வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வட கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளது. இது தற்போது வங்கதேசம் கடலோரப் பகுதி அருகே மையம் கொண்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தரைக்காற்று சற்று பலமாக வீசக்கூடும். இதற்கிடையில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை ஆகிய இடங்களில் தலா 7 செமீ, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Comments