கேந்திர வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இனி விமானப் பயணம் மத்திய அரசு அனுமதி

பொது அறிவு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள், விமானத்தில் பயணம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதிலும் நடைபெறும் விளையாட்டு, பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக, மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் இதுவரை ரயில்களில் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில், இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் இனி விமானத்தில் பயணம் செய்வதற்கான அனுமதியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளித்ததுள்ளது. அதேசமயத்தில், இந்த விமானப் பயணத்துக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து, மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச் சக வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டணமானது, விமானக் கட்டணத்தைக் காட்டிலும் சில ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே குறைவாக உள்ளன. மேலும், விமானத்தில் பயண நாட்களும் குறைவதால், மாணவர்களுக்கு வழங்க வேண்டி நாள் படியும் அரசுக்கு மிச்சமாகும். எனவே, இந்த விமானப் பயணங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது எனத் தெரிவித்தனர். இந்த விமானப் பயணத்துக்காக, தேசிய அளவில் ஓர் இணையதளமும் உருவாக்கப்பட்டு அதில் அனைத்து வகை விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விமானப் பயணத்துக்கான அனுமதி, மத்திய அரசின் ஜவஹர் நவோதயா வித்தியாலயா பள்ளிகளுக்கும் கிடைக்கவுள்ளது. எனினும், அப்பள்ளி மாணவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments