508 பேருக்கு பணி நியமன ஆணை

நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் 2 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமன ஆணை மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மண்டலங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர் மற்றும் உதவுபவர்களாக பணிபுரிந்து வரும் 488 பணியாளர்களுக்கு நிரந்தர காலிப்பணியிடங்களான பட்டியல் எழுத்தர் நிலையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மொத்தம் 508 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments