எஸ்யுவி அறிமுகம் மூலம் இந்திய சந்தையில் நுழையும் பிஎஸ்ஏ

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code
சொகுசு கார்களைத் தயாரிக்கும் பிரான்ஸின் பிஎஸ்ஏ குழும நிறுவனம் இந்தியாவில் எஸ்யுவி மாடல் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தனது பிரபல மாடலான சிட்ரோன் கார்களை இறக்குமதி செய்து சென்னையில் உள்ள ஆலையில் அசெம்ப்ளி செய்து விற்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்திய சந்தைக்கென சிட்ரோன் சி84 மாடல் அல்லது சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல் கார் ஏற்கெனவே சந்தையில் உள்ள ஜீப் கம்பாஸ், ஹூண்டாய் டக்ஸன், ஸ்கோடா அறிமுகம் செய்ய உள்ள காரோக் மாடல் கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று இந்நிறுவனம் கருதுகிறது. இந்தியாவில் தங்களது நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் முன்னேற்றம் கண்டு வருவதாக பிஎஸ்ஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக முன்னணி நகரங்களில் பிஎஸ்ஏ எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் (விற்பனையகங்கள்) அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை 4 ஆண்டுகளில் 100 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்திய சாலைகளுக்கு ஏற்ப ஸ்மார்ட் கார்களைத் தயாரிப்பது மற்றும் எஸ்யுவி, செடான் ரகங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் இந்நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது . இந்திய வாடிக்கையாளர்களின் மனோ நிலையை ஆராய்ந்து அறிந்து அதற்கான திட்ட அறிக்கையை அளிக்குமாறு டிசிஎஸ் நிறுவனத்துடன் பிஎஸ்ஏ ஒப்பந்தம் செய்துள்ளது. மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு போட்டியாக அதிக எண்ணிக்கையில் கார்களை தயாரிப்பதுதான் இந்நிறுவனத்தின் எதிர்காலத் திட்டமாகும். ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியாக பணியாற்றிய சௌரப் வத்ஸா மற்றும் டாடா மோட்டார்ஸைச் சேர்ந்த ஆஷிஷ் சாஹ்னி மற்றும் பிரசாத் பன்ஸல்கர் ஆகியோர் ஏற்கெனவே இந்நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இந்திய சாலைகளில் பிரான்ஸின் பிஎஸ்ஏ வாகனங்கள் விரைவில் சீறிப் பாயும் என்றே தோன்றுகிறது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments