வரி ஏய்ப்பு விவரங்களை கண்டுபிடிக்க மென்பொருட்கள் ஜிஎஸ்டிஎன் நிறுவனம் தகவல்

வரி ஏய்ப்பு விவரங்களை கண்டுபிடிக்க மென்பொருட்கள் உருவாக்கப்படும் என ஜிஎஸ்டிஎன் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் உயர் அதிகாரிகள் கூறுகையில், அநேகமாக இந்த ஆண்டு வரித் தாக்கல் நடைமுறைகளில் இருந்து இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று கூறினர். மேலும் வரி தாக்கல் செய்பவர்கள் அளித்துள்ள விவரங்களில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருந்தால் அதைக் கண்டுபிடிக்க வரித் துறை அதிகாரிகளுக்கு இந்த மென்பொருட்கள் உதவும். இதற்கான கருவிகளை ஜிஎஸ்டிஎன் நிறுவனம் உருவாக்கி வருகிறது என்று குறிப்பிட்டனர். ஒவ்வொரு மாதமும் வரித் தாக்கல் செய்ய அனுமதிப்பது மற்றும் வரி வசூல் செய்யும் நடைமுறையை ஜிஎஸ்டிஎன் கடந்த 11 மாதங்களாக செய்து வருகிறது. இந்த நிலையில் வரி ஆவணங்களை ஆராய தொழில்நுட்பத்தினை கொண்டுவர உள்ளது. இது தொடர்பாக ஜிஎஸ்டிஎன் தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ் குமார் கூறுகையில், நிறுவனம் அடுத்த கட்டமாக தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்கான முனைப்புகளில் உள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டிஎன் தளத்தில் பயனர்களுக்கு எளிதான சேவை கிடைக்கும். தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் வரித் தாக்கல், தணிக்கை, மேல்முறையீடுகள் போன்றவை மேம்படும் என்றார். விவரங்களை பகுப்பாய்வு செய்வதற்கான திட்டமிடலில் உள்ளோம். வரித் தாக்கல் ஆவணங்களில் உள்ள எளிய வேறுபாடுகளை ஆராயும் பணிகளை ஏற்கெனவே தொடங்கி விட்டோம். ஜிஎஸ்டிஎன் தளத்திலிருந்து மாநில அளவிலான தகவல்களை திரட்டியுள்ளோம். வரித் தாக்கலில் உள்ள வேறுபாடுகளை உடனடியாக சரி செய்வதற்கு ஏற்ப வரிதாரருக்கு அருகில் உள்ள வரி அலுவலகத்தின் அடிப்படையில் விவரங்களை ஆராய்கிறோம் என்றார். தற்போது தகவல் பகுப்பாய்வு செய்யும் வரி அதிகாரிகளுக்கான உதவிகளை மட்டும் அளிக்கிறோம். விரைவில் இதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை அளிக்க உள்ளோம். அடுத்த சில மாதங்களில் இதற்கான மென்பொருட்களை கொண்டுவந்து விடுவோம். என்றார் ஜிஎஸ்டி தாக்கல் நடைமுறைக்கு வந்த பின்னர் ஜிஎஸ்டிஎன் நிறுவனம் 11.5 கோடி வரித் தாக்கல் கணக்குகளை கையாண்டுள்ளது. 1.11 கோடி வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளனர். -பிடிஐ

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments