்புகளையும் பெறலாம். ஓவியக் கலையில் டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் உள்ளன. டிப்ளமோ (பைன் ஆர்ட்ஸ்) படிப்பு ஓராண்டு படிப்பாகவும், இரண்டாண்டு படிப்பாகவும் வழங்கப்படுகிறது. பி.எப்.ஏ. எனப்படும் இளங்கலை ஓவியம், பி.வி.ஏ. எனும் ‘விசுவல் ஆர்ட்’ ஓவியப்படிப்பு போன்றவை 4 மற்றும் 5 ஆண்டுகளைக் கொண்ட பட்டப்படிப்புகளாகும். 3 ஆண்டு காலம் கொண்ட பி.ஏ. ஓவியப்படிப்பும் உள்ளது. எம்.ஏ. (ஆர்ட்), எம்.எப்.ஏ. மற்றும் எம்.வி.ஏ. போன்ற பட்ட மேற்படிப்புகள் 2 ஆண்டுகள் கொண்டது. ஸ்டூடியோ ஆர்ட், ஜூவல்லரி ஆர்ட், மல்டிமீடியா ஆர்ட், பெயிண்டிங், ஸ்கல்ப்சர், டெக்ஸ்டைல் ஆர்ட், மார்டன் ஆர்ட் , ஆர்ட் ஹிஸ்ட்ரி, ஆர்ட் மேனேஜ்மென்ட் என பலபுதுமையான ஓவியப் படிப்புகள் ஆன்லைன் படிப்புகளாக வழங்கப்படுகின்றன. மேற்சொன்னதுபோல ஓவியம் அனைத்து துறைகளிலும் பங்களிப்பு செய்வதால் ஏராளமான துறைகளில் வேலைவாய்ப்பு பெற முடியும். குறிப்பாக பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள், அரசு செய்தித் துறை, தகவல் தொடர்புத் துறை, மருத்துவத் துறை, சினிமாத் துறை, சுற்றுலாத்துறை, ஜவுளித்துறை, பொறியியல் வடிவமைப்புத் துறை, பலதுறை ஆராய்ச்சிப் பிரிவுகள் என பல்வேறு இடங்களிலும் வேலைவாய்ப்பு பெற முடியும். பள்ளி - கல்லூரிகளில் ஓவிய ஆசிரியர், பேராசிரியராகவும் பணியாற்றலாம். பொழுதுபோக்காக ஓவியங்கள், கலைச் சிற்பங்களை உருவாக்கி கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கலாம். இதன் மூலமும் பணமும், புகழும் குவியும். அடுத்து என்ன படிக்கலாம்? என்ற யோசனையில் இருப்பவர்கள் ஓவியக்கலை படிப்புக்கும் முக்கியத்துவம் தரலாம்!

Comments