குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை

குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை அளிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- வட்டி விதிப்பு 1919-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் சொத்துவரி செலுத்தும் வரி செலுத்துனருக்கு வரி செலுத்தியதற்காக ஊக்கத்தொகை வழங்குவதற்கும், உரிய காலத்திற்குள் வரியை செலுத்தாதவர்களுக்கு வட்டியை விதிப்பதற்கும் தற்போது வழிவகை இல்லை. 4-வது மாநில நிதி ஆணையமானது சொத்துவரியை காலந்தாழ்த்தாமல் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கும், கூறப்பட்ட வரியை காலந்தாழ்த்தி செலுத்துபவர்களுக்கு வட்டி விதிப்பதற்கான அவசியத்தை ஆய்வு செய்வதற்கு அரசுக்கு பரிந்துரைகள் செய்துள்ளது. அரசானது அந்த பரிந்துரைகளை கவனமுடன் ஆய்வு செய்த பின்பு, ஏற்றுக்கொள்வதென முடிவு செய்துள்ளது. அதன்படி அரசானது தமிழ்நாடு சட்டம் 4-1919-யை திருத்தம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் மேலும் இந்த சட்ட மசோதாவில், ‘உரிய தேதிக்கு பின்னர் சொத்துவரி செலுத்தப்படாமல் இருந்தால், செலுத்த வேண்டிய தொகையுடன், 2 சதவீதத்திற்கு மிகை இல்லாத தனி வட்டி செலுத்த வேண்டும். எந்தவொரு சொத்துவரி செலுத்துபவரும் அரையாண்டு தொடக்க தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்துகிறாரோ அவருக்கு நிகர சொத்து வரி செலுத்தும் தொகைக்கு 5 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். இந்த சட்டத்திருத்தம் 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டம் என்று அழைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments