டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்-மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு கவர்னர் முடிவுக்கு எதிர்ப்பு

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code
கவர்னர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வரும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்-மந்திரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளிருப்பு போராட்டம் டெல்லியில் நடந்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி கவர்னர் அனில் பைஜாலை கடந்த திங்கட்கிழமை மாலை, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். ஆனால், அந்த கோரிக்கைகளை கவர்னர் நிறைவேற்ற மறுத்ததாக கூறி, கவர்னர் அலுவலகத்திலேயே அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார். அவருடன் 3 மந்திரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் போராட்டம் நீடித்தது. இதற்கிடையே, ‘நிதி ஆயோக்’ நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்ற மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு கவர்னர் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மனைவியுடன் சந்திப்பு இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு 4 பேரும் சென்றனர். அங்கு அவருடைய மனைவியையும், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசினர். பிறகு, கெஜ்ரிவால் இல்லத்தில் 4 பேரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:- நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்து ஆதரவு தெரிவிக்க விரும்பினோம். ஆனால், வாய்மொழியாக அனுமதி மறுக்கப்பட்டது. கவர்னருக்கு கடிதம் எழுதினேன். கவர்னர் அங்கு இல்லை என்று பதில் வந்தது. கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கவில்லை. இது அரசியல் சட்ட சிக்கலாக மாறிவிட்டது. பிரதமர் உடனே தலையிட்டு இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரதமருடன் சந்திப்பு இதற்கிடையே, மேற்கண்ட 4 முதல்-மந்திரிகளும் ‘நிதி ஆயோக்’ குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அவருடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று நடத்த இருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

Comments