‘நீட்’ தேர்வு விவகாரம்: மாணவர்களின் தற்கொலையை பயன்படுத்தி ஆதாயம் தேடுவதா? அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் தற்கொலையை பயன்படுத்தி ஆதாயம் தேடுவதா? என்று அரசியல் கட்சிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த ஆண்டு அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இதேபோன்று மாணவி கிருத்திகா என்பவரும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ‘நீட்’ தேர்வை மாணவர்கள் பயமின்றி எதிர்கொள்ளவும், தேர்வு முடிவுக்கு பின்பு தற்கொலை போன்ற முடிவுகளை மாணவர்கள் எடுப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. ‘நீட்’ தேர்வு தொடர்பாக கடந்த ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாததால் தான் இந்த ஆண்டும் மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர் என்று கூறி வக்கீல் சூரியபிரகாசம் தமிழக அரசு மீது சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், ‘மாணவர்களுக்கு நீட் தேர்வு சம்பந்தமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தேர்வுகளை மாணவர்கள் எளிதாக அணுக பல்வேறு முயற்சிகளை அரசு படிப்படியாக எடுத்து வருகிறது. எதிர்பாராதவிதமாக தற்கொலை சம்பவம் நடைபெறுகிறது. இதற்கு அரசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது’ என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது துரதிருஷ்டவசமானது என்று அரசியல் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘மாணவர்களுக்கு முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது. மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லகூடாது. இதை தடுக்க வேண்டியது சமுதாயத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு’ என கருத்து தெரிவித்தார். பின்னர், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்திற்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Comments