பணிக் காலத்தில் மரணமடையும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வரை நிதியுதவி சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு

பணிக்காலத்தில் மரணமடையும் பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.3 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார். சட்டப்பேரவையில் செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, கடந்தாண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும், 30 மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், ரூ.5,712 கோடியே 90 லட்சம் மதிப்பிலான 3,200 புதிய பணிகளுக்கு அடிக் கல் நாட்டப்பட்டது. மேலும், ரூ.5,127 கோடியே 11 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட 2,329 திட்டப்பணிகள் திறக்கப்பட்டன. இதுதவிர, ரூ.5,397 கோடியே 52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 8 லட்சத்து 11,481 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 521 புதிய அறிவிப்புகளையும் முதல் வர் வெளியிட்டார். மேலும், சென்னை காமராஜர் சாலையில் ரூ.2 கோடியே 52 லட்சத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடியே 80 லட்சத்தில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்படுகிறது. அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள வேதா நிலையம், ரூ.32 கோடி மதிப்பீட்டில், நினைவிடமாக மாற்றப்படுகிறது. கனவு நனவாகாது மாதிரி, மாதிரி என்று சிலர் இன்றைக்கு ஏதேதோ செய்கின்றனர். அவர்களையெல்லாம் மக்கள் ஒருமாதிரியாகப் பார்க்கின்றனர் என்பதை அவர்கள் உணர வேண்டும். மாதிரியை வைத்து காணும் கனவு என்றைக்கும் நனவாகாது.திரைத்துறையை நாடும்போது புகழ், பணம் என்ற கனவுகளோடு காலடி எடுத்து வைக்கின்றனர். புகழும், பணமும் சேர்ந்து இனி நடிப்பு போணியாகாது என்ற நிலை வரும்போது அரசியல், பதவி என்ற கனவுகளோடு அதிலிருந்து வெளியேறத் துடிக்கின்றனர். சினிமாவில் ஹீரோ வேஷம் கட்டுவதால் மட்டுமே ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. அறிவிப்புகள் பத்திரிகையாளர்கள் பணிக் காலத்தில் மரணமடையும்போது பணிபுரிந்த ஆண்டுகளுக்கு ஏற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்பட்டு வரும் குடும்ப நிதியுதவி, ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும். விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்பசுவாமிக்கு ரூ.20 லட்சத்தில் நினைவுத்தூண் அமைக்கப்படும். தியாகி சுப்பிரமணிய சிவாவின் கனவை நிறைவேற்ற, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ரூ. 1 கோடியே 50 லட்சத்தில் பாரதமாதா நினைவாலயம் அமைக்கப்படும். வள்ளுவர் கோட்டம் ரூ.85 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments