வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு முன்னாள் எம்எல்ஏ, மனைவி மகனுக்கு தலா 4 ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு முன்னாள் எம்எல்ஏ, மனைவி மகனுக்கு தலா 4 ஆண்டு சிறை. சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி, மகனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புளிச்சப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(67), கடந்த 1989 - 91ம் ஆண்டு மற்றும் 1996 - 2001ம் ஆண்டுகளில் வானூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். எம்எல்ஏவாக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையின்போது 131 ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களில் குறிப்பிட்ட பகுதிகள் மாரிமுத்துவின் பெயரிலும், மேலும் சில அவரது மனைவி துளசியம்மாள் மற்றும் மகன் பிரகாஷ் பெயரிலும் இருந்தன. இதைத்தொடர்ந்து ரூ.16,88,951 மதிப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து, அவரது மனைவி துளசியம்மாள் (60) மகன் பிரகாஷ் (36) ஆகியோர் மீது 2004-ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். விழுப்புரம் ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் அரசுத் தரப்பில் 60 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து, அவரது மனைவி துளசியம்மாள், மகன் பிரகாஷ் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments