சேலம் மாவட்டத்தில் 18 கி.மீ. நிலம் அளவீடு ஹெக்டேருக்கு குறைந்தபட்சம் ரூ. 21.5 லட்சம் அதிகபட்சம் ரூ. 9.4 கோடி இழப்பீடு ஆட்சியர் ரோஹிணி தகவல்

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு நிலம் கொடுத்த ஷோபனா, பூங்கொடி, மணிமேகலை ஆகியோருக்கு ஆச்சாங்குட்டப்பட்டி, புதூர் கிராமத்தில் இலவச வீட்டு மனைக்கான பட்டாவை ஆட்சியர் ரோஹிணி வழங்கினார்.படம்: எஸ்.குரு பிரசாத் ‘ மாவட்டத்தில் பசுமை வழிச்சாலைக்காக குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு ரூ.21.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.9.4 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும்’ என ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் பசுமை வழிச்சாலை பணிக்காக எல்லையை வரையறை செய்து, முட்டுக்கல் நடும் பணி நடந்து வரு கிறது. இத்திட்டம் குறித்து பலரும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில் மேம்பாடு அடையும். பசுமை வழிச் சாலைக்கு நிலம் அளிப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஆட்சேபனை செய்கின்றனர். மற்றவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் 36.3 கி.மீ. தூரம் பசுமை வழிச் சாலை அமைகிறது. 186 ஹெக்டேர் பட்டா நிலம், 46 ஹெக்டேர் தரிசு நிலம், 16 ஹெக்டேர் வனப்பகுதி ஆகியவை பசுமை வழிச் சாலைக்கு கையகப்படுத்தப்படுகிறது. இதில் 853 பட்டாதாரர்கள் உள்ளனர். தற்போது வரை 18 கி.மீ. தொலைவு, 26 ஹெக்டேர் நிலம் அளவீடு செய்து, முட்டுக்கல் நடப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு மாற்றுப் பட்டா வழங்கி, அவர்களுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எட்டு வழிச் சாலையின் குறுக்கே யாரும் செல்ல முடியாது, சாலையின் இருபுறம் ஊர்களின் போக்குவரத்து துண்டிக்கப்படும் எனப் பல தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். அதுபோன்று இல்லை. கோயில், மசூதி, தேவாலயங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதற்கு மாற்று இடம், சாலை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்று, தமிழக முதல்வர் பழனிசாமி, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இருந்ததை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், கையகப்படுத்தும் இடத்தில் உள்ள வீடு, பண்ணை, கொட்டகை, கிணறு, பெட்டிக் கடை உள்ளிட்டவை மதிப்பீடு செய்து, உரிய இழப்பீடு வழங்கப்படும். ஹெக்டேருக்கு ரூ.21.5 லட்சம் குறைந்தபட்சமாகவும், சந்தை மதிப்புக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.9.4 கோடி வரையும் இழப்பீடு வழங்கப்படும். நிலம் அளிப்பவர்களின் வாரிசுகளுக்கு தொழில் கல்வி, தாட்கோ, வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments