அடல் பென்ஷன் திட்ட தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

அடல் பென்ஷன் திட்டத்தின் (ஏபிஒய்) ஓய்வூதிய தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அடல் பென்ஷன் திட்டத்தை 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. தங்களது வயதுக்கு ஏற்றார்போல் மாத பிரீமியம் தொகையை செலுத்தும் நபர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பென்ஷன் கிடைக்கும். இதுகுறித்து மத்திய நிதிச் சேவைத் துறை இணைச் செயலர் மதனேஷ் குமார் மிஸ்ரா கூறும்போது, “பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தும் திட்டத்தை பென்ஷன் நிதியம் மற்றும் ஒழுங்கு வளர்ச்சி ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) அனுப்பியுள்ளது. இந்தத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார். இதுதொடர்பாக பிஎப்ஆர்டிஏ தலைவர் ஹேமந்த் ஜி.கான்டிராக்டர் கூறும்போது, “இந்த திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலைக் கோரி உள்ளோம். அதிக பென்ஷன் தொகை பெறக்கூடிய பாலிசிகளை மக்கள் கேட்கின்றனர். அடுத்த 20-30 வருடங்களில் மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் பென்ஷன் தொகை என்பது போதுமானதாக இருக்காது. எனவேதான் பென்ஷன் தொகையை உயர்த்தும் திட்டத்தைக் கொண்டு வந்தோம். இதில் சேருவதற்கான அதிகபட்ச வயதை 40-லிருந்து 50 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1 கோடி பேர் சேர்ந்துள்ளனர்” என்றார். - பிடிஐ

Comments