நோட்டீஸ் அனுப்பிய பிறகும் திருத்திய வரி படிவம் தாக்கல் செய்தால் சலுகை உண்டு வருமான வரி தீர்ப்பாயம் உத்தரவு

வருமான வரி தாக்கல் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பிய பிறகு திருத்தப்பட்ட வரித் தாக்கல் செய்யப்பட்டால், அதில் வரிச் சலுகை இருப்பின் அதை வருமான வரி செலுத்துவோருக்கு வழங்க வேண்டும் என்று வருமான வரி தீர்ப்பாயம் (ஐடிஏடி) தெரிவித்துள்ளது. இருப்பினும் வருமான வரித் தாக்கல் செய்யும் காலத்திற்குள், வரிதாரர் தனது வரி படிவத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வருமான வரி தீர்ப்பாயம் ஜூன் 20-ம் தேதி அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதில் ஏதேனும் தவறு செய்திருந்தால் குறிப்பாக வருமானத்தை சரியாகக் குறிப்பிடாவிட்டாலோ அல்லது வரிக் கழிவு கோரியிருந்தாலோ பிரிவு 139 (5)-ன் கீழ் வருமான வரி சட்டத்தின்படி திருத்தப்பட்ட வரித் தாக்கல் செய்யலாம். அதாவது தவறுகளை திருத்தி புதிதாக தாக்கல் செய்யலாம். தற்போது திருத்தப்பட்ட வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், கெடு தேதியிலிருந்து 12 மாதங்கள் அல்லது நிதி ஆண்டில் வருமான வரி மதிப்பீடு செய்வதற்கான கடைசி நாளுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இவ்விரண்டில் எது முதலில் உள்ளதோ அதுவே கடைசி நாள் என உள்ளது. மகேஷ் ஹிந்துஜா என்பவரின் ஆண்டு வருமானம் ரூ.4.91 லட்சமாகும். இவர் 2010-11-ம் நிதி ஆண்டில் வரி தாக்கல் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட வரித் தாக்கலில் தனது ஆண்டு வருமானம் ரூ.6.24 லட்சம் என குறிப்பிட்டதோடு நீண்ட கால முதலீட்டு திட்ட ஆதாயம் ரூ. 50 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் அவர் ரூ.1.15 கோடி முதலீட்டில் புதிய வீட்டை வாங்கியுள்ளார். அதில் வருமான வரி பிரிவு 54-ன் கீழ் விலக்கு கோரியிருந்தார். அதாவது மூலதன ஆதாயத்துக்கு வரி விலக்கு கோரியிருந்தார். வருமான வரி பிரிவின்படி குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு வீட்டில் முதலீடு செய்திருந்தால் அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு வரி விதிப்புக்குட்படாது. எஞ்சிய தொகை மட்டுமே நீண்ட கால ஆதாயத்தின் கீழ் வரி விதிப்புக்குட்படும். ஒருவேளை நீண்ட கால ஆதாய தொகை மற்றும் வீட்டில் செய்யப்பட்ட முதலீடு சமமாக இருந்தால் நீண்ட கால ஆதாய தொகைக்கு வரி விலக்கு பெறும். இதை உறுதி செய்ய வருமான வரி செலுத்துவோர் அதை சரிவர குறிப்பிடாமலிருந்தோலோ அல்லது வருமானத்தை குறைத்து காட்டியிருந்தாலோ வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி கூடுதல் ஆதாரங்களைக் கோரலாம். இந்நிலையில் வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியவுடன் ஹிந்துஜா வரி தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வரி விலக்கு அளிக்க முடியாது என வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். திருத்தப்பட்ட படிவத்தில் தனக்குக் கிடைத்த கூடுதல் வருமானத்தை ஹிந்துஜா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நீண்ட கால ஆதாயத்தையும் குறிப்பிட்டுள்ளார். அவர் பிரிவு 54-ன் கீழ் விலக்கு கோரியுள்ளார். அதை வரித்துறையினர் மறுத்துள்ளனர் என ஐடிஏடி குறிப்பிட்டதோடு, அதிகாரிகள் குறிப்பிட்ட வழிமுறையின்படி அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments